மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை நாட்களுக்குத் தற்கூற்றுமொழியில் தனக்குத்தானே அல்லது சூன்யத்துடன் கதையாடமுடியும். தமது பால்ய வயது அனுபவங்களையும், தாமறிந்த கதைகளையும் இவரது ‘போ’ மொழியில் புரிந்துகொள்ளவல்ல ஒரே மனித உயிராகவும் துணையாகவுமிருந்த அவரது அன்னை இறந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்று தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பொழுதை இயற்கையோடு கழித்தவராம்: பறவைகளும் விலங்குகளும் தமது மூதாதையார் மொழிகளை அறிந்தவைகள் என்ற வகையில் அவற்றுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிவருவாராம்.

கடந்த மாதம் முதல் வாரத்தில் 85வது வயதான அம்மூதாட்டி இறந்துபோனாள். அவளோடு இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்டுவந்த மிகப்பழமையான மொழிகளில் ஒன்றும் ஒப்பாரிக்கு ஆளின்றி புதைக்கபட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சொற்கள் உலகை நமக்கு புரியவைக்கின்றன. சொற்கள் கட்டமைக்கும் உலகமென்பது எல்லகளற்ற பரந்த வெளி, பேரண்டம். ஒவ்வொரு மொழியும் தமது சொற்களுக்கென தனித்துவத்தைக் கூர்தீட்டிவைத்திருக்கிறது. சொல்லின் புரிதல் அகராதிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. எண்பத்தைந்து வயது போவா பெண்மணியோடு ‘அவளுடைய மொழிமாத்திரமல்ல, அம்மொழிகொண்டிருந்த அறிவுத் திரட்சியும் – வரலாறு, பண்பாடு, சடங்குகள், மரபுகளென்ற பிற விழுமியங்களும் காற்றில் கலந்தன. போவா பெண்மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பல்வேறு வகையானத் தாவரங்களின் பெயர்கள் மனப்பாடமாகத் தெரியுமாம், வேறு மொழிகளில் மூங்கிலுக்கு அவ்வளவு பெயர்களில்லை என்கிறார்கள். ஆக ஒரு மொழியின் இழப்பென்பது பண்பாட்டின் இழப்பு மாத்திரமல்ல பல நேரங்களில் இயற்கையையும் அதன் கூறுகளைப்பற்றிய ஞானத்தையும் தன்னகத்தே கொண்ட இழப்பு. .

அந்தமான் நிக்கோபார் தீவு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமொழிகளுள் போவாமக்களின் போ(Po) மொழியுமொன்று என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 5000பேர்கள் பேசிவந்த மொழி. உலகில் அதிகமொழிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கியநாட்டு சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிலிலுள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1635, அவற்றுள் 37 மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானபேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவிலுள்ள மொழிகளுள் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகுமென்றும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது(1). இந்திய அரசியல் சட்டம் 22 பிரதான மொழிகளை அரசு மொழியாக ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் நாடு தழுவிய மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் இருக்கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள 85 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய் மொழி அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடியேறிவசித்துவரும் அவர்களுக்கு இன்று இந்திதான் பிரதான மொழி. வளர்ந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் இன்ன பிற மொழிகள் இந்திக்காகத் தம்மை அங்கே அழித்துக்கொண்ட பிறகு ஆதரவற்ற ‘போ’மொழி இத்தனை நாள் நீடித்ததே கூட வியத்தலுக்குரியது. தனிமனிதன், அவன் சார்ந்த சமூகம், அரசு இம்மூவரும் மொழியின்பால் அக்கறைகொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்திய மைய அரசைப்பொறுத்தவரை மாநிலத்திலுள்ள மொழிகளுக்கு ஆதரவாக எடுக்கும் எந்த முடிவும் இந்திய ஸ்திரத் தன்மைக்கு எதிராக முடியுமென்ற உண்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தவிர குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இராஜஸ்தானியர்களும், பீகாரிகளும் தங்கள் மொழியிடத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டபிறகு, பிறருக்கு ஒரு நீதியெனில் எப்படி? ஆக பிறமொழிகளைப்போலவே தமிழின் தலையெழுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழர்களைச் சார்ந்தது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கநாடுகளில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மொழிகளும். ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சும் ஆங்கிலமும் எஜமானர்கள். எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் வேலைசெய்தவர்களிற் பலர் பின்னாட்களில் சென்னைக்குச் சென்று துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலைபார்த்து பொங்கலுக்கும் ஊர் திருவிழாவுக்கும் கிராமத்துக்கு வருவார்கள். கூட்டுறவு வங்கிகளிலும், சில நேரங்களில் சென்னையிலுள்ள தங்கள் பண்ணையாட்களிடமும் கடன்பட்டு வரப்பில் குடைபிடித்து நடக்கப்பழகிய ஒன்றைரை ஏக்கர் நிலக்கிழார்கள் ஜமீன்தார் மனோபாவத்துடன் தனது முன்னாள் பண்ணையாட்களை விசாரிப்பார். அந்த முன்னாளும் வேட்டியும் சட்டையும் போட்டபின்பும், ‘ஐயா ஏதோ உங்கள் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்’, என்று கூறிவிட்டு கொத்தவால் சாவடியிலிருந்து கொண்டுவந்த வாழைப்பழதாரை கொடுத்துவிட்டு காலில்விழ, ஆசீர்வாத கூத்தும் நடக்கும். காமன் வெல்த் நாடுகள் என்ற முத்திரையும், கிரிக்கெட் மட்டையை தூக்கிபிடிக்கிறபோதும், ஆங்கிலத்தைப் பேசுகிறபோதும் அதுதான் நடக்கிறது. மேதகு விக்டோரியா மகாராணிக்கு நாம் நிரந்தர அடிமைகள். ஆண்டானிடமிருந்து அடிமை விடுதலை பெறுவதும், முதலாளியியத்திடமிருந்து தொழிலாளியின் விடுதலையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமுமென அரசியல் விடுதலையைச் சந்திக்க முடிந்தது, ஆனால் பண்பாட்டு விடுதலை என்பது வேறு, அதற்கு விடுதலைக்கான கதவுகள் அடைப்பட்டதுதான் ஒருபோதும் திறவாதவை. நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றானபிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்.

