புரிந்ததா

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

சத்தி சக்திதாசன்


புரியாத கேள்விகளுக்கு
ஏன் ?
புதிரான விடைகளைத்
தேடுகின்றாய்

வாழ்க்கை அது
தனது
தண்டவாளத்தில் தவறாமல்
ஓடிக்கொண்டேயிருக்கின்றது

வானத்தில் ஒவ்வொரு நாளும்
நிலவைத்
தேடிக்கொண்டுதானேயிருக்கின்றாய் ?

உனது நிலவு என்ன
வடிவம் ?
அறிவாயா நீ ?

மூன்றாம்பிறையை என்றுமே
ஏற்றுக்கொள்பவனில்லையே நீ
எது தரும் உனது
கருத்துக்கனவை.

தராசுத்தட்டின் ஒரு பாகத்தில்
சுயலாபம்
மறுதட்டிலே மனிதாபிமானம்
எதன் எடை
உன்ணுள்ளத்தினிலே கூடிற்று

வெளிச்சம் எங்கிருந்து
வந்தாலும்
உன்மனவீட்டின் இருளை
போக்குமானால்
ஏற்றுக்கொள்வாய்
ஏனெனில்
இவ்வுலகில் வெளிச்சத்தைக்கூட
விலைகொடுத்து வாங்குகின்றோம்

சிரித்தவர் சிலர்தான்
கலங்காதே
பலரின் சிரிப்பின் அர்த்தமே
வேறுதான்

தூங்கிக்கொண்டே வாழும்
உலகமிது
துயரத்தை விலைபேசி
திரைக்கு
விற்கும் வியாபாரிகள் நடமாடும்
சந்தையிது

உணர்ச்சிகளை ஓசியில்
வாங்கத்துடிக்கும்
போலி நடிகர்கள் நிறைந்த
பொய்யான நாடக
மேடையிது

வேகத்திற்கு தமது
போகத்தை
அடகு வைத்து
விலையாகா விவேகத்தை
விற்கத்துடிக்கும்
பகற்கொள்ளைக்காரர்கள்
தாமிவர்

என்னைத்தோண்டி நான்
காணமுற்பட்ட
ஞானங்கள்
இந்த பாபஉலகில்
இன்றும்
காலை வெட்டி
செருப்பை உபயோகித்த
உண்மைகளாகின

நீயும் வாழ் இதே
பூளோகத்தில்
நானும் வாழ என்
தோழனே கடைசிவரை
கைகொடு
சமுதாய உணர்வோடு
உன்னை நான் கேட்கும்
கடைசி உதவி இதுதான்
—————————
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்