கை நழுவின பகலிரவுகள்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

மாலதி


———————————————
எங்கள் வியர்வைத் தேனடை
மூல தனங்களை
உயில் வடிப்பில் தருகிறோம்.
எங்கள் கணவன்மார்களை
எங்களுக்கே திருப்பித் தாருங்கள்
எங்கள் இனியவராக.

வெற்றிலைச் சாற்று உதடுகளின்
உலர்வு பொல் இயல்பான
ஆயிரமாயிரம் பகலிரவுகளைக்
கொண்டு கால்மாட்டில் வையுங்கள்

கற்பைப் பற்றின உங்கள்
மலைப் பிரசங்கத்தில்
கலந்து கொள்ள வருகிறோம்
நாங்கள்.

————————————————
பழுதை
———
நிசிச் சுவற்றை இறுக்கிக்
கட்டிக்கொண்டு
நீண்ட யுகங்களுக்கு
விழுந்து கிடந்தது பழுதை

அந்த மதிலுயரம்
மசிக்கறுப்பு
பிடித்துத்தான்
கிடந்ததா என்றோ
பசித்திருந்ததா உயிர்த்திருந்ததா
என்றோ
கவலை யாருக்குமில்லை.

பல வருடங்களாகியபின்
பழுதை பாம்பாகிவிட்டதோ என்று
தேரைகள் தாண்டித் தாண்டிப்
போனவாறிருந்தன.

பழுதைக்குக் கண் முளைத்துக்
கண்ணீரும் வந்ததால்
ஈரக் குளுமைகளில்
அரவத்தின் உளுந்து வாசனை
மேம்பட்டுவிட்டதோ
என்னமோ என்று

காவலர்கள் பேசிக் கொண்டார்கள்.
————————————————
நெருஞ்சிப் பழச் சாற்றுடன்…….
——————————— ——
நெருஞ்சிப் பழம் எடுத்துப்
பிழிந்து வைத்தேன்
கை எரிந்தாலும் உனக்காக.

நீ வெளிச்சங்களில் குணசாலி.

கிளைப் பரப்புகளைப் புரட்டிக் கலைத்துப்
பச்சையிலையிடை நீலாம்பரத்தில்
கண் விதைப்பேன்
தேட்டைக்குள்ளாகும் நம்
மேன்மைகளில் வறண்டபின்.

நிரந்தரமாய் நிரம்பாத
ஒற்றை வாளி
வென்னீருடன் பகிர்ந்துகொள்ளும்
ஆடைத்துறவில் புதைப்பேன்
நம் கூர்மைகளை.

உனக்கான என் வந்தனங்களின்
உரிமம் விட்டுத்தருவதில்லை நீ என்றும்.

பால் பரப்பி வெளிகளிடைக் கலக்கிற
கடல்நீரில் காதங்களை அலைப்பிக்கிற
குற்றமனப்பான்மையினின்று
என் கூந்தலை நீ ஆற்றுகிறாய்.
இருட்டுகளில் வீசும்
பொறுப்பில்லாத உன் காற்றுகளால்.

உன் வார்த்தைகளில் தீட்சிக்கும்
என் கங்குகளை நசுக்கப்
பேய் மடிகளும் எனக்குப் பரிச்சயம்.

என்றாலும்
நளன் கிழித்த அரைப் புடவையில்
கவிதைத் தையல்களுடன்
இன்னும் நளினமாய் நான்.

——————————————————–
மாலதி [ ‘தணல் கொடிப் பூக்கள் ‘[2001]தொகுப்பிலிருந்து.
கிடைக்குமிடம் ..திரு.திலிப்குமார் ஆர்.கே.மட் ரோடு சென்னை.

Series Navigation

மாலதி

மாலதி