“க்ருஷாங்கினி” யின் கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

க்ருஷாங்கினி


“பயம்” “ வீரம்” என்ற தலைப்பிடப்பட்டுள்ள இரண்டு கவிதைகளும் இம்மாதம் 1ஆம் தேதி “ரச பரதம்” என்ற தலைப்பில், நாரத கான சபாவின் நாட்யாரங்கம் ஏற்பாடு செய்து சென்னை நாரத கான சபா அரங்கில் இந்தத் தலைப்புகளில் பரதநாட்டியம் ஆடிய நடனக் கலைஞர்களால் எடுத்தாளப்பட்டது.

“பயம்”

இளம் பிள்ளை களங்கமற்றுச் சிரிக்கும்

ஓங்கிய கை கண்டு கண்சிமிட்டாமல்

ஒரு நாள் ஓங்கிய கையின் வலி தானுணற

பின் விளைவு கண்டு கண் படபடக்கும்.

பயம் மனம் சார்ந்தது;

மனம் அனுபவம் சார்ந்தது.

அன்றொரு நாள் குலுங்கிய பூமியின்

அனுபவம் அனைவருமுணர்ந்து

பாதுகாப்புக்கான கதவுகள் திறந்து,

மேற்கூறை துறந்து, திறந்த வெளியில்

வானமே கூறையாய் உண்டோம், உறங்கினோம்.

பூகம்ப பூமி கலவர பூமியாக-

எந்த அலறலுக்கும் திறக்காத கதவுடன்

எப்போதும் அடைபட்ட கூண்டிற்குள்

அவரவர் அடையாளங்களுடன்

அடுத்தவரை கண்டு அஞ்சுகிறோம்

அஞ்சவைக்கிறோம்—இப்போது.


வீரம்

மிகப்பெரிய உறுமல், அவ்வப்போது;

இடைவெளி விட்டுவிட்டு-எங்கிருந்தோ.

கேட்டமாத்திரத்தில் உடலும் உள்ளமும் நடுங்க

எந்த மிருகம் ? எங்கிருந்து ?

தேடி அலைந்தேன்…

சிக்கியது ஒரு நாள், மலை உச்சியில்

பெரிய முரசும் அருகில் நாணலும்.

காற்றடிக்க, நாணலசைய, முரசு முழக்கமிட;

பயம் நீங்கி மீதேறிக் கிழிக்க

உள்ளிருந்தன கிழிந்ததோலும் மரக் கோல்களும்.

மலையும் மிருகமும் எதிரியும் -எல்லாமே

உன்னுள்ளடக்கம் பயமும் வீரமும்.

அச்சம் தவிர், வீறுகொண்டெழு,

வீரத்துடன் மனிதத்தையும் இணைத்து வாழ்.

e-mail: nagarajan62@hotmail.com

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி