மீண்டு(ம்) வருவேன்…

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

-வேதா


நினைத்து நினைத்து
இருந்த நிமிடம் கரைகிறது,

நொடிகள் விரிக்கிறது,
எனக்கான
மற்றுமொரு ஆகாயம்!

துருத்திய சிறகுகள்
என்னை,
துர்பாக்கியசாலியாய் மாற்றுகிறதோ ?

துரத்தும் உன் நினைவுகள்
தூரத்து ரயில் பயணத்தில்!
ஒன்றாய், ஒருதிசை நோக்கி செல்லும்
தண்டவாளம் ஞாபகத்தில்!

உனக்கும் ஒரு பயணம் இருக்குமோ ?
உறங்கும் முன்
என் யோசனை இருக்குமோ ?

ஆசையான அறுபது நாட்கள் – என்னை
அணு அணுவாய் பிளந்த கவிதைகள்
பிரியமான பார்வைகள்,
பேசிய மவுனங்கள்,
புதிதாய் பிறக்க வைத்த சிந்தனைகள்
சின்ன சின்னதாய் சந்தோசங்கள்
இவை,
இறக்கும்வரை உனக்கும் இருக்குமோ ?

எனக்குத் தெரியும்,
கடைசி வரை,
மாற்றங்கள் மட்டுமே
மாறிவிடாதவை,
மனங்களும் கூடத்தான்!!

இதை,
தெரிந்த அறிவு
தெரியாத மனம் – என்ன செய்ய ?

உதிர்ந்த இலைகள் – என்னை
ஒட்டிவிட முடியாத இலையுதிர்காலம்!

உதிர்ந்த பின்னும்
சருகாய், சிறகாய்
பறக்கும் உன் மரம் சுற்றி!!

உன் காலடி பட்டதும்
நொறுங்குவேன் சருகாக…
அந்த ஒலிகேட்டு, இசைகேட்டு,
உன் வலிகள், வேதனைகள் பறக்க வைப்பேன்!

நீ நிழலாய் நிறைத்தால்,
நிம்மதியாய் ஓய்வெடுப்பேன்,
மழையாய் துளித்தால்,
மண்ணோடு மக்கிப் போய்,
மறுபிறவிக்கு மன்றாடுவேன்!

உன் அடிவேரின் ஆழம்புகுந்து
ஆயிரம் ஆயிரமாய்
அர்த்தங்கள் புரியவைப்பேன்!
அதிசயங்கள் அறியவைப்பேன்!

நம்மை காட்டியும் கொடுத்து
கலைத்துவிட்ட காலம்
இனியொரு நாள் – இந்த
நிஜங்களை நினைக்க வைத்தால்
‘இல்லை ‘ என்று மறுக்காதே!!

இன்னுமொரு சந்தர்ப்பம்
இயற்கை எனக்களித்தால்,
எந்த உருவிலும், எந்த உயிரிலும்
மறைந்து நான் வரலாம்…

எனக்காக பார்த்திரு!
எதற்கும் எதிர்பார்த்திரு!!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா