எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

நவஜோதி ஜோகரட்னம்


எம்.பி.எம்.அஸ்ஹர் நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் கண்ணியமும் நேர்மையும் நேசமும் மிகுந்த பத்திரிகையாளர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பத்திரிகை உலகில் மிகுந்த உத்வேகத்துடன் பணியாற்றிய தனி ஆளுமை கொண்ட எம்.பி.எம்.அஸ்ஹரின் மறைவு துணிச்சலும் நேர்மையும் கொண்ட ஒரு மனிதாபிமானியின் மறைவைக் குறித்து நிற்கின்றது.
2001 ம் ஆண்டு கண்டி இரா.அ.இராமன் அவர்கள் எங்களை நவமணி பத்திரிகை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். இரண்டு அம்சங்கள் எனக்கு அஸ்ஹரின் மீதான அக்கறைக்குக் காரணமாயிருந்தன. ஒன்று அஸ்ஹர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்பது. இரண்டாவது அவர் நடாத்திய ‘நவமணி’ என்ற பத்திரிகை என் தாயின் பெயரைச் சுமந்து வந்ததாகும்.
அஸ்ஹர் உடனான என்னுடைய முதல் சந்திப்பு என் மனதில் நிலையாக நீடித்த தொடர்பாக அமைந்தது. வெறும் சந்திப்போடு மட்டும் நின்றுவிடாமல் நாம் லண்டன் திரும்பிய பின்னர்; கடிதங்கள் வாயிலாக எங்களின் தொடர்பு நீடித்தது. அன்பும்இ இலக்கியச்சுவை கலந்தும் அஸ்ஹர் எங்களுக்கு எழுதிய கடிதங்களை நான் பேணி வைத்திருக்கிறேன்.
“இலங்கையிலிருந்து திரும்பியதும் உங்கள் மகன் நோய்வாய்ப்பட்டதை அறிந்து கவலையடைந்தோம். அவரது உடல்நிலை இப்போது சீராகியிருக்கும் என நம்புகிறோம்.
உங்கள் இருவரையும் இரு தடவைகள் தான் சந்திக்கக் கிடைத்தது என்றாலும் பல தடவைகள் சந்தித்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் அன்பு என்னையும் நவமணி குடும்பத்தினரையும் நன்கு கவர்ந்துள்ளது.
இத்துடன் நவமணி பிரதிகள் இரண்டை அனுப்புகிறோம்.
அடிக்கடி தொடர்புகொள்வோம்…..”
2001 ம். ஆண்ட ஆகஸ்ட் மாதம் பதினாறாம் திகதி அஸ்ஹர் எமக்கு எழுதிய கடித வாசகங்களை தற்போது வாசிக்கும் போது கண்ணீர் மல்கின்றது.
ஒரு பத்திகையாளனின் விசயங்களைக் கிரகிக்கும் வேகத்தை அவரிடம் காண முடிந்தது. எங்கும் எதிலும் பத்திரிகைகளுக்கான விசயங்களைத் தேடுவதில் அவர் அலாதியான திறமை கொண்டிருந்தார். லண்டனில் இருந்து இலங்கை சென்றிருந்த என்னிடம் லண்டன் நிலவரங்கள் குறித்த பேட்டி ஒன்றை உடனடியாகவே தனது நவமணியில் பிரசுரித்திருந்தார். அதன் பின் தொடர்ச்சியாக எனது கவிதைகளும்இ ஏனைய ஆக்கங்களும் நவமணியில் இடம்பெற்றன. எனது ‘எனக்கு மட்டும்
உதிக்கும் சூரியன்;’ கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனம் ஒன்றையும் நவமணி வெளியிட்டு இருந்தது.
தினபதியிலும், வீரகேசரியிலும் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டு காலம் பணியாற்றிய பத்திரிகை அனுபவம் கொண்ட அஸ்ஹர், நவமணி வார இதழின் வாயிலாக முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் பத்திரிகையை ஒரு இலட்சிய வேகத்துடன் நடாத்தி வந்திருக்கிறார். இலங்கையின் இனத்துவ நிலைமைகள் மோசமடைந்த பின்னர்;இ முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் குறித்த தெளிவான விளக்கத்தை பெறுவதற்கு நவமணி மாத்திரமே சீரிய இதழாக வெளிவந்தது. நவமணி பத்திரிகைகளை நான் தொடர்ச்சியாகப் பேணி வைத்திருக்கிறேன்.
அஸ்ஹரின் ‘அரங்கத்துக்குள் அந்தரங்கம்’ என்ற பகுதி அவரது அரசியல் தகவல்களோடு கூடிய சுவாரஸ்யமான பகுதியாகும். அவரது ஆசிரிய தலையங்கங்கள் எப்போதும் நியாயத்தையும்இ உண்மையையுமே பேசி வந்தன. நீண்ட காலமாக பாராளுமன்ற அமர்வுகளை பத்திரிகைகளுக்காக அவதானித்து வந்த அஸ்ஹர் அவர்கள் ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்டவராவார்.
ஈழத்த முஸ்லிம்களின் எதிர்காலம் குறித:;த தீர்க்கமான தனது கண்ணோட்டத்தினை அவர் தனது பத்திரிகைகளில் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கிறார்.
அப்துல் ஜபார் போன்ற தமிழக அரசியல் விமர்சகர்கள் இலங்கை முஸ்லிம் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும்போது நவமணி இதழ்களை ஆதாரம் காட்டி பேசுவது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. அவரது நவமணி பத்திரிகைஇ ஒரு சமூகப் பத்திரிகை எவ்வாறு நடாத்தப்படவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமையக்கூடியது. குறை கூறுவதையும்இ கண்டனங்கள் எழுப்புவதையுமஇ; வசை பாடுவதையுமே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்ற இன்றைய பத்திரிகைச் சூழலில் நவமணி தனித்தாரகையாக சுடரொளி வீசியது. ஒரு கண்ணியம் மிகுந்த மனிதரை நான் அஸ்ஹர் அவர்களிடத்திலே காண்கின்றேன்.
மற்றவர்களை மதிப்பதிலும் உதவுவதிலும் வாக்குறுதிகளை காப்பதிலும் அஸ்ஹர் மான்பு மிகுந்த மனிதராகத் திகழ்ந்தார்.
பத்திரிகை உலகில் அஸ்ஹர் போன்ற உன்னதமான மனிதர்களைக் காண்பது அரிதிலும் அரிதாகும். அவரது மறைவு ஈழத்துப் தமிழ் பத்திரிகை உலகில் அனுபவமும் ஆற்றலும் மிக்க பத்திரிகையாளனின் தனியிடத்தை வெறுமையாக்கி இருக்கிறது.


லண்டன்
21.09.2008.
navajothybaylon@hotmail.co.uk

Series Navigation

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்