பூமியின் கவிதை

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

புதியமாதவி, மும்பை.


கனவுகளின் எச்சமாய்
காற்றுமண்டலம்.
தூசிகளில்தான்
பயணிக்கிறது
சூரியனின் கால்கள்.
அந்தக்கால்களுக்காக
காத்திருக்கிறது
நிலவின் ஆகாயம்.
கல்லாகுமோ நிலவு ?
கண்விழிக்குமோ நிலவு ?
கறைபடிந்தக் கால்களுக்காக
கண்மூடித் தவமிருக்கும்
ஆகாயக்கங்கை.

**
பூமியின் கருப்பையில்
அலைமோதுகிறது
கடலலைகள்.
பிரசவவலியில் துடிக்கிறது
இமயத்திற்கு
தொட்டில்கட்டிய
மண்ணின் மடி.
நதிமுலைகள்
கசிந்து அருவியாய்
நனைக்கிறது.
எரிதழல் பிளந்து
முளைக்கிறது புதியவிதை.
விதையின் வேர்களில்
கருப்பை வெடிக்குமோ ?
கடல்நீரைக் குடிக்குமோ ?
காத்திருக்கிறது
தொப்புள்கொடியாய்
தொடர்ந்த உறவுகள்.

**

எத்தனை மலர்கள் ?
எத்தனை விதைகள் ?
எத்தனை கிளைகள் ?
எத்தனை இலைகள் ?
இத்தனையும் தாங்கும்
உன் வேர்கள்.
வேர்களின் தரிசனம்
மறைக்கப்பட்டதால்தான்
இலைகளின் தரிசனம்
கிளைகளுக்கு.
மலர்களின் தரிசனம்
விதைகளுக்கு.
மறைக்கப்பட்டதை மறந்து
சிரிக்கிறது
இலைகள்.
மறைக்கப்பட்டதை மறக்கலாம்
மறுக்கலாமோ ?
உதிர்ந்து போகிறது
விதைதாங்கிய மலர்கள்.

**
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை