கழுதைகளுக்குத் தெரியுமா….

This entry is part of 45 in the series 20040916_Issue

நெப்போலியன்


யார் சொன்னது ?
கழுதைக்குத் தெரியுமா…
கற்பூரவாசனையென்று !

கற்பூரத்திற்குத் தெரியுமா…
முதலில்
கழுதையின்
வாசனை என்னவென்று ?

உதைப்பது கழுதையெனில்
மணப்பது கற்பூரம்.
சுமப்பது கழுதையெனில்
எரிப்பது கற்பூரம்.

குட்டிச்சுவரையும்
கழுதைகளையும்
தயவுசெய்து
ஒப்பிடாதீர்கள்
அது
அஃறிைணையையும்
உயர்திணையையும்
அவமானப்படுத்தும்
செயலாகும்.

புரிந்த கழுதைகள்
புரியாத கழுதைகள்
புரிந்தும்
புரியாததுபோல்
முடக்குவாத கழுதைகள்
நன்றிகெட்ட கழுதைகள்
நியாயம் பேசும் கழுதைகள்
நட்பின் கழுதைகள்
என,
கழுதைகள்…. பலவகை.

சத்தியக் கற்பூரம்
சாமிக் கற்பூரம்
நித்தியக் கற்பூரம்
நெடிக்கற்பூரம்
பச்சைக்கற்பூரம்
பாசக்கற்பூரம்
உயர்ந்த கற்பூரம்
ஊத்தல் கற்பூரம்
என,
கற்பூரங்கள்…. பலவகை.

கழுதைக்கும் – கற்பூரத்திற்கும்,

இது மாநிறம்
அது வெள்ளைநிறம்.

இதற்கு மூக்கழகு
அதற்கு நாக்கழகு.

இவைகளின் சொத்து பொதிகள்
அவைகளின் சொத்து புண்ணியங்கள்.

இதன் முகம் அதிர்ஷ்ட ஓவியம்
அதன் முகம் அருவ நர்த்தனம்.

கழுதைகள் கவனிக்கப்படவேண்டியவை
கற்பூரங்கள் காக்கப்படவேண்டியவை.

கற்பூர மயக்கத்தில்
கழுதைகள் அசைபோடுவதும்
கழுதைகளின் பாடலுக்கு
கற்பூரம் நடனமிடுதலும்
தோழமைத் தொடர்…

என் கழுதை
உன் கற்பூரம்
என்றபடி
என்றேனும்
இரண்டும் மல்லுக்கட்டினால்
உதைகளுக்கான தூபங்கள்
அங்கே தயாராகிவிட்டன
என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

எங்கேனும் கழுதைகளைப்
பார்த்தால்
மண்டியிட்டு வணங்குங்கள்
உலகின் உச்சக்குரல்
உங்களுடையதுதானென்று !

கமழ்ந்து கொண்டிருக்கும்
கற்பூரங்கள் அருகிலிருந்தால்
கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள்
ஆயுசின் நிரந்தரமின்மையை
அறிவிக்கும் அற்புதமானியென்று !

கழுதைகளும் கற்பூரமும்
நல்ல இணைகள்
கற்பூரப்பொதிகள்
கழுதைகளின் முதுகில்
ஏற்றப்படாதவரை…
கற்பூரத் தீபங்கள்
கழுதைகளின் தும்மல்களால்
தொந்தரவு செய்யப்படாதவரை…

கழுதைக்குத் தெரியுமா…
கற்பூரவாசனையென்று ?
இனிமேலும்
சொல்லிப்பழகாதீர்கள்
கழுதைகளின்
சங்கதி
வாசனைகளுக்கு
அப்பாற்பட்டது.
—- நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation