ஆணின் வெற்றிக்குப் பின்னால்……

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

கோமதி நடராஜன்


வாசுகி வாசுகி!என்று வாய் நிறைய
வள்ளுவர் அழைத்த போது,
இல்லாள் காதினிலே,
வா-சுகி,வா-சுகி என்று விழ
சுகித்திருக்கத்தான் அழைக்கிறார் என்று,
போட்டது போட்டபடி,
எடுத்ததை,இடையில் விட்டபடி,
எண்ணில் அடங்கா ஆசையுடன்,
எழுத்தில் அடங்கா காதலுடன்,
ஓடோடி வந்தவளின்,
முகம் கூட, பாராமல்,
‘எழுத்தாணியை எடுத்துத் தா,
ஏடுகளை அடுக்கித் தா ‘,என்று
ஆணையிட்டதைக் கேட்டதும்,
முகம் சுண்டிப் போனாள்,பத்தினி
மனம் வெதும்பிப் போனாள்,உத்தமி.
‘ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண் இருக்கிறாள் ‘ என்றால்,
அது இப்படித்தானோ ?
—————————-
[வாசுகி என்ற பெயரோடு விளையாடிய வார்த்தை விளையாட்டின் எதிரொலியே இந்த வரிகள்.இதைத் தவிர வாசுகியின் எண்ண அலைகளை நான் எந்த ஏட்டிலும் வாசித்ததில்லை.தமிழ் மகனின் அரிய படைப்பு,தங்கு தடையின்றி உருவாகத் தூணாய் துணை நின்ற இல்லாள்,ஈரடிப் புலவரோடு ஏழடி நடந்த, வாசுகியின் பாதங்களில் இக்கவிதையை உதிரிப் பூக்களாய் சமர்ப்பிக்கிறேன்.]

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்