இறைத்தூதர்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

கலீல் ஜிப்ரான் – தமிழாக்கம் புதுவை ஞானம்


தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா
ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு
காலம் காத்திருந்தார். தான் பிறந்த
தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது
கலத்திற்காக

பன்னிரண்டாம் ஆண்டின்
அறுவடை மாதமான இதூல் மாதத்தின்
ஏழாவது நாள் நகர மதில்களால்
சூழப்படாத குன்றின் மீது ஏறி கடற்புறம்
உற்றுநோக்கி பனிப்படலத்துக்கப்பால்
தனது கலம் வருவதை
கண்ணுற்றார்.

பின்னர் அவரது இதயத்தின் கதவுகள் பரக்க திறந்து
அவரது மகிழ்ச்சி கடல் மீது நெடுந்தூரம் வெள்ளமெனப் பாய்ந்தது
அவர் தனது கண்களை மூடி தனது
ஆத்மாவின் மொனத்தில் வழிபாடு செய்தார்

ஆனால் அவர் குன்றிலிருந்து இறங்கியதும் ஒரு
சோகம் அவர் மீது கவிந்தது
அவர் தன் நெஞ்சுக்குள் நினைத்தார் :
நான் துயரமின்றி எப்படி அமைதிக்குள் செல்ல முடியும்
ஆன்மாவின் ஒரு காயமும் இன்றி இந்த நகரத்தை
விட்டு அகல முடியுமா ?
இந்த சுவர்களுக்கிடையே நான் வேதனையில்
கழித்த நாட்கள் நெடியவை
தனிமையில் கழித்த இரவுகள் நெடியவை
அன்றியும் எவனொருவன்
தனது வேதனையிலிருந்தும் தனிமையிலிருந்தும்
வருத்தமற்று பிரிந்து செல்ல முடியும் ?

இந்த தெருக்களில் என் ஆவியின்
எத்தனை துகள்களை இறைத்திருக்கிறேன்
மேலும்
இக்குன்றுகளில் அம்மணமாக நடக்கின்ற பிரியமான
குழந்தைகள் எண்ணற்றவை
என்னால் ஒரு சுமையும் ஒரு வலியும் இன்றி
அவர்களைப் பிரிந்து செல்ல இயலாது.

இன்று நான் கழற்றி எறியும் ஒரு ஆடை அல்ல அது
ஆனால் என் கையாலேயே நான் உரித்து எடுக்கும்
எனது தோல் அது.

என் பின்னால் விட்டுச் செல்லும் ஒரு எண்ணமும்
அல்ல அது
ஆனால் பசியாலும் தாகத்தாலும் இனிப்பூட்டப்பட்ட
ஒரு இதயம்

இருந்தபோதிலும் என்னால்
இனியும் தாமதிக்க முடியாது

எல்லாவற்றையும் தனக்குள் அழைக்கும் கடல்
என்னை அழைக்கிறது.
நான் கப்பலேற வேண்டும்.

இரவுகளில் காலம் எறிந்தபோதிலும்
தங்குவதென்பது உறைந்துபோவதாகும்
உறைந்து ஒரு அச்சுக்குள் படிகமாதல் ஆகும்.

இங்கிருக்கும் அனைத்தையும் நான்
மகிழ்ச்சியோடு எடுத்துச் செல்வேன்
ஆனால் எப்படி முடியும் ?
தனக்கு சிறகுகள் கொடுத்த நாக்கையும் உதடுகளையும்
ஒரு குரலால் சுமந்து செல்ல முடியாது
தன்னந்தனியாக அது
தன் வான்வெளியைக் கண்டாக வேண்டும்.

தன்னந்தனியாகவும்
தனது கூடு இல்லாமலும்
சூரியனுக்கு குறுக்காக
பறந்து செல்லும் கழுகு
இப்போது
குன்றின் அடிவாரத்தை அவர் அடைந்தபோது
கடற்புறம் திரும்பி மீண்டும் நோக்கினார்.
தனது கலம் துறையை நோக்கி
வருவதைக் கண்ணுற்றார்.

கலத்தின் முகத்தில் கடலோடிகள்
தனது சொந்த நிலத்தின் மனிதர்கள்.

அவரது ஆன்மா அவர்களை நோக்கி அழுதது
அவர் சொன்னார் :
எனது பழம்பெரும் தாயின் மக்களே
அலைகளின் மீது மிதந்து செல்பவர்களே
எத்தனை முறை எனது கனாக்களில்
நீங்கள் கலம் செலுத்தி இருக்கிறீர்கள்
இப்பொழுதோ
எனது கனவின் அடி ஆழமான
விழிப்பு நிலையில் நீங்கள் வருகிறீர்கள்.

எனது ஆர்வம் பாய்கள் உயர்த்தி
காற்றுக்காக காத்திருக்கிறது
நான் புறப்படத் தயாராக இருக்கின்றேன்.
இந்த அசையாத காற்றை ஒரே ஒரு முறை
பின்நோக்கி அன்புடன் பார்ப்பேன்.

