தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1

This entry is part of 46 in the series 20090108_Issue

மலர்மன்னன்(விராட் ஹிந்து சபா மாபெரும் ஹிந்து பேரவை என்னும் அனைத்துலக அமைப்பின் ஆண்டு மாநாடு சென்னையில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டின் இரண்டு நாட்களும் மலர் மன்னன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார். மேலும் தமிழ்ச் சமுதாயத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்ற தலைப்பில் தமிழிலேயே ஒரு கருத்தரங்கிற்கும் மாநாட்டில் ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை வகித்ததோடு, தமிழில் தாமே ஒரு கட்டுரையினையும் மலர்மன்னன் படித்தார். கருத்தரங்கில் தலித் சமுதாயமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் தலித் சமூகப் போராளி “தடா’ பெரியசாமியும் பெரியார் ஜின்னா அம்பேத்கர் சந்திப்புகள் என்ற தலைப்பில் ராம கிருஷ்ண ராவ் என்னும் ஆய்வாளரும் கட்டுரைகள் படித்தனர். கருத்தரங்கில் மலர் மன்னன் படித்த கட்டுரை இது.)
தமிழ் நாட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால வரலாற்றுப் பின்னணியுள்ள திராவிட இயக்கத்தின் முன்னோடியான, தென்னிந்திய மக்கள் சங்கத்தைச் சென்னையில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முப்பதுபேர் கூடிய ஒரு கூட்டத்தில் சர் பிட்டி தியாகராயச் செட்டி, டாக்டர் டி.எம். நாயர் ஆகிய இருவரும் முன்னின்று நிறுவியபோது, அவர்களின் நோக்கம் ஹிந்து சமய எதிர்ப்பாக இல்லை. ஹிந்து சமூகத்தை பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு கூறுகளாகப் பிரித்துப்போட்டு, பிராமணர் அல்லாதார் ஹிந்துக்கள் அல்ல என்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களின் சங்கத்திற்கு இருக்கவில்லை. ஹிந்து சமயத்தினை மட்டுமே எதிர்க்கும் வகையில் பாரபட்சமான நாத்திகப் போக்கினை அது மேற்கொள்ளவும் இல்லை. பிராமணர் அல்லாதார் பிரச்சினையை சமயப் பிரச்சினையாக அல்லாமல் சமூகப் பிரச்சினையாகவே அது முன்வைத்தது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான தென்னிந்திய மக்கள் சங்கத்திற்கு அதற்கும் முன்னதாகவே இரு முன்னோடிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தன என்றாலும், ஒரு தொடர் நிகழ்வாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என அறியப்படும் தென்னிந்திய மக்கள் சங்கம் இருப்பதால் அதனையே திராவிட இயக்கத்தின் முன்னோடி எனக் கொள்வது ஆய்வுக்கு வசதியாக இருக்கும்.
1 917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இச்சங்கம் தனது நோக்கங்களைப் பின் வருமாறு வகுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தது:
தென்னிந்தியாவில் பிராமணர் அல்லாத அனைத்து ஜாதியினரும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் சேர்க்கை, நல்லொழுக்கம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கான சூழலை உருவாக்கி வளர்த்தல்
தென்னிந்தியாவில் பிராமணர் நீங்கலாக அனைத்து ஜாதியினரின் நலன்களையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான கோரிக்கைகளை உண்மையுடனும், உரிய காலத்திலும் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் பிரதிநிதியாக இயங்குவது
இவற்றுக்கான பொதுக் கருத்தை உருவாக்க எவரும் தமது சொந்தக் கருத்தினைச் சுதந்திரமாக எடுத்துக் கூறும் வகையிலான பொதுக் கூட்டங்கள் நடத்துதல், சுற்றறிக்கைகள், துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல்

இவ்வாறு அது தனது நோக்கங்களை வரையறுத்துப் பதிவு செய்த வேளையில் அதனை விளக்கிப் பேசிய தியாகராயச் செட்டியாரும் தங்களுக்கு பிராமணர் மீது எவ்வித துவேஷமும் இல்லையென்றும், அவர்களுக்குத் தங்களது வலக் கரத்தினை நேசக் கரமாக நீட்ட எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் கூறினார். எனினும், “பிராமணர்கள் பிற ஜாதியாருக்குத் தாம் இழைத்து வந்துள்ள கேடுகளுக்கு வருத்தம் தெரிவிப்பார்களேயானால்’ என்று ஒரு நிபந்தனையினை அவர் அப்போது சொல்லவும் தவறவில்லை. ஆனால் பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு பிராமணர்கள் விளைத்த கேடுகள் என்ன என்பதை அவர் விளக்கவில்லை.

அரசுத் துறைகளில் பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் வருகையில் அவற்றுக்குத் தகுதி வாய்ந்த அலுவலர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து மேலிட முடிவுக்கு அனுப்பும் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் சிலரேனும் ஜாதி அபிமானம் காரணமாகத் தம் ஜாதியினரைப் பரிந்துரைத்திருக்கக் கூடும். ஆனால் இவ்வாறான ஜாதி அபிமானம் பொதுவாக எல்லா ஜாதியினரிடையேயும் காணப்படுவதால் இந்த முறைகேட்டிற்கு பிராமணர்களிடம் மட்டுமே குறை காண்பது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

தியாகராய செட்டியாரின் கூற்றுப்படிப் பார்த்தால் பிராமணர்கள் அல்லாத ஜாதியாருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் பிராமணர்கள் பறித்துக் கொண்டதுபோன்ற ஒரு சித்திரம் தோன்றுகிறது என்றாலும், அன்றைய சூழலில் வாய்ப்புகளுக்குத் தேவையான தகுதிகளை பிராமணர் அல்லாத ஜாதியில் அதிகம்பேர் வளர்த்துக் கொள்ளாத நிலையில், பிராமணர்கள் போட்டியின்றியே வாய்ப்புகளைப் பெறும் நிலைதான் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் அப்பொழுது பிராமணர் அல்லாத ஜாதியினர் இருந்ததாகக் கருதுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை. கல்வி என்பது அனைவருக்குமே பணம் செலவு செய்துபெறத் தக்கதாகத்தான் இருந்தது. படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக் கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஜாதி வேறுபாடின்றிக் கிடைப்பதும் சாத்தியமாகவே இருந்தது. எனவே பிற ஜாதியாருக்கு பிராமணர்கள் கேடுகள் இழைத்து வந்ததாகக் கூறியமைக்குப் பிரமாணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், சங்க காலம் தொட்டு, இட ஒதுக்கீடு ஏதும் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பிராமணரல்லாத பல்வேறு ஜாதியாரில் கல்வி கேள்விகளில் சிறந்த பலர் இருக்கவே செய்துள்ளனர். அவர்களில் இன்று மிகவும் பிற்பட்ட வகுப்பாராகக் கருதப்படுவோரும் அடக்கம். பல்வேறு கால கட்டங்களில் அரசவைகளிலும் அலுவலகங்களிலும் பிராமணரல்லாதாரும் பொறுப்பு மிக்க பதவிகளில் இருந்து வந்துள்ளமைக்குச் சான்றுகள் உள்ளன. சேக்கிழாரும் தாயுமானவரும் உடனே நம் நினைவுக்கு வருவர். மிக உயர்ந்த தலைமை நிர்வாகப் பதவிகளில் பிராமணரல்லாத அவர்கள் இருக்க முடிந்துள்ளமையால் அடுத்த நிலையில் உள்ள பல்வேறு பதவிகளிலும் வெவ்வேறு பிராமணரல்லாத ஜாதியினர் அமர்ந்திருக்கக் கூடும் என அறியலாம். பிற்காலத்தில் கிழக்கிந்திய கும்பினி ஆட்சியிலும் அவ்வாறே பல பிராமணரல்லாதார் பொறுப்புகளை வகித்துள்ளனர். வேத நாயகம் பிள்ளை கிறிஸ்தவராக மதம் மாறிய குடும்பத்தில் பிறந்தவராக இருப்பினும் தமது ஜாதி அடையாளத்தை விடாத நிலையில் நீதி பரிபாலனத் துறையில் மாவட்ட நீதிபதியாக இருந்துள்ளார். பிரஞ்சிந்திய அரசாக விளங்கிய புதுச்சேரியில் ஆனந்த ரங்கப் பிள்ளை மிகுந்த செல்வாக்குடையவராக, கவர்னரின் துபாஷியாக இருந்துள்ளார். கிறிஸ்தவ மிஷனரிகளின் ஊக்குவிப்பில் தாழ்த்தப் பட்டோரும் பிற்படுத்தப் பட்டோரும் மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளில் சேர முடிந்திருக்கிறது.

மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளில் அமர வாய்ப்புப் பெறுவதில் மற்ற அனைவரையும் பிராமணர்கள் முந்திக் கொண்டமைக்கு இன்னொரு காரணமும் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரையிலுங்கூட நமது சமுதாயம் நில உடமைச் சமுதாயமாகவே இருந்து வந்துள்ளது. ஒருவரது நில உடமையே அவரது செல்வத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும் அளவு கோலாக இருந்துள்ளது. பிராமணர்கள் பெரும்பாலும் பூர்விகத்தில் அரசர்களின் மானியமாகப் பெற்ற நிலத்திற்கு உடமையாளர்களாக இருந்த போதிலும், அதன் காரணமாகவே கூடத் தீவிர முனைப்பு இன்றி, நிலத்தைக் குத்தகைக்கு விட்டு குத்தகைதாரர் அளக்கும் நெல்லைப் பெறுவதிலேயே திருப்தியடைந்து விடுபவர்களாக இருக்கையில், பிற ஜாதியார் பெரும்பாலும் தமது சுய உழைப்பின் பலனாகப் பெற்ற நிலத்தின் அருமையினை உணர்ந்து, கஷ்டமோ, நஷ்டமோ எதுவாயினும் நிலத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந் தனர். விவசாயமே பிரதான தொழிலாக அமைந்திருந்த நிலையில், எத்தனை சிரமங்கள் இருப்பினும் அதனைத் தொடர்வதிலேயே அவர்கள் முனைப்பாக இருந்தனர்.

ஆண்டு முழுவதும் பாடெடுத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் தராத விவசாயத்தை நம்பியிருப்பதைக் காட்டிலும் அரசுப் பணிகளை மேற்கொண்டு, நிரந்தரமாகவும், மாதா மாதமும் குறிப்பிட்ட வருமானம் பெறுவது மேலானது என பிராமணர்கள் கண்டு
கொண்டனர். அன்றைய கால கட்டத்தில் ஊதியம் குறைவாகவே இருந்த போதிலும் வாழ்க்கையினைத் திருப்திகரமாக நடத்துவதற்கு அது போதுமானதாகவே இருந்தது. மேலும் அரசுப் பணி சமூகத்தில் அந்தஸ்தையும் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் அளித்தது. பிராமணரல்லாத ஜாதியினர் இவற்றைக் கண்கூடாகக் கண்ட போதிலும், கை கட்டிச் சேவகம் புரிவதைக் கவுரவக் குறைவாகக் கருதியதோடு, நிலத்தின் பா லுள்ள பிணைப்பின் காரணமாகவும், மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளைத் தேடுவதில் ஆர்வம் குன்றியிருந்தனர்.

மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்ற பிராமணர்கள் அது பிற துறைகளிலும் பல வாயில்களைத் திறந்துவிடுவதைக் கண்டு கொண்டனர். அவற்றுள் குறிப்பிடத் தக்கது, சட்டக் கல்வி எனலாம். அதில் பல பிராமணர்கள் மிகவும் ஈடுபாடு காட்டியமையால் வழக்குரைஞர் பணியில் பிராமணர்கள் கூடுதலாக வாய்ப்பினப் பெற்றனர். எனினும் வழக்குரைஞர் துறையிலும் எதிராஜ் போலத் திறமை மிக்க வழக்குரைஞர்கள் தடையின்றிப் புகழுடன் தொழிலை நடத்தி வர முடிந்துள்ளது. ஈடுபாடு இருப்பின் எந்த ஜாதியாரும் எந்தத் துறையிலும் ஈடுபடத் தடையேதும் இல்லாத நிலையும் எவரது வாய்ப்பையும் வேறு எவரும் பறித்துக் கொண்டு விடும் மேலாதிக்கம் எந்த ஜாதிப் பிரிவினருக்கும் இல்லாத நிலையும் அன்றைய சமுதாயத்தில் இருந்ததாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிந்து சமூகத்தின் ஜாதிப் படிக்கட்டில் மேலேயிருக்கும் ஜாதிகள் தமக்குக் கீழே அடுத்த படியிலேயே இருக்கக் கூடிய ஜாதிகளை மாற்றுக் குறைவாகக் கருதும் மனப்போக்கு இருக்கவே செய்கிறது. ஆகவே பிராமண ஜாதியாருக்கு மட்டுமே பிற ஜாதியார் மீது அத்தகைய இழிவுணர்வு இருந்ததாகக் கருதுவதற்கும் இடமில்லை. ஹிந்து சமூக ஜாதிக் கட்டுமானத்தில் மேலிருந்து கீழாக வருகையில் பிராமணர்களுக்கு அடுத்த படியாக உள்ள ஜாதியினர் தமக்குமேலேயிருக்கும் ஜாதியினரான பிராமணர்களுக்கு இணையாக இருக்க விழையும் அதே நேரத்தில் தமக்குக் கீழே அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியாரைத் தமக்கு இணையாகக் கொள்ளும் மனப்பான்மையினைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த மனப்போக்கே உச்சி முதல் அடி நுனி வரை எல்லாப் படி நிலைகளிலும் காணப்படுகிறது. எல்லா ஜாதியாரிடமும் காணப்படும் இந்த மனப் போக்கினைக் களைவதில் கவனம் செலுத்துவதுதான் இன்றைய அவசியமாகும்.

அரசுத் துறைகளிலும், நீதி பரிபாலனத் துறையிலும் கல்விக் கூடங்களிலும், பதவிப் பொறுப்புகளில் அன்று பிராமணர்களின் எண்ணிக்கை பிராமணர் அல்லாத ஜாதியாரைவிடக் கூடுதலாக இருந்தமைக்குக் காரணம் உத்தியோக வாய்ப்புகளைப் பெற்று நிரந்தரமான மாத ஊதியம் பெற்று நிம்மதியாகக் காலங் கழிப்பதற்கு பிராமணர்கள் முன்னுரிமை கொடுத்த வேளையில், சொந்தமாகத் தொழில், வாணிபம் போன்ற முயற்சிகளில் இறங்கி முன்னேற்றம் காண்பதில் பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு நாட்டம் இருந்ததேயாகும். அன்றைய காலகட்டத்தில், பல்வேறு தொழில்கள், வாணிபங்கள் ஆகியவற்றிலும், பின்னர் தாமே சுயமாகத் தொழில் தொடங்கத் தக்க வகையில் பட்டறைகளில் பணியாற்றித் தேர்ச்சிபெறும் நிலையிலும் பிராமணர் அல்லாத ஜாதியினரே மிக அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில், பிராமணர்கள் பெற முடியாதவாறு தொழில், வாணிபம், ஆகிய துறைகளில் எல்லா வாய்ப்புகளையும் பிராமணர் அல்லாத ஜாதியினர் அபகரித்துக் கொண்டதாகக் கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அவ்வளவு அபத்தமாகத்தான் அரசுத் துறைகளிலும், கல்விக்கூடங்களிலும், நீதி பரிபாலனத் துறையிலும் உள்ள வேலை வாய்ப்புகளை பிராமணர் அல்லாத ஜாதியினர் பெற இயலாதவாறு பிராமணர்கள் பறித்துக் கொண்டதாகக் கருதுவதும் அமையும்.

மேலும், தென்னிந்திய மக்கள் சங்கத்தை நிறுவியவர்களுக்கு ஜாதி என்னும் கட்டமைப்பை உடைத்து ஜாதிப் பிரிவினைகளற்ற சமுதாயமாக ஹிந்து சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற இலட்சியம் ஏதும் இருக்கவில்லை. பிராமணர் அல்லாத ஜாதியினருக்குத் தானே பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்பதில்தான் அச்சங்கத்தின் கவனம் சென்றது. அவ்வாறு சென்றபோது, ஜாதிக் கட்டமைப்பில் இறுதிப் படியில் அனைத்து ஜாதியாராலும் புறக் கணிக்கப்பட்டு இழிவு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு இல்லை. இன்னும் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால், பிராமணருக்கு அடுத்த படிநிலையில் இருந்த உயர் ஜாதியாராக அங்கீகாரம் பெற்ற ஜாதியினரும் பிராமணர்களுக்கு இணையான வாய்ப்புகளைப் பெறச் செய்ய வேண்டும் எனபதில்தான் அதன் கவனம் பெருமளவில் இருந்தது.
அன்றைய கால கட்டத்தில், தமிழ் மொழி வழங்கும் பகுதி என்ற அடிப்படையில் தமிழர்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, தமிழ் நாடு என்பதாக ஒரு தனி மாநிலம் இல்லை. இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தின் தென் கிழக்கு ஓர மாவட்டங்கள் தொடங்கி, நிஜாம் சமஸ்தானம் நீங்கலான முழு ஆந்திரப் பிரதேசம், மைசூர் சமஸ்தானமும் வடக்கு, மேற்கு, வடமேற்கு கர்நாடகப் பகுதிகள் சேராத இன்றைய கர்நாடகமும், திருவாங்கூர்கொச்சி சமஸ்தானம் நீங்கலான கேரளமும் இவற்றுடன் தமிழ்நாடும் இணைந்து “சென்னை ராஜதானி’ என்ற பரந்துபட்ட நிலப்பரப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் அது இருந்தது.
இந்தப் பின்னணியுடன் காணும்போது, தென்னிந்திய மக்கள் சங்கத்தை முன்னின்று தொடங்கியவர்களும், அதன் முதற் கூட்டத்தில் கலந்துகொண்ட முப்பதுபேர்களில் மிகப் பெரும்பான்மையினரும் தமிழர்கள் அல்ல என்பது புலப்படும். எனினும், பிற்கலத்தில் அதன் வழித் தோன்றலான திராவிட இயக்கம் தமிழ் நாட்டில்தான் வேர் பிடித்து வளர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரத் திருப்பங்களில் ஒன்றாகும். தென்னிந்திய மக்கள் சங்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டு வீட்டில் அதனைப் பேசுபவர்களுமே முன்னிலை வகித்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிற்காலத்தில் அது தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு என்று தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்ற பிறகு அது அமைத்து வந்த அமைச்சர் குழுவின் தலைமைப் பதவியில் அமர்ந்தவர்கள்கூடப் பெரும்பாலும் ஆந்திரரேயன்றித் தமிழர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தென்னிந்திய மக்கள் சங்கம் தேர்தலில் போட்டியிடும் கட்சியாகத் தனது பெயரை மாற்றிக் கொண்டபோது “லிபரல்’ என்ற ஆங்கிலச் சொல்லைத்தான் பயன்படுத்தியது. ஆனால் அதனை “விடுதலை’ என்று மொழியாக்கம் செய்தால் அக்கட்சிக்கு ஒரு விடுதலை இயக்கம் என்ற முரணான தோற்றம் ஏற்பட்டுவிடும் என்பதால் லிபரல் என்ற சொல்லுக்குரிய இன்னொரு பொருளான நடுநிலை என்பதைப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில் அக்கட்சிக்கு நாடு விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை என்பதோடு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றிலும் ஆதரவாகவும் அது இருந்ததுடன், அகில இந்திய காங்கிரஸ் மகாசபை, ஹோம் ரூல் இயக்கம் போன்ற நாட்டு விடுதலையில் நாட்டம் கோண்டிருந்த கட்சிகளைக் கடுமையாக எதிர்த்தும் வந்தது.
