நினைவுகளின் தடத்தில் – (19)

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

வெங்கட் சாமிநாதன்


நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத் தெரியாது. அனேகமாக உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். காமாட்சிபுர அக்ரஹாரத்தினுள் நுழைந்தவுடனேயே அதன் இடது புறத்தில் காணும் முதல் வீடு முழுத்திண்ணையையும் அடைத்து கம்பி போட்டிருக்கும். கதவைத் திறந்து படியேறினால் திண்ணை. திண்ணையில் அகல் விளக்குப் பிறைக்கு மேல் ஏ. வைத்தியநாதய்யர் என்று கறுப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்கும். அப்போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. பின்னர் தான் மதுரை ஏ.வைத்தியநாதைய்யர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவர் பற்றியோ, அவர் காலத்தில் அவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் பற்றியோ இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஏ. வைத்திய நாதய்யர் என்ற பெயர் முடிவு பெறும் விதம் காரணமாக அது பற்றி பேசுவது இக்காலத்தில் விரும்பப் படுவதில்லை. ஒதுக்க வேண்டும் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் சொல்லப்படாமலேயே, தாக்கீது ஏதும் பிறப்பிக்காமலேயே புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் ஒதுக்கல் இது. இன்னும் எத்தனையோ இம்மாதிரி ஒதுக்கல்கள், நடந்த சரித்திரத்தை இல்லையென பாவனையில் நடந்து கொள்ளுதல், அது பற்றிப் பேசுவதே, நடந்ததைச் சொல்வதே, அங்கீகரிக்க மறுப்பதைச் சுட்டுவதே, ஜாதி வெறியாக குற்றம் சாட்டப்படும். இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முக்கால் நூற்றாண்டு கால அரசியல். ஆனாலும் சில வருடங்களுக்கு முன் சோ.தருமன் தன் எழுத்துக்களின் உந்துதல் பற்றி சாஹித்திய அகாடமியில் பேசும்போது, ஏ.வைத்தியநாதய்யர் அந்நாட்களிலேயே தலித்துக்களுக்காகப் போராடியதை யார் மறக்கமுடியும்? என்று ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறார். மறக்க என்ன, மறுக்கவும் முடியும் தமிழ் நாட்டு அரசியல் அதற்கு இடம் கொடுத்துள்ளது. வெகு அபூர்வமாக, அவரிடமிருந்து ஏ.வைத்தியநாதய்யர் பற்றியும் அவரது அரசியல் சமூக பங்களிப்பு பற்றி ஒரு இளைய தலைமுறை பேசியது எனக்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

இதெல்லாம் போகட்டும். ஆனால் அது மதுரை தான் என்றாலும், நான் பேசிக்கொண்டிருப்பது 1946-ம் வருட சம்பவங்கள் பற்றி என்ற போதிலும், அந்த வீட்டின் பெயர் பலகை என் நினைவுகளை பழம் சரித்திர நடப்புகளுக்கு என்னை இழுத்துச் சென்று, இன்றைய அவலங்களைப் பற்றி எண்ணவைக்கும் அந்த பெரிய மனிதரைக் குறிப்பது தானா என்பது தெரியாது. ஆனாலும் அந்த பெயர்ப்பலகை தாங்கிய வீடு இருந்த தெருவில் நான் வசித்தது சில மாதங்களேயானாலும், இன்னமும் அது என் நினைவில் இருக்கச் செய்துள்ளது, நியாயத்தோடோ, நியாயமற்றோ, அந்தப் பெயரின் மகத்துவம் காரணமாகத்தான். இன்றும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நீண்ட காலம் இடை நின்றபோதிலும், மதுரை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு மயிர்ச் சிலிர்ப்புடன் தான் அந்த நினைவுகள் வருகின்றன என்றால் அதற்கு சரியாகவோ தவறாகவோ உறவு கொண்டுவிடும் சில பெரிய மனிதர்கள் தான். பெரியவர்கள் என்றால் அவர்கள் மரியாதைக்குரியவர்கள். தம் தடங்களை தமிழ் வாழ்க்கையில் பதித்தவர்கள். இன்று சில தடங்கள் அழிகின்றன. சில அழிக்கப்படுகின்றன. நான் மதுரையில் இருந்த அந்த கிட்டத் தட்ட ஒரு வருட காலத்தில் பல நிகழ்வுகள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. அருணா ஆஸ·ப் அலியின் பேச்சைக் கேட்க தமுக்கம் மைதானத்திற்குப் போனதும், அந்தக் கூட்டம் புரிந்து கொள்ளாத ஹிந்தியிலேயே பேசி அருணா ஆஸ·ப் அலி அக்கூட்டத்தை மழையில் கலையாது கட்டுப்படுத்தியது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். பி.ராம மூர்த்தியும், கே.டி.கே தங்கமணியும், மோகன் குமார மங்களமும் பேசக் கேட்பது அன்று எனக்கு ஒரு புது அனுபவம் மாத்திரமல்ல ஒரு அசாதாரண அனுபவமும் கூட.

இன்னோரு அசாதாரண சம்பவமும் நேர்ந்தது. ஒரு நாள் பாட்டி கேட்டாள், “சாமா எங்கேடா, இன்னமும் வரக்காணமே?” எனக்குத் தெரியாது என்றேன். “ஏண்டா கூட சேர்ந்து வரலையா?” என்று அதட்டினாள் பாட்டி. “என்னம்மா, தினமுமா சேர்ந்து வரோம்? வருவாளா இருக்கும்.” என்றேன். ஆனால் சின்ன மாமா வரவில்லை. அன்று இரவு வரை வரவில்லை. பாட்டி தவித்துப் போய்விட்டாள். என்னை ஸ்கூலுக்குப் போய் தேடச் சொன்னாள். மாமாவின் மாமனார் இருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரகார வீட்டுக்குப் போய் சொல்லச் சொன்னாள். அங்கிருந்த ராஜா, அம்பி என்று அழைக்கப்படும் ரங்கநாதன், மாமியின் அண்ணா தம்பிகள் அவர்கள், எல்லோரும் எங்கெங்கோ வெல்லாம் தேடினார்கள். ஒன்றும் பயனில்லை. சின்ன மாமா ஒட்டுதலாக இருந்தவர், அவரை விட கொஞ்சம் வயதில் பெரியவரான ராஜா தான். எப்போதாவது எங்காவது வெளியே சுற்றுவதென்றால் அவர்கள் இருவரும் தான் சேர்ந்துகொள்வார்கள். நான் பொடியன். என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நாட்கள் ஓடின. சின்ன மாமா வரவில்லை. நிலக்கோட்டையில் இருந்த மாமாவுக்கு எப்படி செய்தி போயிற்று என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை. என் கண்முன் இப்போது ஒடும் சித்திரம், “பகவானே ஏன் இப்படி என்னைப் போட்டு வதைக்கறே? நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று மாமா அவ்வப்போது வாய் குழறிய காட்சி தான். அவருக்கு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. வத்தலக்குண்டில் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணினே. என்னாலே முடியாட்டாலும், சரி,. கடனோ ஒடனோ வாங்கி, உன் இஷ்டத்துக்கு மதுரையிலேயே படின்னு இங்கே குடி வச்சா இப்படி பண்ணீட்டயேடா?” என்று மனம் குமுறியது அவருக்கு.

இடையில் பக்கத்தில் இருந்தவர்கள் யார் யாரோ ஜோஸ்யர் பெயரையெல்லாம் சொல்லி, சின்ன மாமா ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொல்லலாம் என்றார்கள். யார் கண்டார்கள்? என்ன தோஷமோ, என்ன தசையோ, நல்ல ஜோஸ்யர், சொன்னது பலிக்கும். அதையும் பார்த்துட்டா தேவலை” என்றார்கள். பாட்டிக்கு எப்படியாவது எங்கே இருக்கான்னு தெரிந்தா போறும். நல்லபடியா திரும்பி வந்துட்டா போறும் என்று இருந்தது. ஏதோ எங்கோ எப்படியோ ஒரு நம்பிக்கை துளிர்த்தால் போதும். தெரிந்த இடங்களில் உறவினருக்கெல்லாம், சுவாமி மலை, உமையாள்புரம், பாபுராஜபுரம் என்று எங்கெங்கோவெல்லாம் கடிதம் எழுதினார் மாமா. ஒரு நாள் யாரோ எங்கோ பார்த்ததாகச் சொல்லவே, திருச்சியோ திண்டுக்கல்லோ, எனக்கு சரியாக நினைவில் இல்லை, உடனே அந்த இடத்துக்கு ஓடினார். சரி அப்படி பார்த்தே இருந்தாலும், எங்கேயென்று தேடுவது? அலைந்து கொண்டே இருக்க முடியுமா என்ன. என்னவோ ஒரு ஆதங்கம். எப்படியாவது கிடைத்துவிடமாட்டானா என்று. பயந்த சுபாவமும், சுவாமி பக்தருமா? கேட்கவேண்டியதில்லை. நினைத்த கோவிலுக்கெல்லாம் போவார். அர்ச்சனை செய்வார். கண்மூடி உருகுவார்.

