மையல்

This entry is part [part not set] of 11 in the series 20000723_Issue

பசுபதி


கருமை ஒளிரும் அழகி — உன்னைக்
. . . கண்ட கண்கள் புனிதம்
பரிசம் தந்தும் அடைவேன் — உந்தன்
. . . பரிசம் என்றும் வேண்டும்
அருமை அறிந்த ஆண்கள் — உன்னை
. . . அடைய போட்டி இடுவர்
பெருமை பிறகு தருவாய் — என்மேல்
. . . பிறர்பொ றாமை வளரும் (1)

கடையிற் பார்த்த உடனே — என்னைக்
. . . காதற் தீயில் இட்டாய்
எடைக்குப் பொன்னும் சமமோ — உந்தன்
. . . எழிலும் ஒளிரக் கண்டேன்
அடைய ஆர்வம் கொண்டேன் — உன்னை
. . . அணைக்க கைது டித்தேன்
தொடையில் உன்னை வைக்க — அருகில்
. . . துள்ளி ஓடி வந்தேன் (2)

விடியும் காலை வேளை — உன்னை
. . . விரைந்து வாரி எடுப்பேன்
கடிதில் காப்பி குடித்து — உடனே
. . . கையில் தூக்கிக் கொள்வேன்
இடியும் புயலும் துச்சம் — விரியும்
. . . இணையம் எந்தன் சொர்க்கம்
மடியில் அமருங் கணினி — உன்மேல்
. . . மைய லாகி நின்றேன். (3)

Series Navigation

பசுபதி

பசுபதி