தீக்கொழுந்தாக….

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


தீபமேற்றும் அங்கேதான்
தீ
கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது.

கற்றுக் கொள்வதிலும்
எதையும்
பற்றிக் கொள்வதிலும்

சிலர் தீக்குச்சிகளாம்
சிலர் கரித்துண்டுகளாம்
சிலர் மரக்கட்டைகளாம்…

அப்படியில்லையா
இல்லை
அப்படிதான் போயிருக்கிறார்களா ?

புத்தகங்களோடு
புத்தகங்களாய்
எரிந்து போயிருக்கிறார்கள்.

ஒரு நூலகமே
எரித்திருக்கிறதிந்த புத்தகங்களை.

புத்தகப் பொதி சுமந்து
புறமுதுகு காட்டாத
எங்கள் தங்கங்கள்
போராடித்தான் போயிருக்கிறார்கள்.

போய் பார்க்க
காயம்
நெஞ்சிலா முதுகிலா….
நினைத்துப்பார்க்க முடியவில்லை.
கரிக்கட்டைகளாக கைகள் கால்கள்.
சாம்பலாகிவிட்ட சந்தன முகங்கள்.

படித்து நாளை
படியேறி நிற்பதற்கு முன்பே
இவர்கள் இங்கே
தப்பிக்க வழியில்லா உயரத்திற்கு
படியேறிப் போய்விட்டார்கள்.

பள்ளிகள்
படிக்கட்டுகள்தாம்.

இந்தப் படிக்கட்டுகள்
வாழ்க்கையில்
தப்பிக்குமொரு வழியாக இல்லாமல்…

இந்த
குறுகிய வழிகளால்
குற்றுயிரும் குலையுயிருமாய்
குதூகலப்பூக்கள்.

அறிவுச்சுடரேற்ற வேண்டியவர்களுக்கு
அடிப்படை புத்திகூட இல்லாததால்…

வீட்டுக்கும் நாட்டுக்கும்
வாசல் வழிகள்
அகலம் அதிகம் வேண்டுமென
விட்டுப்போயிருக்கிறார்கள்
இந்த மண்ணை இந்த மழலைகள்.

உலகெங்கும்
ஒலிக்கிறதிந்த ஓலம்.

உயிரைவிட்டு உருக்குலைந்த
பாசப்பிள்ளைகளை
பார்க்கக் கதறும் அன்னைகள்.

முகம் பார்த்து அழைக்க
முகமில்லாமல் அழுகிற விழிகளை
யாரும்
துடைத்துவிட முடியாது
இந்நேரம்
ஆறுதல் சொல்லகூட ஆளில்லாமல்
மண்ணே அழுகிறது.

அவர்கள்தான் வரவேண்டும்
ஆறுதல் சொல்ல….
கண்ணீர்த் துடைக்க….

இந்த சாம்பலிலிருந்து
உயிர்ப்பார்களா
பீனிக்ஸ் பறவைகளாக….
—-
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி