கருவறைக்கு ஒரு வந்தனம்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

மு ரெங்கம்மாள்


கோயிலுக்குப் போகும்போதெல்லாம்
‘கர்ப்பக் கிரகம் ‘ என்ற வார்த்தை கேட்டிருக்கிறேன்.
அந்த வார்த்தையின் அர்த்தம் உறைக்காமல்.

கரு உறைவிடம் என்று அதற்குப் பொருளாம்.
எதன் கரு என்று தெரியவில்லை.

மக்கிய வாசனையும், எண்ணெய்ப் பிசுக்கடைந்த சுவர்களும்,
குளிர்ந்த கருங்கல் பாவிய பிரகாரங்களும்
இருண்ட மூலைகளில்
முலைமூடாச் சிற்பங்களும்
மாவிளக்கின் திரியில் கருகி எழும் புகைத் தீயும்.

என் கருவறையும் இப்படித் தானோ என்னவோ

நிணமும், உயிர் தரும் உணவும்,
நீர் நிரம்பிய
காவல் காக்கும் தோற்சுவர்களும் என.

அது தான் என் அடையாளம் என
எல்லோரும் சொன்னார்கள்.
( ‘புழு பூச்சி உண்டா ? ‘)

புறநானூற்றுப் பெண்ணுக்கு அது
புலியிருந்து போகிய இல்லமாய் இருந்திருக்கலாம்.

எனக்கோ
இது வெறும் பூனைகள் பதுங்கியிருந்த இருட்டறைதான் –
( இந்தாலும் எனக்கே எனக்கான பூனைகள் அவை.)
பிராண்டியதும் உண்டு.
வெகு நாட்கள் காணாமல் போனதும் உண்டு,
திரும்பி வரும்போதெல்லாம் அடுக்களையைச் சுரண்டியதுமுண்டு.

வெகுகாலம்
உடனிருந்த அந்தக் கருவறையை
நேற்று நான் கழட்டி வைத்துவிட்டேன்.
(அறையில் கரையான்)

கடவுள் மோசம்.
மற்றவர் வலியறியாதவள்.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வைத்திருக்கலாம்.
அடுத்த முறை
அவளுடைய கருவறைக்குள் செல்லும் போது
ஞாபகமாய்ச் சொல்லவேண்டும் அவளிடம்.

இத்தனை காலம் இறக்கிவைக்க மாட்டாமல்
சுமந்திருக்க வேண்டாமே.

***

Series Navigation

மு. ரெங்கம்மாள்

மு. ரெங்கம்மாள்