‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

கரு.திருவரசு


பழைய பாதையில் நடந்து நடந்து
மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!

திரையின் படமோ அறைக்குள் வந்தது
தெருவில் நடப்பதைத் திரைகள் கணிக்குது
அறிவியல் தருகிற அணுக்க உறவுகள்
பிரிவுகள் கடந்த நெருக்கம் வளர்க்குது
மெத்தப் புதுமைகள் மேலும் வளர்ந்து
நித்தம் நித்தமும் வந்து குவியுது!

நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!

இறைவனை வணங்கு கிறானோ இல்லையோ
தலைவனை விழுந்து விழுந்து வணங்குவான்!
வணங்கி வணங்கி வளைந்து போனவன்
இணங்கி இணங்கி எதையும் இழப்பவன்
அவனுடன் பிறந்த பாவம் தொலைய
இவனுமா என்னும் கேள்வியைச் சாய்க்க

நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!

சேவை என்பதோ போர்வையாய்ப் போனது
பாவிகள் பலபேர் போதகர் ஆயினர்!
என்னையும் உன்னையும் இனத்தையும் கூட
என்ன அழகாய் ஏய்க்கிறார் சிலபேர்!
வித்தை தெரிந்தவர் மேய்ப்பர் ஆயினர்
மொத்தமாய் எல்லாம் மூச்சுத் திணறுது!

நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு