இவள் யாரோ ?

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

கே ஆர் விஜய்


சகலத்தையும்
இரண்டு கண்ணில்
பார்ப்பவர்கள்
எங்களை மட்டும்
மூன்றாம் கண்ணில் தான்
பார்க்கிறார்கள்…

வயிற்றுக்காக
அசிங்கத்தைச் சாப்பிடுவது
என்னவோ
எங்களுக்கு
பழகிவிட்டது.

சாவின்
அறிகுறி தெரிந்தும்
உணவுக்காக
தூண்டிலையே
நோக்கி நகர்கின்ற
மீன்கள் போல…நாங்களும்

இறந்தாலும்
பரவாயில்லையென
விளக்கையே நோக்கி
நகர்கின்ற
விட்டில் பூச்சிகள் போல…நாங்களும்

வண்ணவண்ணமாய்ப்
பூத்தாலும்
எங்கள் வாசம்
யாருக்கும் தெரிவதில்லை
காகிதப்பூக்கள் ஆனதனால்…

சிறகுகளுடன்
வளர்ந்திருந்தும்
பறக்கும் சக்தி
எங்களுக்கில்லை
கூண்டுக்கிளியாய்ப் பிறந்ததனால்…

கனவில் மட்டுமே
ஆடைகள் அணிந்துபார்க்கும்
அற்ப ஜீவனம் தான்
எங்கள் வாழ்க்கை.

ஆம்!
எங்களின்
ஆடை கிழிந்தால் தான்
எம் குழந்தைகளின்
அரை நிர்வாணம் மறையும்.

எங்களின்
பெண்மை சிதைந்தால் தான்
எம் குடும்பங்களின்
வறுமை சிதையும்.

வரிப்புலிகள் தான்
நாங்களும்
காட்டு சிங்கங்களின்
விரல்நகங்கள்
எங்கள் தோலைக் கீறுவதால்….

உணர்ச்சியில்லா ஜீவன்கள் தான்
நாங்கள்.
ஆனால்
உணர்ச்சியுள்ள மனிதர்களுக்கு
வடிகாலாகிறோம்…

நாங்கள் நியாயம் கேட்டு
போராடப் போவதில்லை.
சீதையையே
தீக்குளிக்க சொன்ன
தேசத்தில்…. ? ? ?

***
vijaygct@yahoo.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்