ஆதிவாசிகள்

This entry is part 8 of 8 in the series 20000221_Issue

ரேகா ராகவன்


**** வார நாட்களில்…..

அவசர உலகம்
அசுர கதி
சுவாசமும்
அபஸ்வரமாய்

விடுபட்டுக் காற்றுடன்
கலக்கத் துடிக்கும்
மரக்கிளைகளில் சிக்கிய
காற்றாடிகளாய்

அடக்கப் பட்ட
காற்று
விரைவு உணவகம்
வையக விரிவு வலை

வெளிச் செய்தியனைத்தும்
கறுப்பு வெள்ளையாய்க் கக்கும் கணிப்பொறிகளில்
வலிய மாட்டிய எலிகளாய்

இறுதிகளில்….

கண்ணுக்குக் குளிர்ச்சியாய்
ஒற்றைச் சுடரில்
மனம் பற்றி எரியும்
வாசனை மெழுகுகள்

உறைந்த உணர்வுகளை
உலுக்கி எழுப்பும்
கட்டுக்கடங்காத
வெளிக்காற்று

உள்ளிருந்து வெளியெல்லாம்
பார்த்துப்பின்
திறந்த வெளிவந்து
உள்ளுக்கு உன்மத்தம்

கயிற்று ஊஞ்சலில்
காற்றின் தாலாட்டில்
கண்களுள் இயற்கையும்
இதயத்தில் இசையும் நிரப்பி
அடுத்த வார அவசரத்துக்கு
ஆயத்தமாக,

இரண்டு நாட்களேனும்
சுகமாய், இதமாய், மெதுவாய்…..

அதில் இரண்டு நிமிடமேனும்
புதுயுக மனதிலும் சற்றே எட்டிப்பார்க்கும்
அவரவர் ஆதிவாசித்தன்மை.

WWW – வையக விரிவு வலை

ஸன் டி.வி. யில் கணினிகள் பற்றித் தமிழில் வந்த ஒரு நிகழ்ச்சியில் திரு. மு. கருணாநிதி அவர்கள்

WWW- வை தமிழில் ‘வையக விரிவு வலை ‘ என மொழி பெயர்த்துத் தந்ததாகச் சொன்ன ஞாபகம்.

Thinnai 2000 February 28

திண்ணை

Series Navigation<< ஜெயமோகன் கவிதைகள்

ரேகா ராகவன்

ரேகா ராகவன்