சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

சேவியர்


என்ன செய்வது ?
இங்கே,
அர்த்தங்களைவிட
அர்த்தப்படுத்தப் பட்டவை தான்
அதிகமாய் விலை போகின்றன.

இரவல் கண்ணீரை கண்களுக்கு வழங்கி
மரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,
மதக்கூட்டம்
மதிப்பிழந்த மதிப்பீடுகளை
மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு.

எனக்குப் புனிதநூல்கள் பிடிக்கும்
கடவுளர்களையும் பிடிக்கும்
அதற்குப் பிறகு பிடிப்பதெல்லாம்
மதச் சாயம் வடியாத மனித முகங்கள் தான்.

சிலுவையில் இரண்டு கரம் விாித்த சிலை
சிலுவை நிழலில்
இரு கரத்தையும் இறுக்கக் கட்டி
மனசை விாிக்க மறுக்கும் மதக்கூட்டம்.

வலக்கரம் செய்வது இடக்கரம் அறிய வேண்டாம்…
ஜெபிக்கும் போது தனிமை போதும்…
விளக்கைக் கொளுத்தி மரக்காலுக்குள் மறைக்காதீர்கள்…
இவையெல்லாம்
இன்னும் விவிலியத்தின் வார்த்தைகளில் மட்டும் தான்
வாழ்க்கைக்கு வரவில்லை.

கழுத்துச் சங்கிலியில்
தங்கச் சிலுவை சுமப்பவர்களுக்கு
மரச் சிலுவையின் பாரம் புாிவதில்லை.

மத விற்பன்னர்கள்
புனித நூல்களைப் படிப்பதைவிட
விற்பதையே அதிகம் விரும்புகிறார்கள்..

ஆன்மீகவாதிகளோ
ஆயிரம் பேருக்குத் தொிவித்துத் தான்
ஆறு பேருக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

பாவம் பரமன்,
இன்னும் சிலுவையில்
பாவிகளை மன்னிக்கச் சொல்லி
தொடர்ந்து மனுச்செய்கிறார்…
மதமோ பாவிகளை உற்பத்தி
செய்துகொண்டிருக்கிறது.

மனிதமும், மன்னிப்பும்
ஆலயத்துள் பெறப்பட்டு
ஆலயத்துக்குள் விவாதிக்கப்பட்டு
ஆலயத்துக்குளே விட்டுச் செல்லப் படுகிறது.

காய்கள் கனியாகும் எனும் நம்பிக்கையில்
சிலுவை மட்டும் இன்னும் காயவில்லை…

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்,
இன்னும்
சிலுவை கதறிக் கொண்டிருக்கிறது
காதுகளைக் கழற்றிவிட்ட மனிதர்களைப் பார்த்து.

****

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்