இடைத்தேர்தல்: சில பாடங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும் சொல்லப்பட்டாலும் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் எல்லாம், மக்களுக்கு சலுகைகள் கொடுப்பதும் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிப்பதும் நடந்துவருகின்றன. இந்தியாவில் பொதுத் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த வகை கவனிப்புகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் தவறு என்றோ சரியென்றோ வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

1. இடைத்தேர்தலில், பா.ம.க. பங்கேற்கவில்லை. தம் தொண்டர்களை, 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தும்படி, அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருந்தார். வந்தவாசி தொகுதியில் பா.ம.க.வினரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கே முப்பது பேர் மட்டுமே 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒன்று, மக்களுக்கு 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கவேண்டும். அல்லது, பூத்களில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வாய்ப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது, 49 ஓ பற்றித் தெரிந்தும், மக்கள் தம் ஓட்டுக்களை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

ராமதாஸ் தம் கட்சிக்காரர்களை 49 ஓவைப் பயன்படுத்தச் சொன்னபிறகும் இதுதான் நிலைமை என்றால், எவ்வளவு தொண்டர்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.

தமிழக அரசியலில் தம்மை முக்கிய கட்சியாகக் கருதும் பா.ம.க., எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும்? ஒரு கருத்தை கட்சித் தலைவர் சொன்னால், அதன் தொண்டர்கள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா? இங்கே நடந்தாற்போல் தெரியவில்லை. சொந்த பலத்தை விடக் கூட்டணி பலத்திலேயே இத்தனை ஆண்டுகள் அரசியல் நடத்தியிருக்கிறது பா.ம.க. என்று சொல்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வந்தவாசி இடைத்தேர்தல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

2. புதிய சூறாவளியாகக் கிளம்பிய கேப்டன் விஜய்காந்த்தின் வேட்பாளர்கள், இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கவில்லை. வந்தவாசியில் 7063 வாக்குகளும், திருச்செந்தூரில் 4186 வாக்குகளும் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, 2006 பொதுத் தேர்தலில், வந்தவாசியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சிவசண்முகம், 9096 வாக்குகளையும் திருச்செந்தூர் தொகுதியில் கணேசன் 3756 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இரண்டு தொகுதிகளிலும் 75 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது.

அதிமுகவின் ஓட்டுகளை விஜய்காந்த் பிரிக்கிறார் என்று தியரி உண்டு. இன்னொரு தியரி, இளைஞர்கள் அவர் பின்னால் திரள்கிறார்கள் என்பது. இரண்டுமே இங்கே நடைபெற்றார் போல் தெரியவில்லை.

3. இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்காவிட்டால், நிச்சயம் இவ்வளவு அபரிமிதமான வாக்குகள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் விவரமானவர்கள். அவர்கள் தங்களுக்கு எது சரியோ அதை உணர்ந்தே வாக்களித்திருக்கின்றனர். அவர்களுடைய முடிவை, தீர்மானத்தைக் குறை சொல்லுவது, பூனை கண்ணை மூடிக்கொண்ட கதைதான்.

4. என் மனத்திருப்திக்கு முக்கிய காரணம், மக்கள் பெருமளவில் வெளியே வந்து வாக்களித்திருப்பதுதான். திருச்செந்தூரில் உள்ள மொத்த வாக்காளர்கள் :1,40,150. வாக்களித்தவர்கள்: 1,10,931. வந்தவாசியில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 1,58,210. வாக்களித்தவர்கள்:1,32,750. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் அரசியல் மேலும், அரசாங்கத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சிஸ்டத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. பெருநகரங்களைப் போலல்லாமல், இவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருப்பதே கவனிக்கத்தக்க அம்சம். பெருநகரவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்