அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

புகாரி


.
அன்பே…
கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்
இருந்தும்
நான்
இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும்
என்னால்
மெளனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது
.
ஆம்
அந்த
ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன்
ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப்
பூட்டிவைத்திருக்கிறேன்
.
எனக்குத் தெரியாததா…
மெளனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை
.
எனக்குக் கேட்காததா…
நீ
உன் அந்தரங்கத்துக்குள்
என்னை
இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்
.
பல நேரங்களில்
நீ உன்
விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட
முன் வந்திருக்கிறாய்
உன்
பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில்
என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்
இருந்தும்
என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை
.
நான்…
உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும்
ஈர நெஞ்சன் தான்
ஒரு
நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்
.
உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ
எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்
ஆனால் உன்
சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்
எனவேதான் என் அன்பே…
என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற
உன் விழிக் கெஞ்சல்களையும்
நான்
நிதானமாகவே நிராகரிக்கிறேன்
.
இருந்தும்
என் காதலை உன்முன்
என்
உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர்
உற்சவமே நடத்திவிட்டது
சந்தேகமிருந்தால்
நான்
அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி
அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்
அவை சொல்லும்
கண்ணே
நான் உன்னைக்
காதலிக்கிறேனடி
இதயத்தின்
எல்லா அணுக்களாலும்
நான் உன்னை
நேசிக்கிறேனடி
உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை
உச்சரிக்கிறேனடி
என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை
.
நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று
உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்
இருந்தும் என் அன்பே…
நான்
எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை
இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்
அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்
என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய
*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி