லதா ராமகிருஷ்ணன்
(நிகழ்வு குறித்த சில தகவல்கள் – கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்)
சூரியன் தனித்தலையும் பகல் என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். அவருடைய கட்டுரை முன்வைத்த கருத்துகளில் சில :
இந்தக் கவிதைகள் தம் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களின், குறிப்பாக அக்தி முகாம்களிலுள்ள பெண்களின் அவலநிலையை வலியோடு பேசுகின்றன.
ஆறரை கோடி தமிழ்மக்கள் வாழும் தமிழ்நாட்டில் சில நூறு பேர் மட்டுமே ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள் என்பது அவலம்.
இன்றைய தேவை சொற்களை விட செயல்கள் தான். அமைதியான உலகம் அமைய கவிஞர்கள் தங்களுடைய செயல்பாடுகள் மூலம் வழிவகுக்க வேண்டும்.
தமிழ்நதியின் பெரும்பான்மையான கவிதைகள் போரைப் பேசினாலும் வேறு பல மனிதமன உணர்வுகளையும் அவர் நுட்பமாகப் பேசியுள்ளார்.
நாடற்றவனின் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிஞர் இளங்கோவின் கவிதைத் தொகுப்பு குறித்து நாடகக் கலைஞரும், படைப்பாளியுமான சோமீதரன் பேசினார். இளைஞரான அவர் போர்ச்சூழலை நேரடியாக அனுபவங்கொண்டு வரும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உரையின் சில பதிவுகள்:
· இளங்கோவனின் கவிதைகளில் என்னைப் பார்க்க முடிகிறது.
· எந்த நாடு புகல் தரும் என்று தெரியாமல் இதோ நின்றுகொண்டிருக்கிறேன்.
· சிங்களவர்களும், தமிழர்களும் பிரிக்கப்பட்ட தலைமுறை எங்களுடையது.. முஸ்லீம், சிங்களவர், தமிழர் என்று மூன்றுவிதமான பாடசாலைகள் கொண்ட தலைமுறை நாங்கள். தமிழர்கள் என்றால் சிங்களர்களுக்கு புலிகள் தான. சிங்களவர்கள் என்றால் எங்களுக்கு சிங்கள இராணுவம் தான். நிங்கள அரசு சிங்கள ராணுவம் தான்.
· இசுலாமியர், தமிழர் ஆகிய இருதரப்புப் பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் சிங்கள பாட புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளே. இந்தப் பாட புத்தகங்கள் சோழ மன்னன் இலங்கை மண் மீது படையெடுத்தான், பௌத்த விகாரங்களை அழித்தான் என்று வரலாறு எடுத்துரைத்து தமிழரையும், சிங்களவரையும் நிரந்தரமாகப் பிரித்துவைத்தன.
· அகதியாக இருக்கிறேன். இது தான் என் தலைமுறை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் புலிகள் இயக்கம் தான்.இன்றைய தலைமுறையின் அக, புற சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. இரண்டாயிரத்தில் எழுதப்பட்ட கவிதைகளும் ஈழப் பிரச்னையின் 1986ஆம் ஆண்டு காலகட்டத்தையே பெரும்பாலும் பேசுகின்றன.
· இளைய தலைமுறையினருக்குஇலங்கை வரலாறு முறையாகச் சொல்லித் தரப்படவில்லை.
· எங்களுடைய முதல் தலைமுறை உருவாக்கிய போரில் தொடர்ச்சியாகச் செத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். அலைந்து கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
· யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் காலார நடந்து செல்வோம் என்பார் கவிஞர் ஜெயபாலன். நாங்கள் கடற்கரையைப் பார்த்ததே கிடையாது. இசுலாமியர் கொன்றழிக்கப்பட்ட விவரமும் எங்களுக்குத் தெரியாது. வீடு கொளுத்து கிறார்கள். ஓடுங்கள் என்பார்கள். மணிக்கணக்காக ஓடுவோம்.
· பத்து வயதில் மாவீரர் கூட்டத்தில் எல்லாம் பேசியிருக்கிறேன் – முழு விவரங்கள் தெரியாமலே.
· ஈழத்தின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தல், ஈழத்தையும், பிற நிலங்களையும் ஒப்பிடுதல் – இவை இந்தக் கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.
· பத்து வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஹெலிகா·ப்டர் வந்தால் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். சரியாக அரை மணி நேரம் குண்டுபோட்டு விட்டுப் போய்விடும் அது. அந்த சமயத்தில் பள்ளியிலுள்ள பதுங்கு குழிகளில் மாணாக்கர்களை ஒளிந்துகொள்ளச் சொல்வார்கள். வீடு ப்க்கத்திலிருக்கும் பிள்ளைகளை அனுப்பிவிடுவார்கள். கீழே விழுந்திருக்கும் துப்பாக்கிரவைகளை பொறுக்கியெடுத்துக் கொன்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் ஒரு தோட்டாவுக்கு ஒன்றரை ரூபாய் வீதம் தருவார்கள். அதிகப் பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காய் வீதியிலேயே ஓரமாகப் பதுங்கியிருந்து ஹெலிகா·ப்டர் போனதும் மற்றவர்கள் பதுங்கு குழிகளிலிருந்து வெளியேறி வருவதற்குள் நாங்கள் ஓடிப்போய் அதிகத் தோட்டாக்களை திரட்டியெடுத்துக்கொண்டுபோய் கொடுப்போம். மற்றபடி, இரவு பகலில் நடைபெறும் ஊர்த்திருவிழாக்கள் என்றெல்லாம் நாங்கள் எதையும் பார்த்தது கிடையாது.
· நாடு என்று எங்கள் முன்னோர்கள் எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்களோ அந்தக் கட்டமைப்பில் நாங்கள் எப்போதும் நாடற்றவர்களாகவே இருந்தோம்.
திரு. மகேந்திரனுடய கருத்துரையின் தொகுப்பு:
(பேசும்போது ‘சுகனின் வயதென்ன? அவருக்கு ஈழத் தமிழர்களின் பிரச்னை முழுமையாகத் தெரியுமா என்பதாக உரத்த குரலில் மொழிந்திருக்க வேண்டிய தேவையில்லை. அது எழுத்தாளர்கள் சமமானவர்களாய் அமர்ந்து ஒட்டியும் வெட்டியும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வெளி).
ஒரு விஷயத்தை அதன் சூழலைக் கொண்டு தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கற்பனையும், தன்வயக் கருத்துகளுமாய் புரிந்துகொள்வது சரியல்ல. அவை காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடும்.
சுகன் இலங்கை வரலாறைப் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள பௌத்தம் அன்பும் கருணையும் அல்ல. இலங்கையின் பௌத்தம் ஆயுதத்தையும், சாதியையும் கையில் வைத்திருக்கும் பௌத்தம்.
இலங்கையின் முக்கியத் தலைவர்களில் அனைவரும் உயர் சாதியினர். பௌத்த குருமார்களிடையே இவ்வகை இரு பிரிவுகள் இருக்கின்றன.
இசுலாமியர்களுக்கு சில தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்காக தமிழ்ப்பேரினவாதம் என்று பார்க்கக் கூடாது. இலங்கையில் சிங்களவர்கள்77 லட்சமாக இருந்தது ஒரு கோடிக்கும் மேலாக உயர்ந்திருக்கும்போது ஏற்கனவே சிறுபான்மை யாக உள்ள தமிழர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் மிகவும் அருகி யிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை தலைசிறந்த கவிதைகள் ஈழத்தில் தான் பிறந்திருக்கின்றன.
புலம்பெயர் அனுபவங்கள் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் அதிகம் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் சுகுணா திவாகர். ஆனால், ஈழ மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனுபவங்கள் வலிகூடியது. நாடுநாடாக விரட்டியடிக்கப்படுகிறார்கள் அவர்கள். இரண்டாம் தலைமுறையினருக்கு முதல் தலைமுறையினரின் வலி தெரியாது என்றாலும்தங்கள் மூதாதையர் வழியாக அவர்களையும் அது வந்தடைகிறது. இசுலாமியர்கள் சாகடிக்கப்பட்டார்கள் என்பதற்காய் தமிழர்கள் சாகடிக்கப்படுவது நியாயமாகி விடுமா? இரண்டு மூன்று மாதங்களாக எல்லோரும் ஓங்கிக் குரலெடுத்துக் கத்தியும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப்படவில்லையே, ஏன்?
(கூட்டத்திலிருந்து ஒருவர் சீனாவின் பங்கு குறித்து ஏதோ கூறுகிறார்)
சீனா செய்தது சரியென்று நான் கூறவில்லை அதே சமயம், சீனாவின் நிர்வாகம் என் கையிலில்லை. 1998 இல், விடுதலைப் புலிகளின் இயக்கம் வலிமையோடிருந்தபோதே நான் எழுதிய ‘தீக்குள் விரலை வைத்தால் என்ற நூலில் அவர்கள் இசுலாமியர்களை நடத்திய விதம் தவறு என்று எழுதியிருக்கிறேன். அதற்காக, பழிக்குப் பழி என்பதாய் நம்முடைய அணுகுமுறை இருக்கலாகாது.
இன்று நடப்பது ஜியோ-பாலிடிக்ஸ். இந்தியாவுக்கு இலங்கை மீது ஒரு ‘வெஸ்டட் இண்ட்ரஸ்ட்’ இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள இசுலாமிய எழுத்தாக்கங்களை விட இலங்கை முஸ்லீம் எழுத்தாக்கங்கள் செழிப்பாக உள்ளன.
போலிகள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் அவர்களை இனங்காண வேண்டும்.
இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் கவிஞர்கள் எழுத வேண்டும்.இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய படுகொலை ஈழத்தில் நடந்தேறியிருக்கிறது. 2,00,000 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அகதி முகாம்களில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இனிமேல் நடக்கப்போகும் ஈழப்போராட்டம் வேறுபட்ட அலவில், மேம்பட்ட அளவில் இருக்கும் என்பது திண்ணம்.
உலகத்திலேயே இதைப் போன்றதொரு விடுதலைப் போராட்டம் கிடையாது.
இந்தியா இந்தப் போரில் குற்றவாளி தான்.
திரு சுகன் :
23 ஆண்டுகளாக அகதியாக அலைந்துகொண்டிருக்கிறேன். உடுத்தியிருக்கும் இந்த உடுப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
பாண்டிச்சேரி, கடலூர் அகதிகள் முகாம்களுக்குப் போயிருந்தேன். ஒரு முகாமில் பதினான்கு நாட்களுக்கு முன்பு இறந்துபோயிருந்த அகதியைப் புதைக்க மறுத்தார்கள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள். ஆனால், நாம் இத்தனை வருடங்கள் பல நாடுகளில் அழையா விருந்தாளியாய் இருக்க நேர்ந்ததற்கு யார் காரணம்?
இத்தனை வருடங்கள் இந்திய அரசு நம்மைப் பராமரித்து வருவதற்கு நன்றி கூறும் அதே நேரம் அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் கல்வி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதும், முகாம்களின் நிலைமை, தரம், சுகாதாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதும் அவசியம்.
எனக்கு 47 வயதாகிறது. 1981 இல் ஆயுதம் தூக்கினேன். பின், இயக்கத்திலிருந்து வெளியேறினேன்.
இன்று 10,000 புலிகள் இலங்கை முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் 1000 பேரை முடித்து விடுவார்கள்.
1945 இல் சிறுபான்மைத் தமிழரமைப்பு முன்வைத்த கோரிக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி பிரதிநிதித்துவம். அது இன்று வரை சாத்தியமாகவில்லை. இந்த 60 ஆண்டு காலத்தில் தலித் மக்களுக்கு தனிப் பிரதிநித்துவம் கொடுக்க உயர் சாதியினர் தயாரில்லை. மூன்றாம் காங்கிரஸில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் விசேட பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்ததைத் தடுத்தவர்கள் யார்?
