கடைசியாய்….

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


வெளிநடப்பு
செய்யாத
காற்று
உன்
அறைக்குள்
வந்ததுண்டா ?

எழுத்து
முட்டிக்கொண்டு
நிற்கையில்
எழுதுகோல்
கிடைக்காமல்
திண்டாடியதுண்டா ?

எதிர் வீட்டு
ஜன்னலைத்
தட்டும் குருவி
உன்
கவிதையில்
வந்ததுண்டா ?

பார்க்கலாம்
நாளை என
யாருக்கும்
உபயோகமற்ற
உத்திரவாதம்
உன்னிடமிருந்து
புறப்படுவதுண்டா ?

எந்திர யுகத்தின்
தந்திர சூட்சுமம்
அறியாதது போல்
தினமும்
நடித்ததுண்டா ?

கடற்கரை
மணலில்
காதலின்
புன்னகையை
கைகளில் அள்ளி
கடலில்
கரைத்ததுண்டா ?

நேற்றைய கனவில்
உன்னுடன்
சிரித்தது
யார் என்றாவது
உனக்குத் தெரியுமா ?

நாளைய கனவில்
உன்
குரல்வளையைக்
குதறப்போவது
நீதான்
என்பதை
யூகிக்கமுடியுமா ?

இன்று
காணும் கனவை
கலைப்பதற்கான
கைகள்
சில சமயம்
உன்னைச்
சுற்றியுள்ளவர்களிடமிருந்தும்
பல வேளைகளில்
உன்னிடமிருந்தும் தான்
நீளுகின்றன
என்பதாவது
தெரியுமா ?

தெரியுமா….தெரியாதா

தெரிந்தால்,

நீ
பிடித்திருக்கும்
கயிற்றிலிருந்து
கைகளை
விலக்கி
ஏறி
நின்று கொண்டிருக்கும்
நாற்காலியிலிருந்து
கீழிறங்கு…

தெரியாவிட்டால்,

தொங்கிய பின்பும்
தெரியாது
என்பதைத்
தெரிந்து கொள்
கடைசியாய்…
—-

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்