தமிழில் : யமுனா ராேஐந்திரன்
1.
கைமாறு
நீ எனக்கு விஷத்தைக் கொடுத்தாய்
நான் உனக்கு எதைத் திருப்பித்தருவது ?
நான் உனக்கு
என் காதல் வெளியைத் தருகிறேன்
அதனது
கடைசித் துளி வரைக்கும்
2.
காதல்
மணல்கயிற்றைப்போல எனது வாழ்வு
ஒரு மனிதமிருகத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டது
எனது உடல்
அவனது கட்டுப்பாட்டிலிருக்க அவன் விரும்புகிறான்
அப்போதுதான்
அவன் விரும்பியபோது என் முகத்தில் காறித் துப்பலாம்
எனது கன்னத்தில் அறையலாம்
எனது முன்பக்கத்தைக்கிள்ளலாம்
அவன் விரும்பியபடி என் ஆடைகளைக்களையலாம்
எனது அம்மண அழகை தன் கைகளுக்குள் அடக்கலாம்
அப்போதுதான் அவன் விரும்பினால்
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் என்னைப் பிழியலாம்
அவன் விரும்பினால் எனது கைகளை வெட்டலாம்
எனது விரல்களையும் ஒடிக்கலாம்
அவன் விரும்பினால்
எனது காயங்களின் மீது உப்பைத் துாவலாம்
கறுப்பு மிளகை என் கண்களில் துாவலாம்
எனது தொடைகளை கோடரியால் பிளக்கலாம்
விரும்பியபோது
என்னைக் கயிற்றில் இறுக்கித் துாக்கிலிடலாம்
தனது கட்டுப்பாட்டின்கீழ்
எனது இதயத்தை வேண்டுகிறான் அவன்
அதன்மூலம் நான் அவனில் அன்பு செலுத்தவேண்டும்
துாக்கமற்று இரவில் ஐன்னல் சட்டங்களில கையிறுக்கியபடி
தன்னந்தனியே வீட்டில் விம்மியபடி காத்திருக்க வேண்டும்.
எனது கன்னங்களில்
கண்ணீர்த்துளிகள் உருண்டோடுகின்றன
அவனுக்கு நான் சப்பாத்தி சுடவேண்டும்
புனித தீர்த்தம் போலும்
நாற்றம் பிடித்த அவனது உடலின் திரவங்களை
நான் நக்கிக் குடிக்க வேண்டும்
அவனை காதலிக்கும் பொருட்டு அவனுக்காக
மெழுகு போல் நான் உருக வேண்டும்.
அடுத்த ஆணின் மீது
என் பார்வையைத் திருப்பிவிடக்கூடாது
வாழ்நாளெல்லாம் அவனுக்கு நான்
என் கற்பை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்
அவனைக் காதலிப்பதன் பொருட்டு
நிலவொளிரும் இரவொன்றில் பரவசத்தின் வலிப்பில்
நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
3.
பார்வை
நிர்த்தாட்சண்யமாக நான் அழகை தேடினேன
என்னில் வைத்த விழிகளை எடுக்கும் தைரியம்
எவருக்குத்தான் உண்டு ?
எனது பார்வையில்
அனைத்துக் கற்களும் உருகி வழிந்தன
பந்தய மேசையில் அதி விளையாட்டுக்காரன்
அவனது அனைத்து
பந்தயப் பொருட்களையும் இழந்து கொண்டிருந்தான்
இலக்கைப் பார்வை தாக்குமானால்
எவர்தான் அவனது சிந்தனைகளை மீட்கமுடியும் ?
நான் தீட்சண்யமாக உன்னைப் பார்ததேன்
சுற்றிலும் ஒரே வரண்ட பாலைவனம்
நீ ஒரு சாதாரண விடலைப்பையன்
என் கண்களில் சரணாகதியாவதினின்று
நீ எப்படித் தப்ப முடியும் ?
4.
நடத்தை
நீ ஒரு பெண்
இதை நீ ஒருபோதும் மறக்காதே
உனது வீட்டின் நிலைப்படியை நீ தாண்டினால்
ஆண்கள்
உடனடியாக உன்னைக் கவனிப்பார்கள்
தெருவில் நீ தொடர்ந்து நடக்கத் துவங்கினால்
ஆண்கள்
உன்னைத்தொடர்ந்து வந்து விசில் அடிப்பார்கள்
தெருமுனை தாண்டி
மெயின்ரோட்டில் நீ அடியெடுத்து வைக்கும்போது
ஆண்கள்
உன்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்
நடத்தை சரியில்லாதவள் என்பார்கள்
உனக்கு ஆளுமை இல்லையென்றால்
நீ திரும்பிப் பார்ப்பாய்
அப்படியில்லையெனில் நீ போய்க் கொண்டேயிருப்பாய்
இப்போது போய்க்கொண்டிருப்பதைப் போல
5.
நிபந்தனை
நான்
இதயத்தோடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை
நான்
உன்னை ஆழம் வரை இறுக்கிப்பிழியப்போகிறேன்.
நான்
அத்தனையையும் ருசிக்க வேண்டும்
வா.
என் கடனை முழுக்கவும் செலுத்து
என் உடம்புக்குள்
நீ செலுத்த வேண்டிய அனைத்தையும் செலுத்து
மிச்சமின்றிச் செலுத்து
6.