40,000 மக்கள் கொல்லப்பட்டதாக மனம் வருந்திக் கூறினார். எந்த மக்கள் இயக்கத்திற்கு எல்லாம் கொடுத்தார்களோ அந்த அப்பாவி மக்கள் இறுதிக் கட்டத்தில் பாதிகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவில்லையா? நேரப்போகும் பேரழிவைத் தடுத்து நிறுத்த இயக்கத்தின் தரப்பிலிருந்து என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? வரப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லையா முடியாதா?
லண்டனிலுள்ள தமிழர்கள் போர் நிறுத்தத்திற்கெதிராக குரல் கொடுத்தார்கள்.
சமாதான முயற்சியை மூன்று முறை குழப்பியதற்கு அரசு மட்டுமா காரணம்?
மாற்றுக் கருத்தை அனுமதிப்பதன் மூலமே நமக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியம்.
கவிஞர் வசுமித்ரன் எழுத்தாளர் ஷோ¡பாசக்தியின் வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டிப் படித்த பிறகு விதலைப் புலிகள் வெற்றியடைந்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியாயிருக்குமா? நமது வீரர்கள் இறந்தால் வீர மரணம். இதுவே எதிர்தரப்பு படைவீரர்கள் இறந்தால் ‘பலியானார்கள்’. மனித மனங்களை நினைத்தால் பயமாயிருக்கிறது. One Nation-One People எனும்போது மூன்று லட்சம் பேரை ஏன் கொன்றீர்கள்? என்று கேள்வி கேட்ட என் தோழனை இலங்கை ராணுவம் கொன்றது என்று குறிப்பிட்டார்.
கிளாரன்ஸ் என்பவர் சிங்கள மக்களை வெல்வதினூடாய் ஈழத்தைப் பெறுவதல்ல எங்கள் விருப்பம். எங்கள் பகுதியில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் அதுவே நாங்கள் வேண்டுவது என்றார்.
பார்வையாளராக வந்திருந்த இன்னொருவர் ( திரு. மாறன் அல்லது திரு.பாலன் – பெயரை சரியாகப் பதிவு செய்யவியலாததற்கு மன்னிக்கவும்) நிகழ்வு குறித்த தனது கருத்துகளைப் பதிவு செய்யும்போது நடந்த இனப்படுகொலை மிகப் பெரிய பேரவலம். அதை மையப்படுத்தி விவாதம் இருந்திருக்க வேண்டும். இங்கிருக்கும் தமிழனுக்குப் போராடாமல் ஈழத் தமிழனுக்குப் போராட வேண்டுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது சரியான பார்வையல்ல. இப்போது நாம் நடப்பு காலத்தையும், எதிர்காலத்தையும் பேசுவது தான் முக்கியமானது. ஜனநாயகத்தில் உள்-அடையாளப் போராட்டத்தையும் நாம் அனுமதிக்கத் தான் வேண்டும் ஒரு பேரவலத்தின் போது ஏற்கனவே நடந்த இன்னொரு அழிவு குறித்து பேசும்போது அந்தப் பேசுபவரின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாகிறது. இந்திய நாடு ஈழம், நேபாளம் எல்லாவற்றிற்கும் எதிரி தான் என்றார்.
திரு.மகேந்திரனுடைய குரல் அதிகாரத் தொனி கொண்டதாக இருந்தது சரியல்ல என்றும் இனியான போராட்டத்தில் இங்குள்ள மாற்றுக் கருத்துகளையும் கணக்கில் கொண்டு அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகுணா திவாகர் தெரிவித்தார். வசுமித்ரன் பேச்சை சிலர் பாதியில் நிறுத்தியது சரியல்ல என்று திரு. சுகன் கருத்துரைத்தார். பார்வையாளர் பஸாரியா ‘அகதிகளைப் போய் பாருங்கள். அது மட்டுமே நாம் செய்யக் கூடியது என்றவர் ‘நீங்களெல்லாம் ஏ.ஸியில் அமர்ந்துகொண்டு பேசுகிறீர்கள் என்று குற்றஞ்சாட்ட வேண்டிய அவசியம் என்ன?
