பேன்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அருண் கொலட்கர் (மொழியாக்கம் – இரா.முருகன்)


—-
1

வயதுக்கு வந்து
வெகு நாளாகி இருக்காது.
இலவங்கப் பட்டையாக மெலிந்த பெண்.

கடுகு நிறச் சேலை
கையில் சிவப்புக்
கண்ணாடி வளையல்.

பூனைக் குட்டி சுருண்டு கிடக்கவும்
இடம் இல்லாது குறுகி
நிமிர்த்தி வைத்த கல்பாளமே
சிம்மாசனமாக வீற்றிருக்கிறாள்.

அவளுக்குப் பின்னால்
சாப்பாட்டுக் கடையின்
ஒடிசலான மரத் தூண்.

சொகுசான தலையணை போல
அவள் தோளை அணைத்து
உயர்ந்து நிற்கிறது.

2

சிரிப்பு பொங்கி வழிய
இப்படித்தான் சளசளவென்று
நிறுத்தாது பேசிக் கொண்டிருக்கிறாள்.

அவளுடைய காதலன் சிறையிலிருந்து
காலையில்தான் திரும்பி வந்தான்.
அழுக்குப் பிடித்த உருப்படாத பயல்.

அந்த மடையனைப் பாரேன் –
அவள் காலை அணைத்துப் பிடித்தபடி
தரையில் உட்கார்ந்திருக்கிறானே,
அவன் தான்.

குச்சிக் கையை ஆட்டி ஆட்டி
அரசவையில் ராணிபோல்
அவள் அதிகாரம் பண்ணுகிறாள்.
நிறுத்தி வைத்த ஃபோர்ட் கார்
முகட்டில் ஊன்றிய முழங்கையும்
ஒரு கால் சக்கரத் தடுப்பிலுமாக
அவள் சொல்வதையெல்லாம்
கவனித்துக் கேட்கிறான்.

பேச்சால் கட்டிப் போட்டாலும்
அவளுடைய கை
செய்ய வேண்டிய காரியத்தில்
கவனமாக இருக்கிறது எப்போதும்.

3
அவளுடைய மடியில்
காதலனின் கண்ணறாவித் தலை.
அவள் கையில் அது யாழாகிறது.

தேவதை போல் அவள் விரல்கள்
அவன் தலைமுடியைக் கோதிக் கோதிப்
பேனும் ஈறுமாக சொடக்கித் தள்ளுகிறது.

அந்தக் கைகளின் வளையல்கள்
காதில் செல்லமாகச் சிணுங்க
அவன் கனவில் மிதக்கிறான்.

வானவில் கண்ணி வைத்துப் பிடித்து
கதைசொல்லும் அருவிக்குப் பின்னால்
பாசிபடிந்த குகையில் அவனைச்
சிறைவைத்திருக்கும் கனவில்
தூரத்தில் குரைக்கும் பொலீஸ் நாய்கள்.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – Lice
மொழியாக்கம் – இரா.முருகன் – டிசம்பர் 04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்