பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

சின்னக்கருப்பன்


எஸ்கே என்னும் என் இனிய நண்பர் ஒரு முறை சொன்னார். தன்னை உங்களுக்கு சமமானவனாக நினைத்துக்கொள்கிறவர் இழி நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்யமுடியாது. அது மட்டுமல்ல, நீங்கள் நல்ல நிலையில் இருப்பதே அவர் உங்கள் மீது தீராத பகையை கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் ஆகிவிடும். அதற்கு ஒரு நிகழ்ச்சியையும் சொன்னார்.

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ரத்தத்தை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த நண்பருக்கு ஒரு தொழிலதிபர் உதவி செய்வதாக நினைத்து தனது கம்பெனியிலேயே வேலையும் போட்டுக்கொடுத்தார். ஆனால், வெகு விரைவிலேயே அந்த தொழிலதிபருக்கு எதிராக ஆட்களை சேர்த்துக்கொண்டு கல்வரத்தில் இறங்கினார் அவரது நண்பர். வேறு வழியின்றி அவரை வேலையிலிருந்து எடுக்கவேண்டியதாக ஆயிற்று. அதுவே மனித மனம். நேற்றுவரை தனக்கு சமமாக இருந்த ஒருவன் இப்படி தனக்கு வேலை தரும் அளவுக்கு உயர்ந்ததை ஒப்புக்கொள்வதில்லை. அது ஆழமாக வன்மமாகவே மாறிவிடுகிறது.

பாகிஸ்தான் இப்படிப்பட்ட ஒரு நாடு. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என்று யாருமே பாகிஸ்தானை வெறுத்ததில்லை. ஏன் பாகிஸ்தான் வெறுப்பையையே மையமாக கொண்டுவளர்ந்ததாக சொல்லப்படும் பாஜகவின் தலைவரான வாஜ்பாயி கூட அருகாமை நாட்டை நாம் நட்பாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு கட்டாயம் என்று பகிரங்கமாகவே பேசினார். விரோதிகளை நாம் தேர்வு செய்யலாம். ஆனால் அருகாமை நாட்டை தேர்வு செய்யமுடியாது என்றார். மிகப்பெரிய அளவிலான நட்பு முயற்சிகள் பாஜகவின் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு முறையும் அது இந்தியாவின் உதவியையும், பேச்சுவார்த்தையையும் பாகிஸ்தான் எதிர்பார்க்கும் நிலைமை வரும்போதெல்லாம் அது குமுறுகிறது. கொந்தளிக்கிறது. அவமானப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டதாக கருதுகிறது. அதிலிருந்து மீள்வதற்காக மேலும் அதிகமாக வன் வார்த்தைகளை பேசுகிறது. செயலிலும் இறங்கி மேலும் சிறுமைப்படுகிறது.

பெப்ரவரியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில் இருக்கும் ஜமாத்-உத்-தாவா என்ற அமைப்பு பாகிஸ்தான் எங்கும் ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறது. அதன் மையமான கோஷம் காஷ்மீர் அல்ல. இந்தியா. இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பு. ஆமாம், இதனை தடை செய்வதை மிக எளிதாக செய்யும். ஏராளமான முறைகள் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இதுவும் பாகிஸ்தானின் அரசின் ஒரு நீட்சியே.

இந்த அமைப்பு பகிரங்கமாக தனது ஊர்வலங்களில் 26/11 மும்பை தாக்குதல் போல இனி ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கிறது. அதற்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பளிக்கிறது. ஆனால் அதே வேளையில் இந்தியா பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை நிறுத்தியது தவறு; அது இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கே ஊக்கம் அளிக்கும் செயல் என்றும் பாகிஸ்தான் பேசுகிறது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்று இந்திய அரசு அறிவித்த வினாடியே, இந்திய அரசு தன்னிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டதால்தான் பேச ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் அறிக்கை விடுகிறது.

பாகிஸ்தான் நல்ல பக்கத்துவீட்டுக்காரன் அல்ல. பங்களாதேஷ் தற்போது இந்தியாவின் நட்பு நாடாக ஆக விரும்பி அதற்கேற்றாற்போல அங்கிருந்த பயங்கரவாதிகளை இந்தியாவின் போலீசுக்கு அளித்திருக்கிற்து. இந்திய மக்களுக்கு எதிரான வன் செயல்களில் ஈடுபட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த கன்னூர் அயூப் (கே பி சபிர்), தடியண்டேவிடே நாசிர் ஆகியோரை கைது செய்து இந்திய போலீஸின் வசம் ஒப்படைத்திருக்கிறது.

ஆனால், பாகிஸ்தானோ நேர்மாறான பாதையில் கடந்த 60 வருடங்களாக சென்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அது படு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம், மேலைநாடுகளிடம் சென்று இறைஞ்சி இந்தியாவின் கோபத்தை தணிக்கவும், பாகிஸ்தானை தாக்காமலிருக்க இந்தியாவை மிரட்டும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

நேரடியாக இந்தியாவை எதிர்கொள்ள வக்கும் தைரியமும் இல்லாத பாகிஸ்தான், ஒழுக்கக்கேடான முறைகளில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களிலும் கள்ள இந்திய நோட்டு அச்சடித்து வினியோகித்து பொருளாதாரத்தை சீர்குலைப்பதிலும், இந்தியாவின் முன்னேற்றத்தை எப்பாடுபட்டாவது நிறுத்திவிட வேண்டும் என்று அதன் தொழில்நுட்ப மையங்களிலும், பொருளாதார மையங்களிலும் குண்டுகளை வைத்து இந்தியாவை சிதறடித்துவிட விரும்புகிறது.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

சாலமன் பாப்பையா :நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

கருணாநிதி :போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.

இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான எதிரியோடு போரிடாமல் இருப்பதே கேவலமானது என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். இவர்களோடு பேச்சுவார்த்தை மூலம் ஆகப்போவது ஒன்றுமில்லை.

பாகிஸ்தான் ஒரு நல்ல பக்கத்துவீட்டுக்காரன் அல்ல. அதனை புரிந்துகொள்வது இந்திய அரசியல்வாதிகளுக்கு நல்லது. இல்லையேல் இன்னும் பல 26/11களை பார்த்தும், பல இந்தியர்களை இழந்தும் கையறு நிலையில் புலம்புவதுமே நம் விதியாகும்.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்