கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part of 52 in the series 20041216_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


தனித்துவ உரிமையில்
கண நேரம்
சன்னிதியில்
உன்னருகே உட்கார்ந்திட
என்னிதயம் ஏங்குகிறது.
கைவசம் உள்ள
எந்தன் படைப்பு வேலைகளைப்
பின்னர்
முடித்துக் கொள்ளலாம்.
கனிந்த நின் திருமுகக் காட்சியைக்
காணாத
மறைவுப் புறத்தில்
நடமிடும் போது படபடத்து,
என்னிதயம்
தன்னிலை மாறி
தவியாய்த் தவிக்கும்!
அப்போது என்
படைப்புகள் அனைத்தும் எனக்கு
முடிவே இல்லாத
முதுகுச் சுமையாய்
கனத்துப் போய்விடும்,
கங்குகரை இல்லாத
கடல் பாரம் போன்ற
உடல் உழைப்பாய்!

வேனிற் கால வெயில்
இன்று என்
வீட்டுப் பலகணி வழியே
பெருமூச்சை விட்டுக் கொண்டு
புகுந்திருக்கிறது,
முணுமுணுப்புடனே!
மொட்டுகள் மலர்ந்து பொங்கி விரியும்
பூந்தோப்பில்
தேனீக்கள் தேன் குடிக்க
கான ரீங்காரமுடன்
ஊதிக் கொண்டு
மும்முரமாய் ஈடுபட்டுள்ளன!
இச்சமயத்தில்
நின் கனிவுத் திருமுகத்தை
நேராக நோக்கிய வண்ணம்
அமர்ந்து
பூரண அமைதியில்
பூரித்துப் பொங்கும்
இந்த ஓய்வு வேளையில்
வந்து விட்டது,
எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கும்
கானத்தை
நான்பாடும் தருணம்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 14, 2004)]

Series Navigation