Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

கே ஆர் மணி



Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச

வாழ்க்கை அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அணுகும் முறை தேசத்திற்கு தேசம் இலக்கியத்திற்கு
இலக்கியம் வேறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. மனிதன் அடிவயிற்றுக்குள் எப்போதும் நிறைவேறாத உருண்டைகள்
உருண்டு கொண்டேதானிருக்கின்றன. இந்த சலிப்புற்ற தன்மையே, அடுத்த கட்ட தேடலை நோக்கி நகர்த்துகின்ற
உந்து சக்திகள்(Driving force). விஞ்ஞானிக்கோ, முனைவருக்கோ( Entreprenuer), சமயவாதிக்கோ, தத்துவவாதிக்கோ பொதுவாய்
அமைவது அதுதான். சதா உலகத்தறிவையெல்லாம உறிஞ்சி குடித்து தன்னையறிந்து மற்றும் தனது பிரபஞ்சமறிதல்
என்கிற அவாவைத்தான் சின்ன குழந்தை பசியென்று சொல்லத்தெரியாமல் அழுகிற அழுகையைப்போல மனிதன்
அழுது கொண்டேயிருக்கிறான். இதை தேடல் என்று சிறுசொல்லைவிட்டால் வேறு எதுவுமே அந்த அலைச்சலை
முழுமைப்படுத்தாது. தேடலை பலர் பலவிதமாய் தேடிக்கொண்டேயிருந்தார்கள். இருப்பார்கள். தேடலும், தேடியதும்’
உரசும்போது பற்றிக்கொள்கிறது தீ. படைப்பாய், கதாபாத்திரமாய், அறிவியல் கண்டுபிடிப்பாய், பிரபஞ்சமறிந்த
சூத்திரமாய் மலர்கிறது.

தேடலும், தேடியதும் உரச அவனின் அந்த தீ குளியலறையில் வந்தது. நிர்வாணமாய் ஓடினான். ஆர்க்கிமிடிஸ்.
GEயின் ஜாக்வெல்ஸ் அந்த கடற்கரையில் தனது இரண்டாவது மனைவியோடு குளித்துக்கொண்டேயிருக்கும்போது தேடலும்,
தேடியதும் தீண்ட, குபுக்கென அவருக்குள் பிறந்தது Boundryless business. இன்று பேசப்படுகிற அவுட்சோர்ஸ்
வியாபாரத்தின் ஆரம்பபொறிகளில் ஓன்றாகவாக அதைமதிப்பிடுவேன்.

ஜெயமோகனின் காடின் கதாநாயகன் காட்டில் எதைத்தேடினான். கன்னியாகுமரியின் கதாநாயகன் எதைத்தேடினான்.
நாஞ்சில் நாடனின் சில கதாபாத்திரங்கள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டேயிருக்கின்றன. ஜே ஜே வோ உள்ளும்
புறமும் தேடி அலைந்துகொண்டேயிருந்தவன். எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இப்படியொரு கதாபாத்திரங்கள்
அவர்களையறியாமலே வந்துவிடுகிறது போல. அம்பையின் கதையில் ஒரு பெண் தனது குடும்பத்தை விட்டு தற்காலிக
வனப்பிரஸ்தம் செல்கிறாள். [ஆம்பளைக்கு மட்டும்தான்னு எவன் சொன்னான் ? ] சில வயதொத்த மகளரோடு
தண்ணி மாதிரி எதையோ குடித்து மாமிசம் சாப்பிட்டு தனது தேடலை தேட முயல்கிறாள். இந்த தேடல்கள் வெறும்
போரடித்துவருவதனால்(bore) மட்டும் கிளைத்ததில்லை. தேடல், எதுவென்று சொல்லமுடியாத தேடல். அந்த தேடல்கள்
எழுத்தாளாரிடமிருந்து எழுபவை அல்லது அவர் செய்ய நினைத்துமுடியாமல் போன வாழ்க்கையிலிருந்து எழுபவை.

சங்கரநாராயணின் கிரணமழை – உணர்ச்சிபூர்வமான பிரபஞ்சதேடல் கொண்ட ஒரு கதாநாயகனால்
ஆனது. நாவல் ஒட்டத்தின் காலத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு கதைக்குள் புகுந்துவிடுகிறேன். காலத்தையும், அதன்
முன்,பிண்ணிகளை புரிந்துகொள்ளல் வரைபடத்தின் முழுமுகத்தை கோடிட்டுகாட்டுதலும் அதில் இதன் வரிசையை
வகைப்படுத்திக்கொள்ளலும் ஓரளவு புரிதலுக்கு பயன்படலாம்.

சோகமும், வெறுமையும், உக்கிரமும், பாசமுமற்றதுதான் வாழ்க்கை என்கிற போர்க்காலத்திற்குபின்னான
தத்துவத்தை, இடைக்கால புரிதலை நவீனத்துவமான பாணி என்ற பெயரிலும் ப்ராயிடின் தத்துவசாயம் பூசியும்
1960க்கு பின்னான நாவல்தளங்கள் உற்பத்திசெய்து கொண்டிருந்தன.