கடைசியில் அவரது பிரார்த்தனைகளுக்கும், பாட்டியின் வேதனையைக் காணத் தாளாது தானோ என்னவோ, சின்ன மாமா திருவாரூர் தியாக ராஜ உத்சவத்திற்குப் போயிருப்பதாகவும் உத்சவம் முடிந்த பிறகு வந்துவிடுவதாகவும் ஒரு செய்தி கிடைத்தத்து. . எப்படி செய்தி வந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இனி சின்ன மாமா மதுரையில் படிப்பைத் தொடர்வது என்பது சாத்தியமில்லை என்பது நிச்சயமாயிற்று. மதுரையில் தொடர்வது அனாவசிய செலவு, அதற்கு அவசியமும் இல்லை என, மாமா பாட்டியை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டை போனார். அந்த வருடத்தில் மிகுந்த கொஞ்சம் மாதங்களுக்கு நான் பரிட்சை முடியும் வரை ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு மாமாவின் மாமனார் வீட்டில் தங்குவது என்றும், ஏற்பாடு செய்யப்பட்டது. ஹோட்டல் என்றால் உண்மையில் அது ஹோட்டலே அல்ல. வடக்கு வெளி வீதியில், சிம்மக்கல்லிலிருந்து கொஞ்ச தூரம் சேதுபது ஹைஸ்கூல் நோக்கி நடந்தாலே ஒரு பெரிய வீடு. அங்கு வெளியூரிலிருந்து வந்து மதுரையில் தனியாக தங்கி இருக்கும் அலுவலகர்களுக்கு மாத்திரம் இரண்டு வேளை சாப்பாடு. காலையிலும் இரவிலும். மாதக் கணக்கு வைத்துக்கொள்பவர்களுக்கு மாத்திரம். ஒரு வசதிக்காகத் தான் அதை ஹோட்டல் என்று சொன்னேன். இப்போது மெஸ் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் அந்த பெயர் புழக்கத்தில் இருக்கவில்லை. அந்த மெஸ் முதலாளி, என்னைப் பார்த்து, ‘ சின்ன பையன். படிக்கிற பையன். காலம்பற சாப்புட்டுட்டு ஸ்கூலுக்குப் போனா மத்தியானம் பசிக்காதோ?. அப்பறம் என்னத்தைப் படிக்கிறது?. மத்தியானம் கொஞ்சம் மோர் சாதமா வந்து சாப்புட்டுக்கட்டும். மத்தியான வெயிலுக்கு குளிர்ச்சியா இருக்கும். அதுக்கு நீங்க ஒண்ணும் தனியா காசு கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார். மாமா அவரது கஷ்டகாலத்தில் இந்த மாதிரி இதமான வார்த்தைகளை எதிர்பாராத இடத்தில் கேட்டதும் ரொம்பவும் மனம் நெகிழ்ந்துவிட்டார்.

சின்ன மாமாவுக்கு சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு வந்தது எப்படி என்பது இப்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்போது யாரும் அதுபற்றி கேட்டுக்கொண்டதில்லை. ஏனெனில், மாமியைத் தவிர எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சங்கீதத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. தஞ்சாவுர்க் காரர்களேயானாலும். நான் அதற்குப் பிறகு கும்பகோணத்தில் படிக்க உடையாளூர் போய்விட்டேன். படிப்பு முடிந்ததும், வேலை தேடி வடக்கே வந்துவிட்டேன். இடையில் விடுமுறை நாட்களில் ஊருக்குத் திரும்பிய போது சின்ன மாமாவைப் பார்க்க நேரிட்ட போது அவர் பேச்சில் அவ்வப்போது சங்கீதம் பற்றி பிரஸ்தாபங்கள் வரும். மனித மனம் எவ்வளவு விசித்திரமான குணங்கள் கொண்டது, அப்படியொன்றும் சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு எவ்வளவு ஆழமானது, சில சமயங்களில் நாம் நினைத்தும் பார்க்காத ஆச்சரியங்களையெல்லாம் நம் முன்னால் வைத்துவிடும் என்பது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கும்.

வெங்கட் சாமிநாதன்/25/3/08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்