முன்னரே குறிப்பிட்டவாறு, தென்னிந்திய மக்கள் சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் நோக்கம் பிராமணர் அல்லாத ஜாதியினர் அனைவரின் பொதுவான நலனைக் கருத்தில் கொள்வதாக இருந்ததேயன்றி, பிற்காலத்தில் அதன் எச்சமாக நீடித்த திராவிட இயக்கம் பிராமணர்களைக் கடுமையாகத் தூற்றியும் அவர்கள் மீது பகைமை பாராட்டி, பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு பிராமணர் மீது தீராத வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதாகவும் அமைந்ததுபோல இருக்கவில்லை. சென்னை ராஜதானியில் அன்றைக்கு இருந்த சட்ட மன்றக் கவுன்சிலில் பிராமணர் அல்லாதோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் வேண்டும், அப்போதுதான் பிராமணர் அல்லாத பல்வேறு ஜாதியினரின் நலன்களை முன்வைத்து, உரிய நடவடிக்கைள் எடுக்குமாறு அரசாங்கத்தரிடம் வலியுறுத்துவது சாத்தியமாக இருக்கும் என்று கோருவதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது. பின்னர் அது அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும், கல்விக் கூடங்களிலும் பிராமணர் அல்லாத ஜாதியினருக்குக் கூடுதல் வாய்ப்புக் கோருவதாகப் பக்குவம் அடைந்தது. இதனையொட்டி 1921 ஆம் ஆண்டு சென்னை ராஜாதானியின் பிரதம அமைச்சராகப் பனகல் அரசர் ராமராயனிங்கர் இருந்தபோது, அரசுப் பணிகளில் பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை எண் 613 பிறப்பிக்கப்பட்டது. முதலில் நெடுஞ்சாலைத் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒதுக்கீடு பின்னர் பிற துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
தென்னிந்திய மக்கள் சங்கம் தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தபோது, பிராமணர்களையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற முயற்சிகூட மேற்கொள்ளப்பட்டது என்பது கவனத்திற்குரியது.
தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்றாகப் பிளவுபட நேர்ந்து, அதன்பின் 1929 ஆம் ஆண்டு மீண்டும் அவை ஒன்று கூடிய மாநாட்டில் பிராமணர்களைத் தமது அமைப்பில் சேர்த்துகொள்ளலாகாது என்ற விதியைக் கைவிட்டு விடவேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. நெல்லூரில் நடைபெற்ற கூட்டமைப்பின் பனிரண்டாவது மாநாட்டில் செயற்குழுவின் சார்பில் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, கட்சியின் தலைவாராக இருந்த பி. முனுசாமி நாயுடு அதனை ஆதரித்துப்பேசினார்.
“” ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நாம் பிரித்து வைத்திருப்போமேயானால் ராஜதானியின் மொத்த நலனுக்காகவும் வாதாடும் அரசியல் அமைப்பாக இருக்கும் தகுதி நமக்கு இருக்காது. எனவே பிராமணர்கள் கட்சியில் சேருவதற்கு உள்ள தடையைக் கைவிட்டுவிட வேண்டும். மேலும் நிர்வாக சீர்திருத்தங்களின் பயனாக ராஜதானிக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப் படுமேயானால் அப்பொழுது அனைத்து ஜாதியாருக்கும் பிரதிநிதியாக ராஜதானி முழுமைக்குமான ஆட்சிப் பொறுப்பினை நாம் வகிப்பது எவ்வாறு பொருத்தமாக இருக்கும்? நமது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வரும் பிராமணர்களைக் கட்சியில் அனுமதிப்பதில் தவறென்ன? தடையினை நீக்குவதால் பிராமணர்கள் நமது கட்சிக்கு வந்துவிடப் போவதில்லை என்றே வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு நமது கட்சியில் சேரத் தடை ஏதும் இல்லை என்ற நிலைப் பாட்டை நாம் ஏற்றுவிட்டோமானால் நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்தானவர்கள் என்ற விமர்சனம் மறைந்துவிடும்” என்று முனுசாமி நாயுடு தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். இவர், கூட்டமைப்பு ஆட்சி அமைத்தபோது அமைச்சர் குழுவில் பிரதம அமைச்சராக இருந்தவர்.
கூட்டமைப்பின் மூத்த தலைவராகவும், முன்பு கட்சியின் சார்பில் கல்வி அமைச்சராகவும் இருந்த ஏ.பி. பாத்ரோ, அவரது கருத்தை வரவேற்று, தடையை விலக்குவது என்பதாக இருந்த தீர்மானத்திற்கு, ஜாதி வித்தியாசமின்றி, கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்கும் எவரும் அதன் உறுப்பினராகலாம் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.
எனினும், இதற்குள் காங்கிரஸ் மகாசபையில் பிராமணர் ஆதிக்கம் மிகுந்திருப்பதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறிக் கூட்டமைப்பில் சேர்ந்து விட்டிருந்த ஈ.வே.ரா. அவர்கள், தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
“” பிற கட்சிகளிலுள்ள பிராமணர் அல்லாத ஜாதியினர், அங்கு பிராமணர்கள் மேலாதிக்கம் செலுத்துவதைக் கண்டு சலிப்புற்று நமது கூட்டமைப்பை நோக்கிப் படிப்படியாக வந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இப்படியொரு திருத்தம் செய்வது மதியீனம்” என்று ஈ.வே.ரா. அவர்கள் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். அவரைப் பின்னாளில் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால மத்திய அமைச்சரவையில் சிறிது காலம் நிதி அமைச்சராக இருந்தவரான ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆதரித்தார்.
இதையொட்டி, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துவிட்ட போதிலும், கட்சியில் பிராமணர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற குரல் 1934 வரை தெளிவாக ஒலித்து வந்தது.
முன்னரே குறிப்பிட்டவாறு, காலனியாதிக்கத்தின் தொடக்க காலத்தில் பிராமணர்கள் ஆங்கில முறைக் கல்வியினைக் கற்பதில் முந்திச் சென்று, அதன் பயனாக அரசுத் துறைகளிலும், நீதி பரிபாலன மன்றங்களிலும் கல்விக் கூடங்களிலும் வேலை வாய்ப்பினைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். பிராமணர் அல்லாத பிற சாதியினரோ, தொழில், வாணிபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, அவற்றில் முன்னேறுபவர்களாக இருந்தனர். எனவே அரசுப் பணிகளிலும் பிற துறைகளிலும் இடங்களை நிரப்புகையில் போதிய அளவுக்கு பிராமணர் அல்லாத சாதியினர் இருக்கவில்லை என்பதுதான் அன்றைக்கு இருந்த உண்மை நிலையாகும். எனினும், பிராமணர் அல்லாதோரில் பணிகளுக்குரிய தகுதி வாய்ந்தோருக்கு வாய்ப்பு கிடைத்தே வந்தது. ஆயினும், நியமனங்கள் வருகையில் பிராமணர்கள் முந்திகொள்வது வழக்கமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. பிராமணர்கள் உரிய கல்வி பெற்றுப் பணிகளுக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் உயர் அதிகாரிகளான ஆங்கிலேயர் மனதில் பதிந்துவிட்டிருந்ததால் பதவி நியமனங்கள் வரும்போது, பிராமணர்களையே தேர்வு செய்யும் மனப் போக்கும் அவர்களிடம் இருந்தது. அந்த வாய்ப்பை பிராமணர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும். இந்நிலையினை மாற்றி, பிராமணர் அல்லாத சாதியினரில் குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது. இதையொட்டி முடிவாகிய பணி ஒதுக்கீடுகளில் பிராமணர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் மகாசபையில் பிராமணர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறாகள் என்ற சினத்துடன் அதிலிருந்து விலகி வந்த ஈ.வே.ரா., அந்தக் கோபாவேசத்திலிருந்து விடுபட இயலாதவராக இருந்தமையால் காங்கிரசிலிருந்து விலகி தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பில் சேர்ந்த பிறகு அங்கும் தமது பிராமண எதிர்ப்பைத் தொடரலானார். எனவேதான் அவர் தலைமையில் பின்னர் திராவிட இயக்மாக அது தொடர்ந்தபோது பிராமணர்களைத் துவேஷிப்பதையே முழு நேரக் குறிக்கோளாகக் கொண்ட இயக்க மாகிவிட்டது. பிராமணர் மீதான துவேஷமே ஏதோ பிராமணர்கள்தான் ஹிந்து சமயத்தைக் கட்டிக் காப்பதான எண்ணம் காரணமாக, நாளடைவில் ஹிந்து சமய விரோத இயக்கமாகவும் பின்னர் அது உருவெடுத்தது.
