தமிழவன் கவிதைகள்-பத்து

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

தமிழவன்


நானும் பட்டாம் பூச்சியும்.

எதிர்பார்த்து நின்றோம்
புதிதாய் பூத்த முருங்கைமரம்.

சுள்ளென்ற வெயில்
இடையே காற்றும்.

வேலிகள் மட்டும் வீடுதோறும்.

காம்பவுண்டுகள் வராத காலம்
பஸ்ஸும்.

அம்மணமாய் நான் அலையும்
பாலகன்.

வில்வண்டி வந்து
நின்றதும்
ஊரே அழுதது

ஒரு தேவதை இறந்துபோனதாய்
சொன்னார்கள்

அது
ஒரு அழகான பெண்ணுடல்

முந்திய வாரம் வரை
எனக்குக் கதை சொன்னவள்.

ஆண்டுதோறும் மழை பெய்தது.

பின்பு ஒருநாள்
அவளது வீட்டிலும் கண்டேன்
முருங்கைமரம் வெள்ளையாய் பூத்ததை.

நட்சத்திரம் மட்டும்
இருளில் மின்னி மின்னி
அழைக்கும்.

ஆனால்
அவள் பட்டாம் பூச்சி ஆனாள்.
—-

Series Navigation

தமிழவன்

தமிழவன்