அரை கப் இல்லை, அரை கப் நிரம்பியிருக்கிறது [half empty, half fulled] என்பதற்கான வித்தியாசம்தான் இந்த
பார்வை. வாழ்க்கை சோகம்தான், சோகம் தவிர வேறில்லை என்றது ஐரோப்பிய நாவல்தளங்கள். சர்த்தாரும்,
காம்யூவும் இந்த நடையின் பிதாமகர்கள் என்கிறார்கள். இதை இருத்தயலியம் [extensilisam ] என்கிறார்கள்.
உதாரணம் அசோகமித்தரனின் கரைந்த நிழல்கள்

இல்லை அதையும் தாண்டி அதில் ரசிக்கவேண்டியவை நிறைய உள்ளன என்றது இந்திய நாவல்கள். அப்படிப்பட்ட
பார்வைக்கு இந்திய நீண்ட தத்துவஞான மரபு மட்டுமே காரணமாகயிருந்திருக்கமுடியும். இந்திய பொதுவாக
அதிகமாக ஆன்மீக அறுவடை நடந்த,நடக்கிற பூமி. ஆகவே இப்படிப்பட்ட சிந்தனை வந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.
உதாரணம் : கமலாம்பாள் சரித்தரம், ராஜமய்யர் ; ஒங்கூர் சாமி ஜெயகாந்தன், மெளனியின் ஏராளமானவை.

கதைச்சுருக்கம் : (www.ஜோதி.com)
ஜோதி உலகம் 1 : கல்லூரி, நண்பர்கள், பரிட்சை, வீட்டை விட்டு ஓட்டம், குயிலி – குறத்தி காதல் – ஞானத்தினவு,
தேடல் உலகம் 2 : நாகல்கேணி கார் பட்டறை, சந்தோசமான வேலை, வரமுறை தாண்டிய உறவு, இவனின்
அடுத்த கூடு காமம் படிக்க எடுத்த பாத்திரம் – சங்கரர் போல – ஞானம் கைகூடல்
உலகம் 3: பழையபடி வாழ்க்கை தடத்திற்கு வருதல், புழு, லார்வா பருவம் தாண்டி ஞான பட்டாம்பூச்சியாய் அவனது
வானத்தை அவனே வரைகிறான் – பழையயிடம், புதியவாழ்க்கை , கவிஞானாகிப்போகிறான்.

கோளம் உருள்கிறது. பாம்பு விழுங்குகிறது. கோளம் வெளிவருகிறது புதிய சட்டையோடு. பாம்பின் நக்கலோடு.
கிரகணம் விட்டுப்போகிறது. ஞானப்பாம்பின் வாயில் ஒவ்வொரு முறையும் விழுந்து எழுந்து வருகிறது சந்திரன்.
அது அதற்கு புதிய ஜனனம். ஓவ்வொரு முறையும் இந்த ஞானக்குளியல் நடக்கும். பாம்பும், கோளும் ஓயாத தங்களது
வேலை செய்துகொண்டியேயிருக்கும். ( கிரகணம் என்கிற தலைப்பு இன்னும் பொருத்தமாயிருக்குமோ? ) நாய் குரைத்துக்
கொண்டேயிருக்கிறது. கழுதை வருகிறது. இருள் கவிகிறது. ‘ஏய். கதை எங்கப்பா’ என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது.
பாம்பு, நாய்களுக்கிடையேயும் கதை போயிக்கொண்டிருக்கிறது. சினிமா கதையில் பாட்டுபோல பாம்பும், நாயும் வந்துகொண்டேயிருக்கும்.
தாவிப்படித்தாலும் தப்பொன்றுமில்லை, சாதாரண வாசகருக்கு. நீங்களும் இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளரென்றால் இந்த படிமங்களை
படித்தேயாகவேண்டும். கவித்துவ உருவகங்கள் என்று கீழே கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கலாம்.

தேடல் மிகுந்த ஜோதி, வள்ளலாரை கூம்பிட்டு நாயை எத்தும் அப்பா, துட்டு பார்த்து புன்முறுக்கும் அம்மா, வறுமையால்
வறண்டு போன பிரகாசம் தம்பி, தனது எழுத்தே உலகம் என்று ஈகோவாய் திரிகிற பிரேமி, தனது படிப்பு தனது முன்னேற்றம்
என்று ஒடுகிற தண்டபாணி, தன் ஈச்சையே முக்கியமாய் போய்விட்ட கல்பனா, நல்ல வாழ்க்கைக்கு முடியுமென்றாலும்
வேறு வழியின்றி நாடோடியாய்த்திரியும் குயிலி இவர்களுக்கிடையே நகர்கிறது கதை. இந்த கதாபாத்திரங்களின் முரண்களால்
கட்டப்பட்ட வார்த்தை இல்லம்தான் என்பது அவ்வளவு மிகையாகாது. [ முரண்களை முழுவதுமாய் படிக்க கீழே செல்லலாம்]

நிறைய நகைச்சுவையோடும், தாமிரபரணி குசும்போடும், நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சொற்களோடும் ஆசிரியரின் வார்த்தை
ஜாலங்கள் இல்லத்தை கொஞ்சம் இனிமையாக்குகின்றது. [ கீழே விரிவாய் ]

கதாபாத்திரங்களில் சில முனிசிபல் குழாய் ; சில கொல்லையில் ஒடும் கால்வாய் ; சில குளங்கள் ; சில ஆறுகள் ;
சில கலங்கிய குட்டைகள் ; இவன் ஒழுக்கமற்ற காட்டாறு. இந்த முரண்கள் மூலமே இருதுருவ வாழ்க்கைகளும்,
பொதுவிழுமியங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

கிரகணத்தின் ஒட்டைகள் : (குறை)
1. சொல்லிவைத்தாற்போல சொல்லிவைக்கப்பட்டபடி.. சில நிகழ்வுகள்..
2. ப்ரேமியின் காதல் தோல்வி – துபாய் போகிறாள். அது பழைய காலம், இந்த காலத்தில் எல்லோரும் யூஎஸ்ஸிக்கு
தங்கள் காதலிகளை தாரை வார்த்துகொடுக்கிறோம்.
3. குயிலி பிரசவம் – சினிமாத்தனம்.
4. முடிவு : புதுமைபித்தனின்/ஜெயகாந்தனின் ஹாங் ஓவர். ஏதோ மனிதாபினம் என்பதே விபச்சாரிகளிடம்
அன்பு செலுத்துவதுதான் என்பதை போல பஜனை.

