திரை அரங்கில்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

பசுபதி


திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி
நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; — வகைவகையாய்
தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச்
சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1)

பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும்
பின்வரிசை பீற்றிக்கொள் பேச்சிடையே — இன்னாரைக்
கொல்பவன் யாரென முந்திரிக் கொட்டையாய்ச்
சொல்லித் தொலைக்கும்சும் பன். (2)

படம்தொடங்கிப் பாதிமணிப் பின்வந்(து) அரங்கில்
இடம்தேடி என்மேல் இடறி — தடாரென்றன்
கண்ணில் விலாகுத்திக் காலைத் துவையல்செய்
குண்டுக் கனவானின் கூத்து. (3)

மேலைப் படமொன்றில் மேலாடை இல்லையென்றான்;
நீலம் திரையை நிரப்புமென்றான் — கேலி!
அறுவைப் படத்தால் அவிந்தேன் ; அறிந்தேன்
குறும்புசெய் நண்பன் குணம். (4)

அன்றாடம் ஆங்கிலத்தில் அக்கப்போர் கேட்டலுத்(து)
அன்னை மொழிகேட்க அண்டினால்– என்சொல்வேன்!
தண்டமிழ் மீனைத் தமிங்கிலம் சாப்பிடும்
கண்றாவி கண்ட கசப்பு. (5)

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி