தூாிகைக்காடுகள்.

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue

ருத்ரா


ஓசையில்லாமல்
அதோ
அந்த
கன்னி பூமிக்குள்ளிருந்து
வெடிக்கும்
கண்ணிவெடி!
நாணம் என்று
அதற்கு பெயர்.
அன்பே!
நாணப்படுவதாய்
நீ முகம் கவிழ்த்தபோது
இந்த பூமண்டலம்
கவிழ்ந்து போனது.
வானம் சல்லடையானது.
எதற்கு
இந்த அம்பு விளையாட்டு ?
வெட்கப்படும் பண்பு
உனக்கு கவசம் தான்.
அதற்காக
கேடயம் என்று காண்பித்துக்கொண்டு
உன் கண்கள் நிறைய
கூாிய விழிகளின்
அம்பராத்தூணியை அல்லவா
அடைகாத்துக்கொண்டிருக்கிறாய்.
ஒரு முத்துப்பல்லக்கை
உனக்குள் சுமந்துகொண்டிருக்கும்
மூடு மந்திரம் இது.
முகம் ஏறிட்டுப் பார்ப்பதற்குள்
இந்த நட்சத்திரங்களையெல்லாம்
தின்றுமுடித்த
‘பாப் கார்ன் ‘களாய்
ஏப்பம் விட்டது
யார் ?
விழிகள்
விழுங்கும் வானத்துக்குள்
சூாியன்களுக்குக் கூட
புதை குழி வெட்டப்படுகிறது.
காதலுக்குள்
ஒரு கள்ளச்சாராயம் காய்ச்சும்
காந்தக்கண்களின்
காடுகளில்
எல்லாமே சரணம்.
இமைகளை படபடக்கிறாயே

உதடுகளைக்கடித்துகொள்கிறாயே!
மூக்கின் முனையில்
கண்ணுக்குத்தொியாத
பட்டாம்பூச்சிகளின்

‘வேடந்தாங்கல் ‘காட்டுகின்றாயே
உன் நாணம் பற்றி
மயிலிறகுப் பேனாவில்
எழுதினாலும்
மெளனமாய் … அது

ஒரு ஆயிரம் டன் எடையுள்ள
அணுகுண்டை அல்லவா
என் கவிதைக்குள்
விதைத்து வைத்திருக்கிறது.
காதல் எனும்
கனவுகள் மொய்த்ததில்
காலதேவன் கூட
பாிமாணம் இழந்து போனான்.
வெட்கத்தோடு வீசும்
தென்றல் காற்றோடு
நெசவு செய்த
உன் குழல்கற்றையில்
திசைகளுக்கு கூட
சிக்கு விழுந்து விட்டது.
ஆனாலும்
உன் கன்னம் சிவந்ததில்
என் கிழக்கு திசை தொிந்தது.
மற்ற பாதைகள் எல்லாம்
மாித்துப்போனபின்
எதற்கு இந்த திசைக்காட்டிகள்…
எலும்புக்கூடுகளாய் ?
என் கால்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
மைல்கற்களை விழுங்கிய
பயணப்பறவை எச்சமிட்டதில்
அடையாளம் வைத்து
நடந்து வருகின்றேன்.
பளீரென்று உன் முகம் காட்டு!
இந்த கசங்கல் ஓவியம் காட்டும்
கருக்கல் வேளையின்
வண்ணம் குழைத்துக்கொண்டு
உன்னை தொடர்ந்து வருகிறேன்.
பெண்ணே!
ஓலைச்சலசலப்புகளிடையே
ஓடி ஒளித்து விளையாடும்
உன் குங்குமப்பொட்டாய்
அந்த இளஞ்சிவப்புச்சூாியன்
அங்கும் இங்கும்
சிந்துகின்ற
சிவப்பு மது அல்லவா
உன் வெட்கம்!
அந்த தூரத்து பனைமரக்கூட்டங்களின்
தூாிகைக்காட்டுக்குள்
தொடர்ந்து வருகின்றேன்.
காகிதத்தையே
பிய்த்துத்தின்னும்
பிக்காசோ ஒவியமாய்
பசியெடுத்து வருகின்றேன்.
அன்பே!
பளீரென்று உன் முகம் காட்டு.

Series Navigation

ருத்ரா

ருத்ரா