80’களின் ஆரம்பகளில் கண்டிப்பாய் விரும்பபட்டு படிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் உணர்வு பூர்வமாய், எதுவுமற்ற
Clean Slate நிலையிலிருந்து, தன் மீது திணிக்கப்பட்டதையும், கற்பிக்கப்பட்டதையும் ஓதுக்கி, தன்னையை கேள்வியாக்கி,
தன்னுள்ளிருந்தே பதில் தேட விழையும் தேடல் கொண்ட கதாபாத்திரங்களுக்கு இந்திய நாவல் உலகில் என்றும்
இடமிருக்கும்போல. He is the man whom we may love to hate..!!

எனக்கு ஜோதியை பிடித்திருக்கிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கிறான். என் மெட்டிரிலிச வாழ்க்கை புன்முறுவலால்
கிழிக்கிறான். எனக்குள் குற்றணர்வு பேசாமலே தூண்டுகிறான். உலகத்தை பார் என எந்த சித்தாந்த சொறியுலுமின்றி
செவிக்குள் பறையறைகிறான். வலிக்கிறது. சில சமயம் வலியும், திசையும் தேவையாத்தானிருக்கின்றன.
உங்களுக்கும் தேடலிருந்தால் ஜோதியை பிடிக்கும்.

சுருங்கக் கூறின், கொஞ்சம் லாசரா, கொஞ்சம் திஜா, கொஞ்சம் தனது வாழ்க்கை என கலந்துகட்டி
வடிக்கப்பட்ட கலவை சாதம். சொன்னதே சொன்னாலென்ன.. எத்தனை தரம் சொன்னாலும் என் காதலியின்
i love you எனக்கு புதுசுதானே.

நீண்ட நெடிய பகுதி, மேலே சொன்னவைகளை விரித்து, புத்தகத்திலிருந்து குறிப்போடு எழுதப்பட்டது. சில வரிகள்
புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டப்பட்டு , அதைப்பற்றிய எனது வாசக எண்ணங்கள் எழுதப்பட்டுள்ளது. சில வரிகள்
அவ்வாறே கொடுக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரம்:

ஜோதி – உணர்வுப்பூர்வமான சூட்சும அறிவால் தேடலால் பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய முயல்பவன்
கனகசபாபதி, [கஞ்சா, அதீதமாய் எதிர்பார்க்கும் பெற்றோர், எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியாத தோல்விப் பாத்திரம் ]
பிரேமி, [ ஆசாரமான படிப்பு, ஒழுங்கு மூலம் வாழ்க்கையை பார்க்கும் பாத்திரம். எழுத்தும் உண்டு. உண்மையான
பிரம்மோபதேசம் அவனுக்கு ஜோதியிடம் கிடைக்கிறது. உண்மையில் இது அவன் வாழவேண்டிய அறிவு வாழ்க்கை.
காலமும், வாழ்க்கையும், வர்ணமும் அவனை எப்படி முகம் தொலைக்கவைத்ததை ஜோதியின் வாழ்க்கை காட்டுகிறது
ஜோதி ஒரு bench mark . ஒரு முனையின் பெஞ்ச் மார்க் ]
தண்டபாணி, [ ஆங்கில கணிப்பொறி படிப்பு, ஆளுமை, நயம், மூகமுடி போட்ட அதிர்வு ]
ஜோதியின் அப்பா – ஞானகுரு, தங்கை தீபா, தம்பி பிரகாசம்[ முரடு, வறுமை கொடுத்த வன்மம், பிழைக்கும் அதிர்வு]
பூபதி – காமம் விரும்பாத கர்ம யோகி. பொம்மை கணவன். கும்பகர்ணன். மற்றவனின் வைப்பாட்டிக்கு மனைவியை பினாமியாக்கியவன்.
உத்தண்டராமன் – விளையாடல் நிறைந்த அரசியல்வாதி.
கல்யாணி – சிக்கலான படிமம் கொண்ட பெண் எனும் மாயப்பிசாசு.

சில வினாக்கள் மூலம் இந்த நாவலை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
ஜோதி யார் ?: ; வாழ்க்கை பற்றிய அவனது எண்ணம்:

கதாசிரியரின்
கதாபாத்திர முரண்கள்
கவித்துவமான உருவகங்கள் :
சிறந்த சொற்பிரேயகங்கள் :
நகைச்சுவை, குசும்பு மற்றும் காமமும்
காமத்தை பற்றி எழுத்து தடை :
நுணுக்கமான வேலைப்பாடுகள்:
வலிக்காத போதிமரமாய்
கிரகண ஓட்டைகள் :

[சில வரிகள் புத்தகத்திலிருந்தே நேரிடையாய் எடுத்தாளப்பட்டிருக்கிறது]

ஜோதி யார் ?:

அறிவு ஜுவியா ? விதண்டாவாதியா ? தான் என்கிற மமதை வழிப்பட்ட பிதற்றல்காரனா ?
திமிர் பிடித்தவனா ? எல்லாம் தெரிந்த பாவனையுள்ளவனா ? பைத்தியமா ? வக்கிரமானவானா ?
தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் மனம் பேதலித்தவனா ?

அத்வைதி. அடிப்படையில் கலைஞன்.

இந்திய தத்துவ ஞானமரபின் தொடர்ச்சிதான் ஜோதி. மிகப்பெரிய அவைதிகளாக அறிவியல் நாத்திக சித்தர்களின்
தொடர்ச்சியா ஓங்கூர் சாமி போல, சங்கரர் போல. பற்றற்ற தன் தேடல் ஆன்மீகத்தேடல் கொண்ட இந்திய
மனத்தின் bench mark ஆ? அடையாளமா ? இந்த மாதிரி கதாபாத்திரங்கள் மேலை இலக்கியங்களில் சாத்தியமேயில்லை.
அவனது தனிமையும், வெறுமையும் வாழ்க்கையின் உன்னதமும் பிரபஞ்சத்தோடு அதன் பெரியபடத்தோடு இணைக்கப்படுவதேயில்லை.
மனிதனின் அன்பதைதாண்டிய உலகம்பற்றிய பெரும்வினா அது. அவர்களின் உலகம் அவர்களோடும் அதிக பட்சம் அடுத்த
மனிதனோடுமே முடிந்துவிடுகிறது.

வறுமை ஜோதியை பற்றற்ற மீதின் பற்றவைக்கும் மனிதனாக மாற்ற, அவனது தம்பி பிரகாசம் வன்மமாய் மாறிப்போகிறான்..
ஒரே பெற்றோரிடமிருந்து வரும் விதைகளில் தான் எத்தனை வேறுபாடு.

தனது காதலி குறத்தி குயிலுக்கு அறிவுரை சொல்லுவதற்காக தானே திருந்துகிறான், குளிக்கிறான், புகைப்பதைவிடுகிறான்.
அறிவுரை சொல்லும்முன் தன்னை திருத்திக்கொண்ட ராமகிருஸ்ணரைப்போல ஒளிர்கிறான்.

குயிலுக்காக காத்திருந்தான். அவன் மனம் சிந்தனையின்றி அமைதியாய் காத்து கிடந்தது./ அவன் தத்துவஞ்ஞானி. மனம்
அமைதியாய் காத்துக்கிடக்குமா என்ன.. பரமாணுவின் ஒருதுகள் நான் என்று அறிதலில்லாமல் முடியுமா என்ன..

ஏன் வீட்டை விட்டு ஓடிப்போகிறான் ?
‘கொஞ்ச நாள் தனியா இருக்கணும். நெறய அனுபவப்படணும். நெறய யோசிக்கணும். நெறய பக்குவப்
படணும்னு தோணிச்சி..’ /ஏன் வீட்டை விட்டு வந்தேன் என்பதற்கு அவன் கல்பனாவிடம் கூறும் பதில்.
பற்றற்று சுத்தல், தேடல், தன்னை வளர்த்துக்கொள்ள தன்னையே வருத்திக்கொள்ளல், குட்டையில் ஒடும்
தண்ணீராகிவிடக்கூடாது என்பதில் கவனம்/

எதுவும் கிடைக்கதாதல் ஏமாற்றமோ, இன்பமோ சுத்தமாயில்லை. [ பரப்பப்ரம்ம ரிஸிகி: அநுச்ட்ப்பு சந்தாக ]

பாம்பு கடிக்காமல் போகிறது. நாய் அவனை வரவேற்கிறது. ஒரு அமானுஸ்யமான மனிதனாக காட்டும் உருவகத்தன்மை கதாபாத்திரத்திற்கு
கூடுதல் வலுசேர்க்கும்.

உடற்காதலி மற்றவனின் மனைவி கல்பனாவிடம் :
‘எனக்கு இந்த உலகத்துல பாலத்துதுக்கு அடில பாயற தண்ணி வரை எல்லாமே பிடிச்சிருக்கு. நா என்னை எங்கயுமே
நிறுத்தி வெச்சிக்க முடியாது. நா சாமியார்தான். எதுவும் பிடிக்காத சாமியாரில்ல.. எல்லாமே அநுபவிக்க,
ரசிக்க உள்ள சாமியார்.’

அவனே அவன் யார் என்பதற்கு வாழ்க்கையின் மூலம் பதிலளிக்கிறான்.

கவனம்
நான் விறகல்ல
புல்லாங்குழல்

பேசிக்கொண்டேயிருக்கிறேன்
மெளனத்தை பத்தி.

வாழ்க்கை பற்றிய அவனது எண்ணம்: 98, 133, 175,

வாழ்க்கை வயிறல்ல. வயிற்றுப் பசியல்ல. வாழ்க்கை உடலின் உபாதைகளல்ல. வாழ்க்கை என்பது
ஆத்மாவின் பலம். இயற்கை சார்ந்த ஆனந்தம். எதிர்பார்ப்பற்ற ஆனந்தம். /தேடிச்சோறுநிதன் தின்று
சிலசில சின்னஞ்சிறு கதை பேசி..

தான் வாழ்ந்த வட்டத்தை ஜோதி விரித்துக்கொண்டே வந்திருக்கிறான். / விரிந்து, விரிந்து , சுருங்கி
பிரபஞ்சத்தை தெரியமுற்படுவதுதான் அவனது வாழ்க்கையின் குறிக்கோளாயிருக்கிறது.

‘சுதந்திரம் எப்படி முக்கியமோ, எப்படி அது சரித்தரம் மூலம் உணர்வு பூர்வமாய் அறியத் தரப்படுகிறதோ
விஞ்ஞானமும் அப்படியே வழங்கப்பட வேண்டும் என்பான். ‘
உணர்வும், அறிவும் கலக்குமிடங்கள் அற்புதமானவை. அறிவியல் ஆன்மிகம் என்கலாமா ?
மூளையிலிருந்து படிப்பது இதயத்திற்கும் போகும் போது அது அதீத மின்சக்தி பெறுகிறது.

‘கிரஹன் ஜோஹர். மைக்ராஸ்கோப் இல்லாதகாலத்திலே எப்படி செல் பற்றி கண்டுபிடித்தான் ‘
ஜோதிடம் மூடநம்பிக்கைதான். அதை சொல்ல பெரிய நாத்திகமனம் தேவையில்லை. சரியான அறிவியல்
ஆன்மீக மனம் அதை ஆமோதிக்கும். ஆனாலும் எதுவும் இல்லாமல் இத்தனை கிரகங்களையும் நம் மனிதர்களால்
ஏறத்தாழ எப்படி சொல்லமுடிந்திருக்கிறது. மனம் பற்றி எழுதிய பதஞ்சலியோகத்தை மானுட உள்ளுண்ர்வும்,
அறிவுமே அறிவியலை பிரசவிக்கின்றன. ஜோதியின் பிரமை ; மானுட அறிவின்மீதான பிரமை..

‘உன் சார்பான ஒரு பிரச்சனையின் முடிவு கருதிப் பிறரை வற்புறுத்தவும் துன்புறுத்தவும் உனக்கு
எந்த அதிகாரமும் கிடையாது. உன்னால் பிறர்க்கு இன்பம் விளையுமானால் உனக்கு நேரும்
துன்பம் துன்பமில்லை. உன் இன்பத்துக்காக பிறர் துன்பத்தை அனுபவிப்பது சகிக்ககூடாது.
குயிலுக்கு நீ கொடுத்தது துன்பமல்லாவா. அதற்கு நீ மட்டுமல்லவா. பொறுப்பு. 89
[ இவர்களின் உறவு கண்டு நாடோடி கூட்டம் அவளை அடிக்கிறது. இவனது காதலிழப்பைவிட
அவள் துன்பம் உறுத்தலே இவனுக்கு அதிகமாய்படுகிறது. அதில் இவனது இழப்பு தொலைந்தே போகிறாது.
இவன் வாழ்க்கை தராசிற்கு மற்றவரின் இன்பம் என்ற படிக்கட்டு மட்டுமேயுள்ளது. இப்போதைய
தனி மனித நவீனத்துவத்தின் செல்லாக்காசா இவன்? ]

[கல்யாணியிடம் ]
அடிமைப்படுதல் எந்த விசயத்துக்கும், எவருக்கும், எதற்கும் எக்காலத்திலும் அடிமைப்படுத்தல்
கூடாது. சாராயமானாலும் பெண்ணானாலும் கூடாது. இந்த வருசங்களில் அவன் மீண்டும்
சராசரித்தனமாய் ஆகிவிட்டது. சமூக அமைப்பில் சிக்கிக் கொள்கிற எவனும் மீளமுடிவதில்லை.
உறவுகள், சார்ந்திருத்தலை எக்கணமும் வலியுறுத்துகின்றன. பழைய உறவுகள் மீறிப் புது
உறவுகள். எனில் பிறரை கவனம் செய்து கொண்டுவாழ்தல் என்பது தவிர்க்கமுடியாது
போய்விடுகிறது.

உணர்தல் : 195
பொம்மை கணவன் பூபதி..
ஓர் ஆளின் அறியாமையை தன் வக்கிரத்துக்கும், சுயநலத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளுதல்
எவ்வளவு கேவலமானது.?ஜோதிக்கு தன் பலவீனங்கள் புரிந்தன.

கதாபாத்திர முரண்கள் 47, 176

கதாபாத்திர வித்தியாசம் 102
தண்டபாணி Vஸ் ஜோதி

தன்னுள் இறுக்கமான குறிப்புக் காட்டாத முகம். நம்முடன் இருந்தாலும் நம்மைக் கடந்த ஒரு
தளத்தில் அவன் இருப்பதை உணரமுடியும். உணரமுடியுமே தவிர விளக்கமுடியாது. காரணம்
ஜோதியிடம் ஒர் நெகிழ்வான அதே சமயம் அழுத்தமான மெளனம் இருந்தது. சுயபலம் சார்ந்த
ஆனால் ஆளுமையற்ற நிதானம்.

தண்டபாணி – புத்தக அறிவு, புத்திசாலித்தனமான பேச்சு.

ஒழுக்கமும், ஒழுக்கம் எதிர்த்தலும்

‘இளமை ஒழுங்குமுறைகளுக்குள் அடங்கவேண்டும். பணிவு வேண்டும். பணிவு இன்றிப் பண்பு இல்லை. கட்டுப்பாடுகள்
இல்லாத இளமை உருப்படாது. தான் தோன்றித்தனம், மனம்போன போக்கில் போவது ஆபத்து ‘ பிரேமியின் அப்பா.

ஜோதி கட்டுபாடற்றவனாய் இருந்தான். படிக்க என்று தனியான நேரம் அவனிடம் இல்லை. தனியான ஒழுங்கு இல்லை.
ஜோதிக்கு பாடப்புத்தகமும் நூலகப்புத்தகமும் வேறு வேறானவையல்ல. ஜோதி தன்னுள்ளே கேள்விகளை வைத்திருந்தான்.
அவன் வாழ்க்கையே கேள்வி கேட்பதும், அதற்கான பதிலை வாழ்ந்து பார்ப்பதுமாயிருந்தது.

அவனுக்கு ஏன் நாடோடி வாழ்க்கை பிடித்துப்போனது ?
அவர்களின் பற்றற்ற தன்மை அவனை அவனுக்கே காட்டுகிறது. அவர்களின் கொஞ்சம் திருத்தப்பட்ட பிரதியாய் தன்னை
காண்கிறான்.

கவித்துவமான உருவகங்கள் :
இருள் 95,96, நாய், கழுதை

இருளையும், நாயையும் ஆசிரியர் விடுவதாயில்லை. எல்லாக்கதைகளிலும் எப்படியாவது இவை வந்துவிடுகின்றன.

‘வழி தெரியாத இருள். திக்கு திசை தெரியாத இருள். கால் துழாவிற்று. தரை தடுமாறிற்று. ஒரு வேடிக்கை போல
அவன் இருட்டை இரு கையிலும் ஏந்த முயற்சித்தான். அப்படியே இருட்டை வாயில் போட்டு சுவைக்க விரும்பினான்.
பசியை போல இருட்டும் ஓர் இரக்கமற்ற பயங்கரத்தோற்றம் தருவதாய் உணர்ந்தான். பசியின் தீ நாக்குகள் அவனிலிருந்து
கொழுந்து விட்டுக் கிளம்பி இருட்டுக்கரியை எரித்தன. ‘

‘இருட்டு வானம் பூமியில் எறிகிற குப்பை ‘

‘இருட்டின் தரிசனத்தின் பரவசம் ஒர் அற்புதமான அனுபவமாய் இருந்தது. ஒரு குழந்தையின் வேடிக்கை
போல அவன் அப்படியே துள்ளி இருட்டில் முட்டிக் கொள்ள வலிக்கிறதா என்று பார்த்தான். தலையை
அசைக்கும்போது இருட்டு ஒரு ராட்சத பெண்ணுருவமாய் வானுக்கும் பூமிக்கும் நிற்கிற மாதிரியும், தான்
அவளது பெரிய ஸ்தனங்களின் மீது புரள்வாதாயும் தோன்றியது. ஒரு குறுஞ் சிரிப்புடன் அவன் நாக்கை நீட்டி
இருளில் தூழாவினான்.

இருட்டு காரிருள் கடந்த பேரிருள். சர்வ வியாபி. அடையாளங்களை அழித்து கரைத்த இருள். இருள் ஒரு பிடிவாத
பல்கடிப்புடன் உருவகங்களுக்கு நிழல்களை மாட்டிவிட்டது. கரிய சரியான அளவிலான நிழல்கள். முற்றிலும் எதுவுமின்றி
சூன்யமாகிப்போன நிலை. அவனையே அவனிடமிருந்து இருட்டு பிடுங்கிக் கொண்டது. இருட்டு அவனையே ஒரு
இரப்பரால் அழித்து விட்டதா. மனசை மட்டும். அவன் ஆத்மாவை மட்டும், உயிரை மட்டும் விட்டுவிட்டு மீதியை
இருட்டு பிடுங்கிக் கொண்டதா ? ‘

நாய் :
1) நாய்க்கு கோபம் வந்துவிட்டது. இப்போது பலமாய் அது ஆட்சேபிக்க ஆரம்பித்தது. பின்னரவில் கதவு தட்டல் கூடாது
என பிரகாசத்திடம் சில அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்தது. நாய் மேலும் தர்க்கரீதியான நியாயங்களை முன் வைக்கு முன்
சீ சனியனே கம்னிரு என்று ஒரு அதட்டல் கேட்டது. நாய் அதை ஒரளவு அதை எதிர்பார்த்திருந்தது போல. அது வாயை
மூடிக்கொண்டாலும் ரரிலே ரேஸ் போல சற்றுத்தள்ளி ஒரு தெருநாய் குரைத்தல் தொழிலுக்கு பொறுப்பேற்று கொண்டது.
சாப்பிட கொடுத்தவுடன் சமாதனமாகியது, நிரந்திர பசி அதற்கு. 15

2) நாய் கடவுளை கண்டதுபோல உடம்பு சிலிர்க்க வாலாட்டியது. பேசத் தெரிந்தால் ஒரு சீட்டுக் கவியே பாடியிருக்கும்.

கழுதை :
குதிரையின் முன் கால் உயர்ந்த பொம்மையுடன் உக்கிர ஐயனார் நின்றிருக்க, கீழே இரு கழுதைகள்
நிழலுக்கு நின்றன. தாங்கள் அற்பப் பிறவிகள் என அறியப்படுவதை அவை வெறுத்து முறையிடுவதாக
ஒரு நினைப்பு எழுந்தது. குதிரையை அல்ல, தங்களை வாகனமாக ஏற்றுக்கொள்ள இறைஞ்சி
அவை தலைகுனிந்து நின்றதாக ஒரு எண்ணம்.

ஆற்றங்கரை மண்டபத்தில் கழுதைகளை பார்க்கும் போதெல்லாம் இரக்க உணர்வு ஏற்படும் அவனுக்கு
மந்தத்தன்மை. அவலட்சணம். குரல் கூட எரிச்சலை கிளப்பும் படியான கழுதைகள். காகிதத்திலிருந்து
நரகல் வரை எது கிடைத்தாலும் உண்ணும் கழுதைகள். குட்டிகள் அழகும் துறுதுறுப்புமான கழுதைகள்
வயதாக ஆக மந்தத்தன்மையும் விகாரமும் பெறுகின்றன. சிறிதும் லஜ்ஜையின்றி அவை மனசாலே
சிற்றின்ப சுகம் அனுபவிக்கிறபோது எத்தனை கேவலமான பிறவிகள் என்று தோன்றுகிறது.

