பேசாத சொற்கள்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.

நகர வாழ்க்கை காரணமா, என்ன காரணம் என்று தெரியவில்லை. பலர் அதிபயங்கர மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு சின்ன விஷயமும் இங்கே தோல்வியோடு முடிகிறது போலிருக்கிறது. தோல்வி, நிறைவின்மை, குறைகள் எல்லாம் சேர்ந்து மனத்துக்குள் பெரும் போராட்டங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்படி தம்மையும் அறியாமல் பேசிக்கொண்டே செல்பவர்கள்.

குறிப்பாக நிறைய பெண்கள் இப்படி இருக்கிறார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள், கைகளை ஆட்டி யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டே போவார்கள். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் வார்த்தைகள் வரிசை கட்டி நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பெருமூச்சு, ஒரு அலுத்துக்கொள்ளும் தலையாட்டல் எல்லாம் உள்ளே கரையும் சொற்பிரவாகத்தின் தொடர்ச்சி.

சின்னப் பெண்களுக்கு ஒருவித கட்டுப்பாடு, சங்கோஜம் எல்லாம் கூடவே தலைகாட்டுவதால், தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வயது ஆக ஆக, இந்தக் கட்டுப்பாடு கழண்டுவிடுகிறது. கவலைகள் மேலோங்கிவிடுகிறது. தம்மையும் அறியாமல் கையை ஆட்டிக்கொண்டு யாரிடமோ விவாதம் செய்துகொண்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் இது இன்னும் அதிகமாகி, பேசவே ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நம்மிடையே பேசுவதற்கான நேரம் குறைந்துவிட்டது. குடும்பத்தாரோடு பேசுவதே அரிதாகிக்கொண்டு இருக்கிறது. குடும்பங்களில் பேச்சு என்பது அதிகபட்சம், ஒன்றிரண்டு சொற்கள், ஒரு சில வரிகளில் முடிந்துபோய்விடுகிறது. முன் தீர்மானிக்கப்பட்ட வரிகளே பேசப்படுகின்றன. ‘டிபன் பாக்ஸ் கட்டியாச்சா?’, ‘கேஸ் சிலிண்டர் வருமா?’, ‘டெலிபோன் பில் கட்டியாச்சா?’, ‘9.20 டிரெயினைப் பிடிக்கணும்’ என்று மிகச் சப்பையான வரிகளே பேசப்படுகின்றன. விளைவு, சொல்லவேண்டிய பல செய்திகள், கேட்கவேண்டிய பல கேள்விகள், மோதித் தீர்த்துக்கொள்ள வேண்டிய கோபங்கள், புரிந்துகொள்ளவேண்டிய உணர்வுகள் எல்லாம் மனத்துக்குள் மக்கிப் போய்விடுகின்றன.

தொலைக்காட்சி குடும்பங்களில் பேசும் நேரத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. கூடத்தில் அது ஒரு பக்கம் மண்டையிடியாக முழங்கிக்கொண்டு இருக்க, மற்றொரு பக்கம், அதற்கு இணையாக குடும்ப உறுப்பினர்கள் கத்தி கத்திப் பேசுகிறார்கள். அல்லது பேசாமல் இருந்துவிடுகிறார்கள். பேசாமல் இருப்பதுதான் அதிகம்.

பல வீடுகளில், சாப்பாடு, தொலைக்காட்சியோடு பின்னிப் பிணைந்தது. கையில் தட்டை வைத்துக்கொண்டு, டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் கெட்ட பழக்கம் ஏராளமான வீடுகளில் இருக்கிறது. தட்டில் என்ன இருக்கிறது, என்ன சுவை, என்ன ரசனை என்ற எந்த ஒரு கவனமும் இல்லாத வெற்றுச் சாப்பாடு அது. எதில்தான் மல்டி டாஸ்கிங் வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

என் வீட்டில், சாப்பாட்டு மேஜையை நான் பேசுவதற்கான இடமாக மாற்றி வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். டிவி ஓடக் கூடாது. செல்போன் கூடாது. கையில் புத்தகமோ பத்திரிகையோ கூடாது. சாப்பாடும் பேச்சும் மட்டுமே முக்கியம். அதிகபட்சம் பதினைந்து நிமிட நேரம். அல்லது அரை மணி. குடும்ப உறுப்பினர்கள் அத்தனை விஷயங்களையும் கொட்டிவிடுவார்கள். கேட்கவேண்டியதைக் கேட்டுவிடுவார்கள். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுவேன். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பொது.

பேசாது போன, உள்ளேயே மட்கிப் போன எண்ணங்களின், கோபங்களில், வலிகளின் வெளிப்பாடுகளை, சென்னைத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக, திருவல்லிக்கேணி கோவில் அருகே இரண்டு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பெண். அழுக்கு உடையணிந்துகொண்டு, பெளடர் பூசிப் பொட்டு வைத்துக்கொண்டு, கோவில் அருகே உட்கார்ந்திருப்பார். ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெரிய வீட்டின் திறமையான நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும். மிச்சமிருக்கும் அழகும் மிடுக்கும், வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை எடுத்துச் சொல்லும். திடீரென்று யாரையோ திட்டுவார். யாரையோ மிரட்டுவார். யாருக்கோ உத்தரவு தருவார். சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகளை குறை சொல்லுவார். அற்புதமான ஆங்கிலம் ஒரு சில சமயங்களில் வெளிப்படும். மற்ற நேரங்களில், நல்ல அழகான தமிழ். கொஞ்சம் நேரம் ஓரிடத்தில் அமர்ந்திருக்க மாட்டார். பெரிய பையைத் தூக்கிக்கொண்டு கோவிலைச் சுற்றியுள்ள வீட்டு வாசல்களில் உட்கார்ந்து, நடந்து, படுத்து அங்கேயே தன் நாள்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் பேசப்படாத வலி மொத்தம் அந்தம்மாளின் வார்த்தைகளில் தொக்கி நிற்கும். இதுபோல், மன அழுத்தம் மிகுந்த பல பெண்களை நான் சாலைகளில் பார்க்கிறேன். யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. பேசாத சொற்கள், வலி நிரம்பியவை. அதைப் பேசி வெளியே கொட்டுவதைவிட, வேறேதும் சிறப்பான் வழி இருப்பதாகத் தெரியவில்லை.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்