தேவதேவனின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

தேவதேவன்


கடப்பாரைப்பாம்பு
==============

சடாரென்று பதுங்க
செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல
பார்வையை அறைந்தது
கடப்பாரையா பாம்பா

தன் அருகிலே கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாளாஇ கழிப்பானோ

கடப்பாரைதான் பாம்பாய் மாறி
புதருக்குள் ஒளிந்துகொள்ள விழைகிறதோ
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறி தப்பிக்கிறதா
கள்ளச்சிரிப்புடன் ?

வீதி
==

விடிந்தும் விடியா பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்
நுழைந்துவிட்டேன்

வெறுப்பும் பதற்றமும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்

ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்

தோணித்துடுப்போ
பெருமழையோ
கம்பீர நெடுங்கழி பெருக்குமாறோ
குனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ
தூரிகையோ
வாளோ
என்றெல்லாம்
சித்தரிக்க சித்தரிக்க
தீராத உன்னை
காதல்மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்

தொனி
=====

இன்றாவது அந்த மனிதனைப்பற்றி
சிந்திக்க தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்

நலம் விசாரிக்கையில்
இருக்கம்-யா என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்
கவிதைகளின் தொனி குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்

நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒருநிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவன் குழந்தையோ
நாளையைப்பற்றி
கேட்கப்படும்போதெல்லாம்
பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்

அய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்து
தோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அற அத்ர்ச்சிக்குள்ளாகி பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனை கவிடுகையில்
அவன் என்ன ஆனான் ?
அவன் உயிராசைவேகமன்றோ
பக்கச்சுவரில் உடல் சிராய்க்க
தொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று

சாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா
‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘
இந்தியா உலகுக்கு அளிக்க போகிறது ?

எந்த தத்துவத்தில் இருந்து பெற்றது
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் போராட்டமும் அறிவும்
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை ?

கருணையற்ற மனித உலகுக்கு
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள் ?

[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் ‘விடிந்தும் விடியா பொழுது ‘ என்ற நூலில் இருந்து ]

Series Navigation

தேவதேவன்

தேவதேவன்