பெண்
பிறப்பு :
இயற்கையின் படைப்பிலான ஐீவராசி அல்ல
எனும் அடிப்படை உணர்ச்சியால்
பெண்ணின் பிறப்பு விரும்பத் தகாததாகிறது.
மனிதர்கள் மட்டுமே
இதனை விநோதமானதெனக் கருதுகிறார்கள்
குழந்தைப்பருவம்:
அவள் பிறந்ததிலிருந்தே
வீட்டின் ஏதோ ஒரு ழூலையில்தான் இருக்கவிடுவார்கள்
அங்கேயே அவள் ஐீவிக்கவும் செய்வாள்
விடலைப்பருவம் :
உனது கூந்தலை இறுக்கிக்கட்டு.
பார்வையை அப்படிஇப்படி அலைபாய விடாதே
அரும்பும் மார்பை பத்திரமாக மறைக்கப்பழகு.
பெண்கள் சங்கிலிகளால் பூட்டப்படவேண்டும்.
போனல் போகிறதென்று
வீட்டுக்குள் மடடும் நகர்வதற்கு அனுமதிக்கலாம்.
இளமை :
கைபடாத கன்னிமையை ஆண்கள் விரும்புவர்
அப்போதுதான் அவர்களால் அதைக்கிழிக்கமுடியும்
சிலர் காதலின் பெயரில்
சிலர் கல்யாணத்தின் பெயரில்
முதுமை :
இறுகிய மெல்லிய தோல் சுறுங்கிப் போய்விடும்
மாதவிலக்கு வேதனை என்றென்றும் இல்லாது போகும்
சொல்லப்பட்ட கதையின் முடிச்சு மறுபடி அறுபடும்
மரணம்:
வேண்டப்படாதவர்கள் போல் விலக்கப்படுவோம்
இயற்கையின் ஐீவராசிகளில் ஒன்றல்ல
எனும் உள்ளுணர்வின்படி
ஒரு பெண்ணின் சாவு என்பது விரும்பப்படும்
7.
குறைந்த விலைச் சரக்கு
சந்தையில் குறைந்தவிலைக்கு விற்கப்படும் சரக்கு
பெண் போல் வேறேதும் இல்லை
தங்கள் கால்கைக்குப் பூச ஒரு பாட்டில்
வாசனைத்திரவியம் கிடைத்தால் போதும்
மூன்று நாட்கள்
சந்தோஷத்தில் துக்கமின்றித் தவிப்பார்கள்
தங்களது மேனிக்குத் தேய்க்க
ஒரு சில சோப்புகள் கிடைத்தால்போதும்
தமது கேசத்துக்கு நறுமணதிரவம் கிடைத்தால்போதும்
அவர்கள் அடிமைகள் போல் ஆவார்கள்
தமது சதைகளைக் கூறுபோட்டு
உண்ணிகளின் சந்தையில் வாரம் இருமறை விற்பார்கள்
தமக்கு மூக்குத்தி கிடைத்ததால்
எழுபது நாள் வரையிலும்
பாதத்தை நக்கிக் கிடப்பார்கள்
விலகும் சேலைகிடைத்தால்
முழு ழூன்றரை மாதமும் படுத்துக் கிடப்பார்கள்
வீட்டுப் பிராணியாவது அவ்வப்போது கத்தும்
ஆனால் பெண்ணின் உதடுகளின் மீது கேவலமாக
பூட்டு போடப்பட்டிருக்கும்
தங்கப் பூட்டு
8.
அழையாத மணி
எத்தனையோ விஷயங்கள் ஒலிக்கிறது
உடலின் செல்கள்
நடனமிடும் கால் கொலுசுகள்
வெள்ளிக் கைவளையல்கள்
மழைக் காலத் தாரைகள்
கண்ணாடி ஐன்னலில் விழும் போது
இசை கேட்கிறது
கனவுக்குள் இசை ஒலிக்கிறது
மனசுக்குள் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு
தனிமை ஒலிக்கிறது
மிகநெருக்கமான எனது வாசல்மணி மட்டும்
எப்போதும் ஒலிப்பதேயில்லை
9.
ஏவாள்
ஏன் ஏவாள்
தனது ஆசைகளை அடக்கிக் கொள்ள வேண்டும் ?
தனது அடிகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் ?
தனது தாகத்தை காண்பிக்கக் கூடாது ?
ஈடன் தோட் டத்தில்
ஆதாம் நகர்ந்து கொண்டிருப்பதற்காக
ஏன் ஏவாள் கட்டாயப்படுத்தப்படவேண்டு ?
ஏவாள்–
உனக்குக் கனி கிடைத்தென்றால்
எப்போதும் அதைப் புசிப்பதனின்று நீ பின் வாங்காதே
10.
வாழ்தல்
விழிப்பதும் துாங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக் கொண்டிருக்கறேன்
நான் இக்கணமே இறந்து போனால்
அவர்கள் சொல்வார்கள் :
‘நீ வாழ வேண்டும்ஙு
நான் விலகுவதை அவர்கள் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள் :
‘ நீ இருப்பதே அவமானம்.
செத்துத் தொலை ‘
அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
திண்ணை
|