முதலில் சமூக நலனுக்கான தென்னிந்திய மக்கள் சங்கமாகவும் பின்னர் அரசியல் ஈடுபாடுள்ள தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பாகவும் அமைந்த இயக்கம்”ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் தனது அதிகாரப் பூர்வ இதழினை நடத்தி வந்ததால் அதுவே பின்னர் கட்சிப் பெயாராகவும் அறியப்படலாயிற்று. அந்தக் கால கட்டத்திலும் அக்கட்சியினைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் பலரும் ஹிந்து சமய நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றினைக் கடைப்பிடிப்பவர்களகவும் ஹிந்து கலாசாரக் கூறுகளை மதித்துப் போற்றிப் பின்பற்றுபவர் களகவுமே இருந்தனர். அவர்களின் இல்லங்களில் விசேஷ காலங்களில் பிராமணப் புரோகிதர்கள் முறைப்படித் தீ வளர்த்து வேள்வி செய்யும் வழக்கமும் இருந்து வந்தது. பிராமணர்களையோ ஹிந்து சமயத்தையோ வெறுத்து ஒதுக்கும் போக்கு அவர்களிடம் காணப்படவில்லை.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி என்றே பிரபலம் அடைந்து விட்டிருந்த தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பானது, தேசிய உணர்வை ஊட்டி மக்களைப் பெருமளவில் கவர்ந்துவிட்டிருந்த காங்கிரசுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் தோல்வியடைந்ததும், சமூகத்தில் கௌரவ அந்தஸ்துடன் இருந்து வந்த ஜஸ்டிஸ் கட்சி முன்னணியினர் பலரும் மனச் சோர்வும் குழப்பமும் அடைந்தவர்களாகக் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். சிலர், “ஜெயிப்பவன் கட்சி நம் கட்சி’ என்கிற இயல்பான மனப்போக்கிற்கு இணங்கத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஜஸ்டிஸ் கட்சி இவ்வாறாகப் பலவீனப்படிருந்த நிலையில், சுய மரியதை இயக்கம் என்று பிராமணர்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சியுடன் இணைந்திருந்த ஈ.வே.ரா. அவர்களுக்கு வெகு எளிதாகக் கட்சியைக் கைப்பற்றித் தன்வயப்படுத்திக் கொள்வது சாத்தியமாகிவிட்டது. வசீகரமான பேச்சாற்றலாலும் எழுத்தாலும் குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கவரும் திறமை மிக்க அண்ணா அவர்களின் துணையும் அப்போது அவருக்குக் கிடைத்ததால் மேலும் எளிதாக ஜஸ்டிஸ் கட்சியைத் தம் கட்டுப்பாட்டின்கீழ் அவர் கொண்டு வந்துவிட்டார். ஜஸ்டிஸ் கட்சி என்ற முத்திரை மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டதோடு, அதன் பிரிட்டிஷ் ஆட்சியாளரை ஆதரிக்கும் போக்கின் காரணமாக மக்களுடைய வெறுப்பிற்கும் ஆளாகிவிட்டிருந்தபடியால் “ஜஸ்டிஸ் கட்சி’ என்ற பெயரைக் கைவிட்டு, திராவிடர் கழகம் என்ற புதிய பெயரைக் கட்சிக்குச் சூட்ட வேண்டியதாயிற்று. தமது காங்கிரஸ் எதிர்ப்பின் விளைவாகத் தமது கட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு காட்டுவதே யன்றி, அதற்கு அடிபணிந்து கிடப்பது அல்ல என்ற நம்பிகையினை மக்களிடையே தோற்றுவிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு விசுவாசமாக இருப்போரைப் பாராட்டும்விதமாக அளித்து வந்த திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைத் தம் கட்சியிலுள்ள பெருந்தனக்காரர்கள் துறந்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்ணா புத்த்திசாலித்தனமாக நிறைவேறச் செய்து எஞ்சியிருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் வெளியேறிச் செல்வதற்கும் வழிசெய்தார்.

Series Navigation