அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்

This entry is part of 37 in the series 20100912_Issue

மலர்மன்னன்


திரு(வையாறு) லோக(நாத சாஸ்திரி) சீதாராம் பாரதி அன்பர்களில் குறிப்பிடத் தக்கவர். பாரதியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவி ஸ்ரீமதி செல்லம்மா பாரதி திருச்சியில் வசித்தபோது அவருக்கு மிகவும் அனுசரணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தவர், சீதாராம். ஆண்டுதோறும் பாரதியாருக்கு சிராத்தம் செய்து, தம்மை பாரதியாரின் மகனாகவே பாவித்துக் கொண்டவர். ‘சிவாஜி’ என்ற பெயரில் அவர் நடத்தி வந்த கலை-இலக்கிய-சமூகவியல் இதழ் தி. ஜானகிராமன் உள்ளிட்ட பல பழைய தலைமுறைப் படைப்பாளிகளின் நாற்றங்காலாகவே விளங்கியது. சிறந்த தேசியவாதியான திருலோக சீதாராம், நெற்றியில் எப்பொதும் அம்பிகையின் குங்குமம் துலங்க, ஆன்மிகத் தேடலும் மிகுந்தவர். ‘தேவர் சபை’ என்ற பெயரில் அவர் நடத்தி வந்த இலக்கிய அமைப்பின் மாதாந்திரக் கூட்டங்கள் சுவாரஸ்யமானவை. சாரீர வளம் மிக்க சீதாராம், பாரதி பாடல்களை கன கம்பீரமாகப் பாடுவதில் உற்சாகமிக்கவர், கேட்போருக்கும் உற்சாகமூட்டியவர். .
திருலோக சீதாராம் தேர்த்லிலும் போட்டியிட்டதுண்டு. அப்போதெல்லாம் தெருவில் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வதுதான் வாக்காளர்களிடம் ஆதரவு கோரி அவர் மேற்கொண்ட நூதன பிரசாரமுறை!

திருலோக சீதாராமின் இலக்கியத் தேர்ச்சிக்கு ஓர் அததாட்சியாக நிற்கிறது, இலக்கியப் படகு என்கிற அவரது தொகுப்பு. சென்னை கலைஞன் பதிப்பகம் பல ஆண்டுகளுக்கு இதனை வெளியிட்டது. தேர்ந்த இலக்கிய ரசிககரான கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, ஒரு வியாபாரியாக இல்லாமல் ரசிகராக இருந்து புத்தகங்களை வெளியிட்டவர். அவரது அலுவலகம் பல படைப்பாளிகள் கூடிப்பேசும் கூடமாகவே திகழும். அங்கு பல்முறை திருலோக சீதாராமுடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவர் பாரதி பாடல்களைப் பாடியும் கேட்டிருக்கிறேன்.

கவிதைகள் பல இயற்றியுள்ள சீதாராம், அண்ணாவைப் பாராட்டியும் ஒரு நீண்ட கவிதை பாடியிருக்கிறார். ‘சிவாஜி’யில் அவர் எழுதிய அக்கவிதை, பின்னர் 1948-ல் அண்ணாவைப் பாராட்டுவதற்கென்று வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலும் இடம் பெற்றது.

அண்ணா 1948-ல் திராவிடர் கழகத்தில்தான், அதன் பொதுச் செயலாளராக, 39 வயது முதிர் இளைஞராக இருந்தார். எனினும் அப்போதே அவர் எந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினரின் அபிமானத்திற்கும் உரியவராய் இருந்தார் என்பதற்கு திருலோக சீதாராம் எழுதிய இக்கவிதையே சாட்சி:

பேச்சுக்கு ஒரு கலைஞன்
-திருலோக சீதாராம்-

எந்தாய் நறு நாட்டின்
இன்னருமைச் சோதரர்கள்
நொந்தே யழிந்திருக்கும்
நோவிதனுக்கா யிரங்கிச்

சிந்தாத தேன் வார்க்கும்
சிந்தனைகள் செந்தமிழின்
கந்த மடை தான் திறந்து
சாய்த்திடுவான் காணீரோ!

பேச்சுக்கு ஒருகலைஞன்
பேசுங்கால் அதிரவரும்
ஏச்சுக்குப் பணிவறியா
எண்ணத்து ஒரு சிற்பி

விந்தையவன் உள்ளத்தே
விளைந்துவரும் எண்ணங்கள்
வந்தணையச் சொற்களெலாம்
வழிபார்த்து நின்றிருக்கும்

சொல்லின் சிலம்பசைத்தாற்
சோதி மணிப்பரல் சிதறும்
சொல்லிற்கருவுயிர்க்கும்
செம்பொருளிற் சொல்சிறக்கும்

பேச்சிற் கனலடிக்கும்
பெய்யுமழை காலிரங்கும்
வீச்சொன்றில் அறியாமை
விழும் அலறித்துடிக்கும்

கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே

காணுகின்ற காட்சிகளில்
கருதும் பொருள்களிலே
பேறமுயர் சிந்தனைகள்
பேசவரும் சித்திரங்கள்

அளந்து வரும் சொற்கள்
ஆழ்ந்த பொருள், இருளூடே
பிளந்துவரும் மின்வெட்டுப்
பேச்சுக் கொரு புலவன்

அண்ணாவென்றே இளைஞர்
அன்போடரு கணைவார்
பண்புடைய சொல் ஒன்றாற்
பச்சையன்பு பாய்ச்சிடுவார்

சிந்தனையே மாந்தர்க்குச்
சிறப்பருள்வ தாதலினால்
சிந்தனையும் சொல்திறனும்
சேர்க்குமவர்ப் போற்றுகிறோம்.

இக்கவிதையில் குறிப்பாகப் பின் வரும் வரிகளைக் கவனிக்க வேண்டும்:
‘கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே.’

அண்ணாவின் கொள்கைகளை ஏற்காதவர்களும் அவரது இனிய பேச்சாற்றலைக் கேட்கையில் மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென மயங்குவர் என்கிறார், கவிஞர்!

+++++

Series Navigation