வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….

This entry is part of 48 in the series 20040610_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


தொட ஓடுகிறாய்
தொடராமல் நிற்கிறாய்
வந்து
மாமா என்றென் கைப் பிடிக்கிறாய்.

மழலை உனக்கு
பயம் கலந்த பரவசம்
ஆசை இருந்தும் அச்சம்.

உன் விளையாட்டுக்கு
அந்த
வண்ணத்துப்பூச்சியை துரத்துகிறேன்.

அதோ… அதோ…என்கிறாய்
அழகின் ஓவியத்தை.

பிஞ்சு உன் கால் குதிக்க
பிரியத்தோடு நான் துரத்த
பின்தொடர்ந்து வருகிறாய்.

பூவோடு பூவாக
பூஞ்சிறகு அசைகிறது.
இலைமறை காயோடொளிந்து
என்கை தொடும்முன் நழுவுகிறது.
நிழலிலே நிறமாக
ஒளிகாட்டி ஒளிந்தெங்கோ நிற்கிறது.

சிரித்துவிட்ட உதடுகளாக
சென்றத் தூரத்து கையசைவாக
நெஞ்சமர்ந்து கண்களாய் சிறகடித்து

சேலை
முந்தானை நுனி வண்ணமாய்
கொடி இடையிடை
சேர்த்துச் செருகியது போல்…
ஒளிந்து எங்கோ…
இங்குதான்.

கொடியோரம் மரத்தோரம்
நான் தேட
நீ ஓடித் தொடுகிறாய்
அவளை.

விளையாட
வண்ணத்துப்பூச்சி வேண்டுமென்கிறாய்
என்னிடமும் அவளிடமும்.

–thamilmathi@yahoo.com

Series Navigation