சிறந்த சொற்பிரேயகங்கள் :
லோட்டா டம்ளர் காபி,
பராக்க வெட்டித்தனமிருக்காது. , 46
துணியை அடித்து துவைக்கிறார்கள். வாழ்க்கையல்லவா இவர்களை கல்லில் துணியாக அடித்து துவைக்கிறது. 86,
இது வியர்வையின் உலகம். / ஆட்டோ ஸாப் 149

நகைச்சுவை, குசும்பு மற்றும் காமமும்

குசும்புகளில் பலவகை. இது காவேரிக்குசும்பல்ல.. தாமிரபரணிக் குசும்பு. வாழைப்பழத்தின் ஊசியல்ல.
அல்வா கொடுப்பது போன்றது.
167 – திரும்பி வந்த கதையை மறுபடியும் தவறிப்போய் அனுப்ப, அது பிரசுரமாகிவிடுகிறது.

120 – எந்தூருப்பா..
ஒங்கூருக்கு பக்கத்தூரு.
அடடே.. அப்ப எங்கூரு தெரியுமா ஒனக்கு.
எங்கூருக்கு பக்கத்தூரு.

121 – எம்.எல். ஏ ஆடு சாப்பிடுவார். இதோ ஓர் ஆடு எம்.எல்.ஏவை சாப்பிடுகிறது.

88 -உங்க மகன்ல அவர் பிரெண்டு.
எனக்கு மவனேயில்லையே
அதங்க சம்முவத்தோட அப்பபதானே.
எனக்கு இன்னுங் கல்யாணமே ஆகலியே என்றார் பயந்து
‘தம்பி எந்த சம்முவத்த சொல்லுதிய..
அதாங்க ஒங்க மவன்.
எனக்கு அய. இன்னும் கல்யாண ஆகலியேப்பா..
‘அதெனலான்ன.. கல்யாணமியிட்டா பிள்ளைக்கு சம்முவம்னு பெயர் வைங்க..

காமத்தை பற்றி எழுத்து தடை :
[குயிலி முதல் மனக்காதல் ,கல்யாணி – உடம்புக்காதல் ; பொருந்தா காமம், வரைமுறையற்ற காமம்
[ 145, 147, 170 – ]

74,75 அந்த விநாடியில் தன்னை முழுதும் அவனிடம் ஒப்படைக்க அவனது அடிமையாக அவளுக்கு
வெறியேற்பட்டது. விநாடிகளின் செளந்தர்யமும் வாசனையும்.. அவளைத் திணறடிப்பதாய் இருந்தது. அடிநாக்கில்
தேனின் தித்திப்புத் தட்டியது. மிக உன்னதமான கணமொன்றின் தரிசனம் அவளுக்கு ஏற்பட்டது. மயக்கம் வரும்
போலிருந்தது. அவன் மனம் அமைதியாய் இருந்தது. [குயிலின் மூத்தத்தில் ஞான தரிசனம் ஏற்படுகிறது.
தியானமான காமம் [ராமனின் காமம் போல]. First kiss of the lady, last buff of the cigrate..]

‘மிகவும் சுருக்கமாக ஆனால் எளிமையாக அவனுக்கு அறிமுகமாயிருந்தாள் அவள்.’

‘கல்பானாவில் அருகாமை ஒரு பெரிய பலம். தனித்த இரவுகளில் அவள் அவனுக்கு
ஆத்ம ஒத்தடங் கொடுத்தாள் ‘

‘ஒரு பெண்ணின் தாக்கம் ஓர் ஆணிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் அவனுக்கு மலைப்பாயிருந்தது.
உடல் ரீதியாய் ஒரு மனம் திருப்தி பெற்றுவிட்டால் புயல் ஒய்ந்த அமைதிபோல வாழ்க்கை
எவ்வளவு இனிமையய் இருக்கிறது.’ [ புயலின் மையம் அமைதி – ஓசோ..]

[ பொருந்தாக்காமம், வரைமுறை தாண்டிய காமத்தை எழுதுவது ஓவ்வொரு கட்டுப்படான ஆசிரியருக்கும்
கொஞ்சம் சவாலான விசயமாகத்தான் பட்டிருக்கிறது. பரவலான வாசக சந்தையை தான் இழந்துவிடக்கூடாது
என்கிற பயமும், அசிங்கமான விசயம் என்கிற ஆழ்மன கருத்தும் முக்கியமான காரணமாயிருக்கலாம். ‘நான் ஆதவன்’ ..
நாவலில் மிக அழகாக சொல்லப்பட்டது. எந்த ஆசிரியருக்கும் அது கத்தி மேல் நடக்கும் பகுதி..
பாலகுமாரனின் மெர்க்குரிபூக்கள் – யதார்த்தமும் பின் நாடகபாணியும் கொண்டு அமைக்கப்பட்ட பகுதி அது. ]

நுணுக்கமான வேலைப்பாடுகள்:
105 தபால் – பெட்டியில் போடல் யதார்த்தம் நுணுக்கம் ‘ நிறைய தபால் பெட்டிகள் இப்படிதான் கடிதத்தை
சாப்பிட்டுவிடுகின்றன ‘

124, 125 – ஆட்டோக்கடையில் கதாநாயகன் தனக்கு பிடித்த வேலை செய்வதன் சந்தோசமும்,
வேலை முடித்த பின்னான சாப்பாட்டு சந்தோசமும் – பிடித்த வேலைக்கு பின்னான மன உணர்வை
அழகாய் காட்டுகிறது.

135, 149 – ஊரின் இயல்பு

ஒவ்வொரு ஊருக்கும் தன்னியல்பாய் ஒர் உருவம் அமைந்துவிடுகிறது. அந்த ஊரின் இயற்கை வளமும்
மக்களின் தராதரமும் வண்ணங்களாக அமைகின்றன. எப்படிபார்த்தாலும் ஒரு ஊரைப்போல இன்னொன்று
இருப்பதில்லை.