பின்னர்
மாலுமிகளுடன் மாலுமிகளாக
உங்களோடு நிற்பேன்.
பரந்த கடலே
உறங்கும் அன்னையே.
ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும்
அமைதியும் சுதந்திரமும் ஆனவளே
இந்த ஓடை இன்னும் ஒரே ஒரு திருப்பம் எடுக்கும்
இந்த வெட்டவெளியில் இன்னும் ஒரே ஒரு சலசலப்பு கேட்கும்
பின்னர் நான் உன்னிடம் வருவேன்
எல்லையற்ற பெருங்கடலின்
எல்லையற்ற துளியாக.

அவர் மேலும் நடந்தபோது
ஆண்களும் பெண்களும் தங்களது
வயல்வெளிகளிலிருந்தும்
திராட்சை தோட்டங்களிலிருந்தும்
நகர வாயிலை நோக்கி
தூரத்தில் விரைவதைக் கண்டார்.

தனது பெயர் சொல்லி
அவர்கள் அழைப்பதையும்
கப்பல்களின் வருகையை அவர்கள்
ஒருவருக்கு ஒருவர்
வயல்தாண்டி வயல்தாண்டி
உரக்கச் சொல்வதையும் கேட்டார்
அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:
பிரியும் நாள்
கூடும் நாளாக இருக்குமா ?
எனது விடியலின் போது
அதன் முந்தைய மாலை
உண்மையானதென்று சொல்லப்படுமா ?

தனது கலப்பையை
உழவுகாலின் இடையில்
விட்டு வந்தவனுக்கும் அல்லது
திராட்சை பிழியும் எந்திரத்தின் சக்கரங்களை
இடையில் விட்டு வந்தவனுக்கும்
நான் என்ன தரப்போகிறேன் ?

என் இதயம்
பழுத்துக்குலுங்கும் மரமாகி
அவற்றைப் பறித்து அவர்களுக்கு தருவேனா ?

எனது ஆசைகள்
ஊற்றாய் பெறுக்கெடுத்து அவர்களது
கோப்பைகளை நிரப்புவேனா ?
வல்லவன் கரங்கள் மீட்டும்
யாழா நான் ? அல்லது
அவன் தன் மூச்சு என்னுள்ளே இழையும்
குழலா நான் ?

அமைதிகளைத் தேடுபவன் நான்
அமைதிகளில் எந்தக் கருவூலத்தை கண்டு
நம்பிக்கையோடு நான் வழங்கப்போகிறேன்.

நான்
விதைத்த வயல்களின்
அறுவடை நாளா இது ?
அப்படியானால்
எந்த மறந்துபோன பருவங்களில் ?
இது உண்மையிலேயே நான்
எனது விளக்கை
தூக்கி பிடிக்கும் காலமெனில்
அதற்குள்ளே எரியும் சுடர்
என்னுடையதன்று.
எனது விளக்கை
வெறுமையாகவும் இருண்மையாகவும்
நான் தூக்கிப்பிடிக்க
இரவின் காவலன் அதில்
எண்ணெய் நிரப்பி
பற்றவும் வைப்பான்.

இவற்றை அவர் வாய்விட்டுச் சொன்னார்
ஆனால் சொல்லாதவை ஏராளமாக
இருந்தன இதயத்திற்குள். ஏனெனில்
தனது ஆழ்ந்த இரகசியங்களை
அவராலேயே பேசமுடியவில்லை.

பின்னர் நகருக்குள் நுழைந்த போது எல்லா
மக்களும் அவரை சந்திக்க வந்தனர்.

ஒரே குரலில் பேசுவது போல் அவரிடம் கதறினர்
நகரில் மூத்த குடிமக்கள் எழுந்து நின்று சொன்னார்கள்:
அதற்குள் எங்களிடமிருந்து பிரிந்து செல்லாதீர்கள்
எங்களது அந்தி இருட்டில்
உச்சிப்பொழுதின் அலையாக
இருந்தீர்கள் நீங்கள்
உங்களது இளமை
கனவுகான எங்களுக்கு
கனவுகளை வழங்கியது.

எங்களிடையே நீங்கள்
அன்னியராக இல்லை
விருந்தினராகவும் இல்லை ஆனால்
எங்களது மகனாய்
நேசத்திற்கும்
அன்பிற்கும் உரியவனாய்
உங்களது முகத்தை இன்னும் காண
எங்களது கண்களைத்
தவிக்க விடாதீர்கள்.
குருமார்களும் குருபத்தினிகளும்
அவரிடம் சொன்னார்கள்
கடல் அலைகள் நம்மைப்
பிரிக்காதிருக்கட்டும் – நீங்கள்
எங்களோடு செலவிட்ட ஆண்டுகள்
இனிய நினைவாகட்டும்.

ஒரு ஆவியாக எங்களிடையே
நடந்திருந்தீர்கள் – உங்கள்
நிழல் எம்முகத்தின் மீது
ஒளியாய்ப் படரட்டும்
நாங்கள் உங்களை
நிரம்ப நேசித்திருக்கிறோம். ஆனால்
பேச்சற்று இருந்தது என் அன்பு
திரைகளாய் திரையிடப்பட்டு
இருந்தது எம் அன்பு.

இருந்தபோதிலும் இப்போது அது
வாய்விட்டுக் கதறுகிறது உம்மிடம்
நிதர்சனமாய் வந்து நிற்குமது
உம் முன்னால் …. எனினும்
அன்பிற்குதே தெரியாது அதன் ஆழம்
பிரிவிற்கான காலம் எதிர்வரும் வரை.

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்