நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

செந்தில்



அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய நேர்ந்தது. 3 வருடங்களுக்கு பிறகு நான் மேற்கொண்ட திடீர் பிரயாணம் ஆகியமையால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எனது பயணத்தின் போது நடந்த அனுபவங்களினால் சம்பவங்களினால் என் மனதில் எழுந்த பிரதிபலிப்பே இந்த சிறு குறிப்பு.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நான்கு வழிச்சாலைகள் முடிந்தும் முடியாத நிலையிலும் இருப்பது குறித்து நடுத்தர மற்றும் புதிதாக கார் போன்ற வாகனங்கள் வைத்து கொண்டிருக்கும் மக்களிடம் பெருமிதமும் சிறு அங்கலாய்ப்பும் தெரிகிறது. பிரயாணத்தை இலகுவாக செய்துவிட்டது என மக்கள் கருத்து இந்த சாலை வளர்ச்சி குறித்து அபிப்ராயம் இருந்தாலும், இந்த 4 வழி சாலைகள் தவிர தமிழகத்தின் மற்ற எந்த ஒரு சாலையும் படு மோசமாக உள்ளது எனலாம். சாலை கட்டுமானங்கள் தமிழகத்தை குத்தி கிளறி இரண்டாக பிளந்து விட்டது போன்றே தொன்றுகிறது. எல்லா சிறு நகரங்களும் அவற்றின் இயல்பு வாழ்க்கைகளும் வெகுவாக பாதிக்கபட்டுள்ளன. ஆறு, குளம், ஏரிகள், நீர் நிலைகள், பொது காரியங்களுகான இடங்கள் (இடுகாடுகளும், மயானங்களும் உட்பட) மிகவும் மாசு படிந்த நிலையில்(contaminated) குப்பை கூளங்களாகவும் தமிழகத்தின் பெரு நகரங்களும், சிற்றூர்களும், பெருகிராம வணிகமையங்களும் காட்சி தருகின்றன. நலிந்த, மெலிந்த, நோயுடன், பேதலித்த நிலையில் பெரும்பாலான தமிழக மக்கள்.

புழுதியும், வியாதிகளை பரப்பும் கொசுக்களை வளர்க்கும் கழிவு நீர் நிரம்பிய ஏரிகளும், குளங்களும், தெருக்கு தெரு குப்பை மேடுகளும், கழிவு நீர் கலங்கி கசியும் குடி நீர்குழாய்களும் முறையற்ற வளர்ச்சிக்கு சான்று பகர்வன போல. ஆற்றுபடுகையெல்லாம் சுரண்டபட்டு புழுதி களங்களாகவும், அல்லது முள்வேலி மரங்கள் நிறைந்த பாலைக்காடுகளாகவும் காட்சி தருகின்றன.

குழந்தை தொழிலாளர்களை சட்டம் ஈட்டி ஒழித்தாயிற்று என்று முழக்கம் கடந்த ஆண்டில்தான். ஆனால், சுற்றுலா மையங்கள், கோவில்கள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள் என எங்கு பார்க்கினும் கையேந்தி கொண்டோ, வேலை பார்த்து கொண்டோ, ஏதோ ஒன்றை விற்க முனையும் சிறு குழந்தைகள் தமிழகமெங்கும். இப்பொழுது, தமிழ் தெரியாத குழந்தைகள் வேறு!

கட்டுக்குள் அடங்காதா விலைவாசி உயர்வு! ஒருவித பதட்டத்துடன் சீற்றத்துடன் திரியும் நடுத்தர மக்கள். காய்கறிகள் தொடங்கி, குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் முதல், நிலம் வீடு ஆகியவற்றின் வரலாறு காணாத விலையேற்றம் மக்களை அவர்களது எதிர்காலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது (அல்லது கிரிக்கெட் போட்டிகளும், சாராயக்கடைகளும், புதிய சினிமாக்களும் இருக்கவே இருக்கிறது சிந்திக்கவிடாமல் தடுக்க!) எனலாம்.

கண்ணுக்கு தெரியும் விவசாய நிலங்களையும், கனிம வளங்களையும், மற்ற இதர வாழ்வாதாரத்திற்க்க்கான அத்தனை வளங்களையும் போட்டிபோட்டுகொண்டு கபளீகரம் செய்தாகிவிட்டது. இனிமேல், இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் வாங்குவதற்க்கு ஒன்றுமில்லை என்றளவிற்க்கு அரசியல் அதிகார-ஊழல் மையங்கள் இந்தியாவை விலைபேசியதோடு, அதிக லாபத்திற்க்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசவும் தயாராகிவிட்டார்கள் எனலாம். இந்தியாவை சுற்றி உள்ள சிறு தீவுகள்தான் மீதம்.

தமிழ் நாட்டின் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள கலை, அறிவியல், மற்றும் பொறியியல் கல்லூரிகள், பல்கலை கழகங்ககள் தரம் குறித்து மாநில, மத்திய அரசாங்கங்களுக்கு அக்கறை உள்ளதா? எந்தவித கவனமும் ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை! இவைகளில் படித்து பட்டம் வாங்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து? யாருக்கென்ன கவலை?

வீதிக்கு வீதி அந்தெந்த வார்டுகள் முதல் கோட்டை வரை உள்ள அரசியல் தலைவர்கள் முதல் அவர்களது தகிடுதத்தங்களுக்கும் சேர்த்து தங்களை தற்கால ராஜ ராஜ சோழர்களாக விவரிக்கும் வகையில் கட்அவுட்டும் பேனர்களும் வைத்து கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கும், அரசாங்க பொது சொத்துகளை தொடுபவர்களுக்கும், அபரிப்பவர்களுக்கும், அளவுக்கு மீறி சொத்துசேர்ப்பவர்களுக்கும் ராஜ ராஜ சோழன் காலத்து அரசில் என்ன தண்டனை என்பதையும் இந்த கட் அவுட்டு பேனர் பிரமுகர்களுக்கும் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். தற்க்கால நீதி அரசர்களும் ஊழல் தடுப்பு நிர்வாகமும் இதையெல்லாம் படித்து இவர்களுக்கு பாடம் புகட்டினால் மிக நன்றாக இருக்கும்.

Series Navigation

செந்தில்

செந்தில்