உறங்கட்டும் காதல்

This entry is part of 52 in the series 20040617_Issue

புதியமாதவி, மும்பை.


எனக்குத் தெரியும்
நீ என்னைக் காதலிக்கின்றாய்

காதல் என்பது
கட்டி அணைப்பதும்
கண்களால் அளப்பதும்
கனவு காண்பதும்
கவிதை எழுதுவதும்
அல்ல அல்ல
காதல்..
நீ என்னிடம் கொண்ட காதல்
உன் பழையக் காதலை
உன்காதலியர் வரிசையை
உன்காதல் கவிதைகளை
அர்த்தமிழக்கச் செய்துவிட்டது..

உன் கடந்தக் கால
காதல் கவிதைகளை
நிஜமாக்க
நிஜக்காதலை
நிழற்படமாக்கி
நடித்துக் கொண்டிருக்கிறாய்.
காதல்
வசனங்களில்லாமல்
வாழ்க்கைத் திரையில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

****

என்னை மன்னித்துவிடு
உன்னைச்
சந்திக்க மறுத்த
என்னை மன்னித்துவிடு.

யார் யாரை எல்லாமோ
காதலித்தேன்..
அவர்களும் காதலித்தார்கள்
ஆனால்
உன்னைக் காதலித்தப் பிறகுதான்
காதல்
என்னைக் காதலித்தது.
போலிக்காதலுக்காகப் போராடிய நான்..
இன்று உண்மைக்காதலுக்கு
முன்னால்
ஊமையாய்.

****

மனம் சார்ந்தது மட்டும்தான்
காதல் என்றால்
என் மெளனம்
உடைந்திருக்கும்.
மனசின் காதல்
உடலில்தாவி
உன்னையும் என்னையும்
எரித்துவிடக்கூடும்
உடம்பின் சாம்பல்
காற்றில் கலந்து
நம்மைக் களங்கப்படுத்திவிடலாம்.
அதனால்தான்
உன்மீது என் காதல்
உயிர்ச்சிறகை
எரிக்கின்றது.

****

உன்மீது என் காதல்
என்மீது உன் காதல்
கடைசிவரை
உச்சரிக்கப்படாமல்
உரசாமல்
உறங்கட்டும்.
எழுப்பிவிடாதே.

****

அன்புடன்,

புதியமாதவி.

Series Navigation