நகுலன்
‘இந்து. ‘
‘என்ன ? ‘
‘குழந்தையை அழைத்துக்கொண்டு சற்று வெளியில் சென்று வருகிறேன். ‘
‘ஐந்து நிமிஷம் ‘
அவள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தாள். குழந்தை சுசீலாவை அழைத்துச் சென்று அவளுக்குத் தலையை வாரி, புதிதாக ஆடை அணிவித்து அவளிடம் ‘ஏ, சுசீலா அப்பாவை வெளியில் இறங்கினதும் உன்னைத் தோளில் சுமக்கச் சொல்லக்கூடாது ‘ என்றாள்.
அவன் நகரவில்லை.
‘நீயும்.. ‘
அவள் சிரித்தாள். ‘நல்ல கூத்து. அப்பொழுதுதான் அப்படிக் காலைச் சுற்றி சுற்றி வந்தது போறாது என்றால் இப்பொழுது கூடவா ? அதுவும் ஒரு பெண் குழந்தை வேறு. ‘
அவன் யோசனையில் மூழ்கினான். அவள் காலையா சுற்றினான். அவளிடம் உள்ள ஒன்று இன்றும் அவனை ஏன் இப்படி ஆகர்ஷிக்க வேண்டும். சந்தனம் தேய்க்கத் தேய்க்கக் கமழும் என்பார்கள். இவளும் ஒரு எம்.ஏ பட்டதாரி என்கையில்.
‘இந்து, உனக்கு ஆசையே கிடையாதா ? ‘
அவள் மீண்டும் சிரித்தாள். ‘இருட்டுவதற்கு முன் வந்துவிடுங்கள். ‘
குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்துக்கொண்டு அவன் நடந்தான். ஒரு கடை தென்பட்டது.
‘பழம் ? ‘
அது தலையை வேகமாக அசைத்தது. வேண்டாம் என்ற பாவனையில் தெரு முனையில் உள்ள பூங்காவில் ஒரு சிமெண்ட் ஆசனத்தில் அவன் குழந்தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டான். ரேடியோவில் சூர்ய குமாரியின் பாட்டு.
‘இன்று வெளிச்சம்
நாளை இருட்டு. ‘
யார் யார் எல்லாமோ வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். சரளா– காரில் வந்து இறங்கினாள். அவனுக்கு அவளைத் தெரியும், அவள் தகப்பன் கீழ் ஒரு காலத்தில் குமாஸ்தாவாக இருந்த காலத்தில்– அவர்கள் வீட்டிற்குப் போயிருக்கிறான். சமீபத்தில் அவள் மேல் நாட்டிற்குப் போய் வந்ததாகக் கேள்விப்பட்டான். இந்தப் பயணத்திற்குப் பின் அவளுக்குக் கண் பார்வை குறைந்து விட்டதாகச் சொன்னார்கள். அவள் அணிந்து கொண்டிருந்த கண்ணாடியும் பூதாகாரமாகத்தான் இருந்தது. என்ன இருந்தாலும் அவள் அவனையோ குழந்தையையோ பார்க்கவில்லை.
குழந்தை ‘அப்பா, அந்த மாமி யார் ? ‘
‘மக்கு. ‘
குழந்தை சிரித்தது. அவன் என்ன சொல்ல முடியும் ?
சரளாவுக்குக் கல்யாணம் ஆனபொழுது அவன் அங்குதான் இருந்தான். அடிக்கொருதடவை அவள் கணவன்–அவன் அரசாங்கத்தில் நிதி இலாகாவில் பெரிய வேலையில் இருந்தான் — பெயர் நாகராஜன் — அவளை அப்படித்தான் கூப்பிடுவான்–ஏ மக்கு ஜா, மக்கு மக்கு மக்கு மக்ஜா. ‘
அவளும் ‘டார்லிங், கமிங் ‘ என்று ஓடிவருவாள். அது ஒரு உலகம். ஆனால் இந்த உலகில் உள்ள மக்குகளைப் பற்றி எவ்வளவு நேரம் தான் யோசித்துக் கொண்டிருக்க முடியும் ? சிவன் வந்தான். வழக்கம்போல் அவன் கண் சிவந்திருந்தது. அவனிடம் வந்து ‘நவீனா, இன்னிக்குத் தினத்தைவிட வீட்டில் ஆட்டம் கூடுதல், நீ பாக்கியசாலி, குழந்தையுடன் இருக்கிறாயா ? இரு, நான் பாளையம் வழியாக சென்று இன்னொரு 100 மில்லி அடித்து விட்டுப் போகிறேன். ‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.
குழந்தை ‘அந்த மாமாவுக்கு என்ன ? என்னவோ மாதிரி பேசினாரே ? ‘
‘பாவம். அவாத்து மாமிக்கு உடம்பு சரியில்லை. ‘
‘அப்பா, மாமியைத் தனியா விட்டுட்டு வந்துட்டாரா ? ‘
‘இல்லெ, பக்கத்து வீட்டு மாமி கூடத் துணையிருக்கா. இவர் பாளையத்துக்குப் போய் மருந்து வாங்கிண்டு போகப் போறார். ‘
குழந்தை என்ன நினைத்துக் கொண்டதோ என்னவோ ‘அப்பா, 100 மில்லின்னா என்ன ?அப்பா ‘ என்றது.
‘அதுவா ? அம்மா உம்மாச்சிக்கு வேண்டிப்பா இல்லெ — 100 தேங்கா உடைக்கிறேன்னு — அதைப் போலெ — அந்த மாமாவுக்கு ஜலதோஷம் — வீட்லெயும் மாமிக்குக் காயல். அதனாலெ கடையிலெயே 100 மில்லி மருந்து வாங்கிக் குடிச்சுட்டுப் போவார். ‘
‘ஏம்பா, நாம்பளும் 100 மில்லி பாளையத்திலிருந்து அடிக்கலாமா. ‘
நல்ல வேளையாக அவன் என்ன சொல்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும்பொழுது குழந்தை கவனம் திசை மாறிவிட்டது.
‘அப்பா, அப்பா அங்கெ பாரு ‘ என்று தன் விரலைச் சுட்டிக் காட்டியது. இரண்டு அமெரிக்கப் பிரஜைகள். நல்ல உயரம். இருவரும் தாடி வைத்துக் கொண்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். கழுத்தில் ருத்திராக்ஷ மாலை. குழந்தை அவர்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் ஒருவருடனும் பேசாமல் கடலைக்காரப் பையனிடமிருந்து சிறிது கடலை வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் சென்று இருந்துகொண்டு அதைக் கொறித்துக் கொண்டு இருந்தார்கள்.
‘அப்பா. ‘
‘என்னம்மா. ‘
‘ஏம்ப்பா அவாள்ளாம் கடலை மாத்திரம் தான் திம்பாளா ? சட்டைக்கு மேலே மாலெ போட்டிண்டிருக்கா. அவா யாரு அப்பா ? ‘
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் இந்திராவின் குழந்தை இந்திராவைப் போலவே அவனை ஆகர்ஷித்தது. எனவே அதனிடம் உண்மையைச் சொல்வதென்று தீர்மானித்து விட்டான்.
‘ஹிப்பிகள். ‘
‘அப்படின்னா ? ‘
‘எனக்கு நன்னாத் தெரியாது அம்மா. ‘
‘நான் சொல்றேன் அப்பா. ‘
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘உனக்குத் தெரியுமா என்ன ? ‘ என்றான்.
‘அம்மா சொன்னாள் அப்பா. ஹிப்பி இல்லெ அப்பா சிப்பி. சொல்லு அப்பா சி-ப்-பி. சிப்பி. ‘
‘சிப்பி. அம்மா சொன்னா அப்பா கடல்லெ இருக்குமாம். கிளிஞ்சல் இல்லே கிளிஞ்சல் இரண்டு கிளிஞ்சல் ஒன்னுசேர்ந்தா உள்ளே என்னவோ உறுத்திண்டே இருக்குமாம். ‘
அதற்குமேல் குழந்தைக்குச் சொல்லத் தெரியவில்லை. அவன்தான் சொல்லிமுடித்தான். ‘ஆமாம் குழந்தை, சில சமயம் இப்படி உறுத்தினா முத்துப் பிறக்குமாம். ‘
‘ஆமாம் அப்பா, அம்மா அப்படித்தான் சொன்னாள் ‘ என்றது குழந்தை.
இருட்டிவிட்டது. குழந்தையை அவன் அது சொல்லியும் கேட்காமல் தூக்கிச் சென்றான். அந்த இரண்டு அமெரிக்கப் பிரஜைகளும் அவர்களைப் பார்க்காமல் பேசிக் கொண்டே முன்னே சென்றார்கள்.
வீட்டில் தன் தாயை கண்டதும் குழந்தை அவளிடம் ‘அம்மா இரண்டு சிப்பியைப் பார்த்தோம் ‘ என்றது.
இந்திரா அவனைப் பார்த்தாள். அவன் என்ன சொல்வான் ? அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அவன் ஒரு சிப்பியாகப் பரிணாமம் அடைகிறான் என்றால் அவள் என்ன சொல்வாள்.
திரை தள்ளும் சாகரத்தில் சிப்பியாகப் புரண்டு முத்துப் பெறுவதற்கு அது சகிக்கும் வேதனை.
- கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ.
- பர்ப்பிள் வாம்பாட்.
- கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்
- மனத்தின் வைரஸ்கள் – 3 – விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?
- ஒதுங்கியிரு
- தேடல்..
- விக்னேஷ் கவிதைகள் ஐந்து
- இன்னும் கொஞ்சம்
- ரவிசுப்ரமணியனின் கவிதை
- பூலோகத் திருப்பள்ளியெழுச்சி
- ஜன்னல்
- அழிவின் தீராநடனங்கள்
- மனித சங்கிலி
- வளர்ந்த அமெரிக்கா, வளரும் இந்தியா
- பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 3
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 19 2001
- பிறவழிப் பாதைகள்
- பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம்
- சிப்பி
- அத்தனை ஒளவையும் பாட்டிதான்- 3