மொழியெனும் சிவதனுசு

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

அபராஜிதா


மொழியை
வெகு குறைவாகவே
புழங்குகிறேன் வீட்டில்

(அதாவது
சொற்களை
சொல்தானே
மொழியின் மூலம்)

இப்படித்தான்
இருக்கவேண்டும்
ஒரு கவிஞன்
இரண்டொரு வார்த்தைதான்
அம்மாவிடம்
(அவளுக்கு
தெரியும்)

மனைவியிடம்
இன்னும் நாலைந்து சொற்கள்
(இவளுக்கு
தெரியாதா என்ன)

பிள்ளைகளே அதிகம்
பேசுகிறவர்கள் அல்லர்
(பிடித்த
விஷயம்)

வெளியில்தான்
கூடுதலாகப் பேசவேண்டியதாகிவிடுகிறது
(விருப்பம்
இல்லாவிட்டாலும்)

அவர்கள்
நிரம்பப் பேசிவிடுவார்களோ
என்றொரு பயமும்

யாராவது
இளங்கவிஞன் ஒருவன்
கவிதைகுறித்து கேட்டுவிடுகிறான்

தன் வாழ்க்கை பிரச்னையை
முன்வைத்து யோசனை கேட்கிறான்
யாராவது இளம் நண்பன் ஒருவன்

ஜாதகத்தை
எடுத்துக் கொண்டுவந்து
நீட்டிவிடுகிறார் யாராவது ஒருவர்

தப்பிக்கவே முடியாது
விளக்கமாய்ப் பேசித்தான்
ஆக வேண்டியிருக்கிறது

எனில்
எங்கேயுமே
மொழியை துஷ்பிரயோகம் செய்வதில்லை

(திராவிட இயக்க பாதிப்பிலிருந்து
இன்னும் முழுமையாக விடுபடமுடியவில்லை என்றாலும்)

எப்பொழுதாவதுதான்
அமைகிறது ஒரு நல்ல உரையாடல்
(விருந்து போல)

எப்பொழுதாவதுதான்
வாய்க்கிறது ஒரு நல்ல கவிதை
(மழை போல)

எப்பொழுதாவதுதான்
எடுக்கவேண்டும் போல
மொழியெனும் சிவதனுசை

******

Series Navigation

அபராஜிதா

அபராஜிதா