காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)

This entry is part of 59 in the series 20041223_Issue

தமிழில் : நாகூர் ரூமி


====
என் தபால் பெட்டிக்குள் வந்து விழுகிறது காஷ்மீர்
சுத்தமான நாலுக்கு ஆறு இன்ச்சுகள் —
எனது வீடு.

சுத்தம் எப்போதுமே பிடிக்குமெனக்கு.
இப்போது நான் பிடித்திருக்கிறேன்
அரை இன்ச் இமயத்தை என் கைகளில்.

இது என் வீடு.
என் வீட்டுக்கு நான்
இதைவிட சிறந்த அண்மையில்
இருக்க முடியாது.

நான் திரும்பும்போது
நிறங்கள் இவ்வளவு ஒளிரப்போவதில்லை.
ஜீலம் நதியின் தண்ணீரும்
இவ்வளவு சுத்தமாக
இவ்வளவு ஆழ் நீலமாக இருக்காது.
என் பிரியம் வெளிப்படுத்தப்படுகிறது
மிகையாக.

என் ஞாபகம் கொஞ்சம் தெளிவற்றிருக்கும்.
அதனுள் ஓர் அசுர நிழல்படம்
கறுப்பு வெள்ளையில்
இன்னும் கழுவப்படாமல்.

ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி
தமிழில் : நாகூர் ரூமி

ஆகா ஷாஹித் அலி காஷ்மீரி முஸ்லிம் கவிஞர். அமெரிக்காவில் குடியேறிவர். பல கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. சமீபத்தில் காலமான அவர் அமெரிக்காவின் சிறந்த விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர். புலம் பெயர்ந்தவர்களின் வேதனைகளை அழுத்தமாகச் சொல்லும் கவிதைகள் அவருடையவை.

Series Navigation