பின்னல்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

கவிநயா


‘அம்மா, அம்மா
என் முடியை உன் போல்
நீளமாக வளர்த்துக்கவா ? ‘
உற்சாகத் துள்ளலுடன்
ஓடி வந்த மகளைக் கண்டு
நினைவுகள் சற்றே
நகர்ந்தன பின்னோக்கி –
நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!
ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்
அம்மாவின் கைத்திறனை
அருமையுடன் நினைத்தபடி
தன் முகத்தைப் பார்த்திருந்த
தளிர் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:
‘வேண்டாம் கண்ணம்மா.
பாப் வெட்டிக் கொண்டால்தான்
பராமரிக்க சுலபம் ‘, என்று

— — —
meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா