கடலைக்கொல்லை

This entry is part of 52 in the series 20040617_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


மண்ணில்

கோடிலுத்த பின்னே
புள்ளி வைக்கும் கோலம்.

ஒரு கோட்டை மறுகோடு மூட
கோட்டில் விழுந்த புள்ளிகளெல்லாம்
மறையும் மறுபடி தெரியும்
கோலமாய் விரியும்.

இந்தக் கோடுகளாவது
இந்தப் புள்ளிகளாலென்று

கோடு வரையும் ஏர்க்கால்
புள்ளியாகும் விதைக்கடலை…

காகிதமாய் வயல்
கடலை முளைத்த ஓவியம்.

முளைத்ததைப் பார்க்க
முகம் மலரும்.

போட்டது
கலப்பா நெருக்கமா ?

ஈரத்தில் ஓரத்தில்
எல்லாம் முளைத்தனவா ?

உழுததிலே உழுத ஏர்
மூடாமல் விட்ட சால்
முளைக்காமல் கிடக்கும் மண்…

ஊடடித்து உடையாமலுருண்ட
மண்கட்டியில்
ஒளிந்து முகம் காட்டும் ஒரு முளையில்
இன்னும் சில
நாளை முளைக்குமென
நம்பிக்கை பிறக்கும்.

காகிதமாய் வயல்
நாளையும் வரையும் ஓவியம்.

கடலை போடும் காலை வெயில்…

ஒட்டும் ஏருக்குப் பின்
நிழலாய் ஓடி ஓடி…
புதுசாய் கடலை போடும் பொடிசுகள் போல
காக்கைக்கும் கொண்டாட்டம்.

காக்கைக்காகத்தான் கடலைச்செடி
கண்டு பூ பூத்து
காணாமல் காய்காய்க்குமோ ?

முன்னேரில் விழுந்த விதை
பின்னேரில் மூடுவதற்குள்…
முற்காலம் விதைக்கும் விதை
பிற்காலம் விளைவதற்குள்…
கடலை திண்ண காகத்துக்காசை.

இந்தக் காகத்துக்கு
இன்று கிடைக்கும் களாக்காயும் ஆசை
நாளை கிடைக்கும் பாலக்காயும் ஆசை.

தம்பிப்பயல்
காக்கையைக் கண்டு
கம்பெடுத்துக் கத்துவான்.

ஆத்தா சொல்லுவாள்,
“எங்க தங்கத்துக்கு
கருத்துன்னா கருத்து.”

உழுத வயலில் ஓரடி வைத்து
விழுவான்… எழுவான்…
கடலை சொல்லத் தெரியாதவன்
ஓ வென்பான்
காக்கையை ஓடென்பான்.

முன்னொரு காலத்தில்
என்னையும் ஆத்தா
இப்படிச் சொல்லியிருப்பாள்.

மார்கழித் தை பனி ஈரத்தில்
மண் பார்த்த கடலைப் பெண்ணாள்
பங்குனிச் சித்திரையில்
பருவநகை புரிவாள்.

கடலைபோட்ட நாளைவிட்டு
பீளிவிட்ட காலந்தொட்டு
கடலைதோடணியும் காலம்வரை
காக்கை விரட்டி… காக்கை விரட்டி…

என்
கோடைவிடுமுறை கொல்லையில் கழியும்.

கடலை விற்கும் ஒருநாள்
தாத்தா
காசுநிறைய கொடுப்பாரெனுக்கு.

எங்கள் தாத்தா
இந்த
மண்ணோடு மண்ணாயிருந்து
இந்த
மண்ணாகவே ஆகிவிட்டார்.

என்னைக்கூட
இந்த
மண்ணுக்குள் போட்டுத்தான்
மூடுவார்கள்.

எங்கள்
தம்பிப்பயலின்
தம்பிப்பயலின் தம்பிப்பயல்
அப்போது
காக்கை விரட்டிக் கொண்டிருப்பான்.

முன்னேருக்குப் பின்வந்து
முன்னோடும் அந்தக் காக்கை…

நான் விரட்டிய
காக்கையின் வழிவந்த
காக்கையின் காக்கையாயிருக்கும்.

thamilmathi@yahoo.com

Series Navigation