பொதுவாகவே, ஈழப் பிரச்னை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்று போதிப்பதே குறியாக சிலர் இயங்கி வருகிறார்கள். அதை மீறி சற்றே சுயமாய் யோசித்து சில மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தால் உடனே தமிழுணர்வற்றவர்கள், தமிழின விரோதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். வேறு சிலர் தங்களுடைய செயல்பாடுகளை அளவுகோலாகக் கொண்டு ‘நீங்கள் இதை மேற்கொள்ளாததால் உங்களுக்கு இந்தப் பிரச்னையில் அக்கறையில்லை என்கிறார்கள். இந்த மனப்பாங்கும், பார்வையும், மேலும், ஈழப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக முன்னெடுத்துச் செல்லாமல் அதை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான பிரச்னையாக மட்டுமாய் நீண்ட காலம் குறுக்கி விட்டதும், புலிகளின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதாய் சொல்லாலும் செயலாலும் அவை சார்ந்த கருத்துகளையும், விமர்சனங்களையும் ஒடுக்க முயற்சிகள் மேற்கொண்டதும், மற்ற போராளிக் குழுக்கள் ஒடுக்கப்பட்டதும், பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டாத நிலையும் ஈழத்தில் தனி ஈழம் என்பதை இந்தியாவில் தமிழ் தேசம் என்பதோடு இணைத்துப் பேசியதும், இன்னும் பல்வேறு காரணிகள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்னையும், அவலமும் தீவிரமடையக் காரணமாகின என்று சொல்ல முடியும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்குக் கொடி பிடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இலங்கைக்கு சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சென்றுவர அனுமதியளிக்கச் செய்ய இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்பந்திக்க வேண்டும். இந்தப் போரில் தனக்குள்ள பங்கு குறித்தும் இலங்கை அரசுக்கு உதவி நல்கியதற்கான காரணங்கள் குறித்தும் இந்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கை மக்களுக்குத் தர வேண்டும். அதற்காவது அதிகாரபீடத்திலிருக்கும் தமிழர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் காலதாமதமின்றி அவர்களுடைய வாழ்விடங்களில் சுதந்திர மனிதர்களாகத் திரும்பிச் செல்ல ஆவன செய்யப்பட வேண்டும்.
ஈழப் பிரச்னை குறித்து பலதரப்பட்ட கருத்துகளைப் பெற இந்தக் கூட்டம் வழிவகுத்தது ஆக்கபூர்வமான விஷயம். தமிழ்க்க் கவிஞர்கள் இயக்கத்தின் இத்தகைய முயற்சிகள் பாராட்டிற்குரியவை. கூட்டம் நடந்தேறிய அரங்கிற்கு முன்னதாகவே சென்றுவிட்டதில் இருள்-யாழி என்ற தலைப்பிலான கவிஞர் திருமாவளவனின் கவிதைத் தொகுப்பை முழுவதுமாய் வாசிக்க முடிந்தது. கவித்துவம் குறையாமல் சமகால அரசியல் சமூக நடப்புகளைப் பேசும் கவிதைகள். குருதியில் நனைந்த கவிதை, இங்கனம் நான், அவர்கள் ஒரு கவிஞனைக் கொன்றனர், அதிகாலைச் செய்தி, கோடை, வானம் பார்த்த பூமி, குருதியில் நனைந்த கவிதை, காயம் பட்ட நிலம் என நிறையக் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மாதிரிக்கு ஒரு குறுங்கவிதை:
உயிர்த்தெழுதல்
துர்மரணச் செய்தியில்லாத காலையொன்றில்
விழித்தெழுந்து நெடுநாளாயிற்று.
சமாதானத்துக்கானதே
யுத்தங்கள்;
வாழ்தலின் நிகழ்கதவுகளே சாவுகள்-
சொல்லிக் கொள்கிறார்கள்
வலியோர்.
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- வேத வனம் விருட்சம்- 43
- ஜாதி மல்லி
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
- உதிரிகள் நான்கு
- பால்டிமோர் கனவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- ஆரோக்கியத்தின் பாடல்
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- சோறு
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- விரியும் வலை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று