அந்தமான் தீவு போவாப் பெண்மணியின் உதாரணத்தை பிரான்சு நாட்டிலுள்ள மொரீஷியஸ் தமிழர்களின் வீட்டிலும் சந்திக்கிறேன். ஒவ்வொரு மொரீஷியர் தமிழர் வீட்டிலும் எழுபது அல்லது எண்பது வயதில் ஒரு முதியவரோ அல்லது மூதாட்டியோ இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் வருமென்று சம்பந்தப்பட்டவர்களின் மகனோ மகளோ தெரிவிப்பார்கள். பிறகு திடீரென்று ஒருநாள் அந்த முதியவரையோ அல்லது மூதாட்டியையோ கைப்பிடித்து அழைத்து வருவார்கள். இருக்கின்ற மூன்று படிகளை ஏறிமேலேவர ஐந்து நிமிடமெனில், மூச்சிறைப்பு அடங்கி சுவாசம் தனதியல்புக்கு வர ஒரு ஐந்து நிமிடம்பிடிக்கும். அதற்குள் அவரது மகனோ மகளோ பேசு பேசு என்று அவசரப்படுத்துவார்கள். வெகுகாலமாக உபயோகமின்றிக் கிடந்த ‘தமிழ்’, காற்றும் உமிழ்நீருமாக கலந்து வரும்: ‘வணக்கம்’ என்பார், பதிலுக்கு ‘வணக்கம்’, என்பேன். ‘பொண்டாட்டி எப்படி?’ என்று அடுத்த கேள்விவரும், ‘இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று? தெரியாமல் நான் என் மனைவியைப் பார்க்க, அவள் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டிருப்பாள். நான் விழிப்பதைவைத்து, தமிழில் பேசி என்னை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். அடுத்த சில மாதங்களில் அம்மொரீஷியரின் குடும்பத்தில் தமிழறிந்த அந்த ஒரு உறுப்பினர் இறந்திருப்பார். தமிழ்மொழியும் அவரோடு சேர்ந்து அக்குடும்பத்திலிருந்து விடுபட்டிருக்கும். இது பெரும்பாலான மொரீஷியஸ் தமிழ் குடும்பங்களின் நிலை. இன்றைய மொரீஷியர் தமிழரின் தமிழர் பண்பாடு¦ன்பது நிறம், பெயர்கள், கடவுள் வழிபாடுகளில் மட்டுமே முடங்கிக்கிடக்கிறது, மொழி அடையாளமில்லை. தென் ஆப்ரிக்கா, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள் தமிழரிடத்திலும் எஞ்சியிருப்பது மேற்கூறப்பட்ட குறியீடுகள்தான். அதாவது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்ட நமது மூதாதையர்களின் இன்றைய நிலைமை இது. ஒரு நூறாண்டுகாலம் கடந்ததென்றால் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அல்லது இந்திய தமிழ்க்குடும்பங்களுக்கும் இதுதான் நேரும்.

தமிழர்கள் தமிழை மறக்காலிருக்க எனக்குத் தெரிந்த யோசனை, பேசாமல் தமிழை வரமளிக்கிற தேவதையாக மாற்றி, மாநாடுகளைக்கூட்டாமல் குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வது. நமது பொதுப்பண்பின்படி தீமிதித்தோ, தேர் இழுத்தோ, கிறிஸ்துவ சகோதரர்களெனில் தமிழ்பூஜை வைத்தோ மொழியை நாம் மறக்காமலிருக்க இது உதவும். தமிழர்களின் நலன்கருதி இனமானத் தலைவர் வீரமணியும் கலைஞரிடம் இதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், இப்போதுள்ள சூழலில் அவரும் கேட்பார் போலத்தான் தெரிகிறது.

—————————————
1. Le Monde 27-2-2010

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா