உண்மை பொய்யல்ல.

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

சேவியர்.


உண்மை பேசுதல்
உன்னதமானது.

‘பொய்மையும் வாய்மையிடத்து ‘
எப்போதேனும்
பொய்த்து விடலாம்.
எத்தனை காலம் தான்
நிலவைப் பிடித்து
குழந்தைக்குக் கொடுக்கும்
கதைகள் செல்லும் ?

பனிக்கட்டிக்குள் புதைத்த
தீக் கட்டிகள்,
வீரியம் தீர்ந்தாலும்
ஓர் நாள்
வெளிவந்தே தீரும்.

பொய்கள்,
சலுகைச் சமாதானங்கள்.
உண்மைகள் தான்
மனுக்குலத்தின்
மகத்துவம்.

பொய்கள் பெற்றுத் தரும்
வெற்றிகள்
முகத்துக்கு சாயம் பூசும்,
அகத்துக்கோ
அவை காயம் வீசும்.

உண்மை தரும் ஆசனம்
உண்மையில் ஆசனமல்ல.
அவை
இதயத்தை இரணமாக்கும்
இரசாயன இருக்கைகள்.

உண்மையின் தோல்விகள்
பொய்யின் வெற்றிகளை
தோற்கடிக்கும்.

மனசாட்சியைப் பொய்சொல்லி
ஏமாற்றல் இயலாதவரை
பொய்யை கொஞ்சம்
பொறுத்திருக்கச் சொல்லுங்கள்.

உண்மை பேசுங்கள்,
எப்போதேனும்
நீங்கள் நட்ட
பொய்யின் விதை முளைத்தால்
அதன்
உண்மை முகம்
தலை குனியும்.

பின்பு,
உங்கள் உண்மை விதைகளும்
அயலானுக்கு
பொய்க் கிளைகளாகவே
பரிமளிக்கும்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்