பிறர்தர வாரா

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

ரகுபதி ராஜா


கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலில் இந்த வரி வருகிறது.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

‘நல்லதும், கெட்டதும், இன்னொருவர் கொடுத்து நமக்கு வருவதில்லை’ என்பது இதன் தெளிவான கருத்து.
பிறர் நமக்கு தீங்கு செய்யாவிட்டால் பிறகு யார்தான் நமக்கு தீங்கு செய்கிறார்கள்? இது இயற்கையாக எழும் முதல் கேள்வி.

மிக உயர்ந்த ஒரு மனிதர் ஒருவர் இன்னொருவருக்கு புத்திமதியாகச் சொன்னது இது.

‘உனக்கு தீங்கு இழைப்பவர் ஒருவருமில்லை. உன்னைத் தவிர’ என்று, மகாத்மா காந்தி சொன்னார்.

அவர் எப்போது சொன்னார்? எவரிடம் சொன்னார்? ஏன் சொன்னார்? பார்க்கலாம்.

ஜவஹர்லால் நேருவுக்கு விஜயலக்ஷ்மி என்ற சகோதரி இருந்தார். ‘விஜயலக்ஷ்மி பண்டிட்’ என்று சொன்னால் வயதான பழைய காங்கிரஸ்காரர்களுக்கு ஒருவேளை ஞாபகம் இருக்கும். நேருவுடன் சேர்ந்து நமது
நாட்டின் விடுதலை போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.

அவருடைய வாழ்க்கையில் துயர சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அவரது கணவர் இறந்துவிட்டார். அன்புக்குரிய துணையை இழந்ததும் அவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தார். அவரை இழந்த சோகத்தைவிட
அன்றைய நாட்களில் இருந்த அவமானகரமான இந்திய சட்டம் ஒன்று அவருக்குப் பெரும் அதிர்ச்சி தந்து
அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

அவர் சொல்கிறார்:

“அன்றைய இந்திய சட்டம் என்னை ஒரு தனி ஜீவனாகவே பொருட்படுத்தவில்லை என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்தேன். விடுதலைப்போரில் கலந்துகொண்ட இதர இந்திய பெண்களுடன் சேர்ந்து ஆண்களுக்கு சமமாக ஆண்டுக்கணக்காக விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டோம். ஆண்களுடன் சேர்ந்தே பலதுயரங்களை அனுபவித்தோம். கடைசியில் சுதந்திரத்தையும் பெற்றோம்.

ஆனால். சட்டத்தின்படி பெண்களுக்கு தனி உரிமை இல்லை. தனி உடமையும் இல்லை. இன்னும் பெண்கள் ஆண்களுடன் உள்ள தொடர்புகளைக் கொண்டே கவனிக்கப்படுகிறார்களே தவிர தனியாக பெண் என்ற தனி ஜீவன் இருக்கிறாள் என்று சட்டத்தின் கண்களுக்கு தெரியவில்லை.

இப்பொழுது நான் ஒரு விதவைப்பெண். அதுவும் ஆண்வாரிசு இல்லாத விதவை. (அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர்) இதனால் குடும்பச் சொத்தில் பங்கு இல்லை. என்னுடைய இரண்டு பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்கு இல்லை. இதுதான் இன்றைய சட்டம். (அதாவது அன்றைய சட்டம். பல ஆண்டுகளுக்குப் பிறகே பெண்களுக்கு சொத்துரிமை தந்து இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது.)

இந்த பொருந்தாத நிலையை நான் வெறுத்தேன். இந்த சட்டத்தை ஆதரித்து எனக்கு எதிராக நடந்துகொண்ட என்னுடைய மற்ற குடும்ப உறவினர்களையும் வெறுத்தேன்” என்று எழுதினார்.

அந்த காலகட்டத்தில் இந்திய குழுவுடன் ஒரு கூட்டத்தில் பங்குகொள்ள விஜயலக்ஷ்மி பண்டிட் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியதிருந்தது. புறப்படுவதற்கு முன் மகாத்மாகாந்தியை சந்தித்து அவரிடம் விடை பெற்றுக் கொள்ள வந்தார். பேச வேண்டியதெல்லாம் பேசிய பின் காந்தியிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பும்பொழுது காந்தி கடைசியில் கேட்டார்:

“உன்னுடைய உறவினர்களுடன் நீ சமாதானம் செய்துகொண்டாயா?”

காந்திகூட தமக்கு விரோதமான நிலை எடுத்திருக்கிறாரோ என்ற வியப்புடன்,
” நான் யாரிடமும் சண்டைபோடவில்லையே” என்றார் விஜயலக்ஷ்மி

கந்தி சிறிதுநேரம் ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு புன்னகையுடன் திரும்பி, “நீ போய் அவர்களிடம் ‘குட் பை’ சொல்லவேண்டும். ஏனென்றால், நமது நாகரீகமும், சம்பிரதாயமும் இதை கோருகிறது. இந்தியாவில் இவைகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

” முடியாது. உங்களை சமாதானப்படுத்துவதற்காகக்கூட எனக்கு தீங்கு நினைப்பவர்களைப் பார்த்து இதைச்
சொல்லமுடியாது.” என்றார் விஜயலக்ஷ்மி பிடிவாதமாக.

காந்தி பிடிவாதமாக அதே புன்னகையுடன் சொன்னார், ” உனக்கு தீங்கு இழைப்பார் ஒருவருமில்லை. உன்னைத் தவிர”

அவர் மேலும் சொன்னார், ” இப்பொழுதுள்ள மனநிலையை நீ சரிசெய்து கொள்ளாவிட்டால் உனக்கு தீமை விளைவிப்பதற்கு போதுமான வெறுப்பை உன் இதயத்தில் பார்க்கிறேன்” என்றார் மீண்டும் தன் மாயப் புன்னகையுடன்.

விஜயலக்ஷ்மி மௌனமாகிவிட்டார்.

காந்தி மீண்டும் தொடர்ந்தார். ” நீ ஒரு புதிய நாட்டுக்குப் போகிறாய். ஏனென்றால் உனக்கு இங்கு இருப்பதில் சந்தோஷமில்லை. இங்கிருந்து தப்பித்துச் செல்லப் பார்க்கிறாய். ஆனால், உன்னிடமிருந்தே உன்னால் தப்பிச் செல்ல முடியுமா?

உன்னுடைய இதயத்திற்குள்ளே வெறுப்பு இருக்கும்பொழுது வெளியில் உன்னால் நிம்மதியுடன் இருக்க முடியுமா? நினைத்துப்பார். சற்று பணிவுடமை ஏற்படுத்திக்கொள். உனக்கு அன்பானவர்களை நீ இழந்துவிட்டிருக்கிறாய். அந்தத் துக்கம் உனக்கு போதும். உன்னுடைய இதயத்தை சுத்தப்படுத்திக்கொள்ள உனக்கு தைரியமில்லாமல் நீயே மேலும் உன்னைப் புண்படுத்திக்கொள்ளலாமா? என்றார் காந்தி.

விஜயலக்ஷ்மி எழுதுகிறார்:

அவருடைய வார்த்தைகள் என்னை விட்டு அகலவில்லை. அவை என்னை சமாதானப்படுத்தவில்லை. சிலநாட்கள் மனப்போராட்டத்திற்குப் பிறகு என்னுடைய மைத்துனருக்கு போன் செய்தேன். நான் புறப்படுவதற்கு முன்னால் அவரையும் குடும்பத்தினரையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னேன்.

அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் இருந்திருப்பேன். அதற்குள் அங்கு எல்லோரிடமும் இறுக்கம் தளர்ந்து சுமுக சூழல் ஏற்பட்டதை உணர்ந்தேன். அவர்களிடம் நான் என் பயணத்திட்டத்தை சொல்லி, வாழ்வில் என்னுடைய புதிய சூழலுக்கு என்னை வழியனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அதனுடைய விளைவு அற்புதமானதாக இருந்தது. என்னிடமிருந்து பெரும்சுமை நீங்கி நான் என்னிடமிருந்தே விடுதலையானதை உணர்ந்தேன்.

காந்தியின் ‘உனக்கு தீங்கிழைப்பார் யாருமில்லை. உன்னைத்தவிர’ என்ற வார்த்தைகளில் உள்ள பொருளை உணர்ந்தேன். இதை என் வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த சிறந்த புத்திமதியாக ஏற்றுக்கொண்டேன் என எழுதினார்.

Series Navigation

ரகுபதி ராஜா

ரகுபதி ராஜா