நாகல்கேணி நல்ல ஊர்தான். காலை நாலு மணிக்கே அங்கே விடிந்துவிடுகிறது. தெருவில் அப்பவே
ஜனசந்தடி ஆரம்பித்து விடுகிறது. பால்கேன் சத்தங்கள். ஊய். என்று மாட்டை விரட்டியபடி கயிற்றை
சுழற்றி மாட்டைப் படாரென்று அடிக்கிறதும், மாடு கன ஓட்டம் ஓடுவதும், சைக்கிள் மணியோசை,
டீக்கடையில் சீர்காழியோ, கே.பி.சுந்தராம்பாளோ. பன்னிகள் இராப் பூராவும் எதையாவது கடித்துக்
கொண்டு சுற்றித் திரிகின்றன. லாரிச் சத்தம், நாகல்கேணி பரவாயில்லை. நல்ல வியாபார ஸ்தலம்.
அரசாங்கக் கிட்டங்கியே இங்கிருக்கிறது.

[சுராவின் புளியமரத்தடி, திஜாவின் கும்பகோணமும் நமக்கு நினைவை சுரண்டும் ]

வலிக்காத போதிமரமாய்
எழுத்தாளர் கனவு: 107, 184, 188
[கீரிடம் வந்ததுபோல நினைப்பு, தலைப்பில் புதுமை, உலகத்தை புரட்ட பிறந்த நெம்புகோல் கவிதைகளென
திமிரிடுன் திரியும் எழுத்தாளர். தன் எழுத்தை பற்றி படித்து வாழ்க்கை படிக்காமல்போகிற எழுத்து அவனது.
எழுத்தாளனின் முகத்திரை கிழிகிறது ] 188, 189,190,

‘தார்மீக கோபம், மார்க்கிசிய ஆசியும் எழுத்தாளனின் அளவுகோல் என்பதை தாண்டி என்னை
உணரவைத்த அவனது எளிமை கவிதைகள் ‘

‘Life is vast Canvas. உனக்கு கிடைக்கிறது கொஞ்சத்துலயும் கொஞ்சம்.ஆனா அறிவுக்கு சக்தி
ஜாஸ்தி. மொழிக்கு உக்ரம் ஜாஸ்தி. அறிவால உணரனும். ‘

‘வரதட்சணை வாங்கமா கல்யாணம் பண்ணுவியா, செவ்வாய்தோசம் பெண்ணை கட்டிப்பியா..
விதவையை கல்யாணம் பண்ணிப்பியா. மாட்டில்லா.. நானும் மாட்டேன். நீ செயிலுக்குபோன
தற்கொலை பண்ணிப்பியா.. உங்கதாநாயகி மட்டும் ஏன் பண்ணிக்கணும்..
தெரிஞ்சத வெச்சிகிட்டு தெரியாத கேள்விகளுக்கு பதில் தேடக் கற்பனை பண்ணு. திருப்பத்திற்காக எழுதாதே.’

‘நம்ம அறிஞ்ச சாதாரண வார்த்தைகளை வெச்சிகிட்டு அதுக்குள்ள பிரமிக்க வைக்கிற
விசயங்களை சொல்றது. அதுக்கு கலைப்பார்வை வேணும். கூரிய அறிவும் வாழ்க்கையில்
நம்பிக்கையும், எதிர்பார்ப்புமில்லாத அன்பும் வேணும்..[ நீ எங்க கத்துகிட்ட.. பிரேமி கேட்கிறான் ]’

‘வாழ்க்கை முக்கியம், கலையை விட..’
[ இந்த டில்லி குளிரிக்கு தேவையெனில் எனது எல்லா பக்கங்களையும்
அந்த சேலத்து சிறுமிக்காக கொளுத்தவேண்டும். சுஜாதா..கணையாழியின் கடைசிப்பக்கம் ]

‘குஸ்டரோகம்ன்றெதென்ன.. உடம்பு பாதி அழிஞ்சு பாதி மிச்சமிருக்கிற நிலைதானே.. வாழ்க்கை எப்படி..
முழு சந்தோசமில்லாம.. முழு தூக்கமுமில்லாம..’

பிரேம்மியின் சுயவிமர்சனம் – 235

‘என் படிப்பறிவும், குலமும் வளர்ப்பு முறையும் ஒழுக்கம் பற்றிய கவனமும் பக்தியும்.. யாவும் சேர்த்து
என்னைக் கைவிட்டன. அவன் முன்னே. ஜோதியிடம் மானுடப்பரிவு. அவனது ஆத்மாவின் புன்னகையின்
ஒளி எனக்கு வசீகரமாய் இருந்தது. நாளுக்கு நாள் அது விகசித்து உருப்பெருகி வந்தது. உடம்பெங்கும்
ஒளி பாய்ச்சி நின்றது அது. ‘
[மிக பிரமாதமான சுயதெளிவு. தனது கூட்டைவிட்டு மானுடம் என்கிற புள்ளியில் சேர்வதற்குத்தானே
இத்தனையிசங்களும், திட்டங்களும். மிகப்பெரிய அத்வைத தத்துவத்தை அசல்டாய் புரியவைத்துவிட்டான் ஜோதி.
இதைப்போன்று அவனை சுற்றியுள்ள அனைவர் வாழ்க்கையிலும் அவனால் ஒளிவிச முடிகிறது.]

முரண்களாய் வாழ்க்கை, பாத்திரங்கள் – அதை விளக்கும் கவிதை கீழே.

சுலபம்
உடைத்தால் தொழிலாளி
செதுக்கினால் சிற்பி

சிற்பியை பார்த்து
முறையிட்டது கல் –
என்னை மூளியாக்கிவிட்டாய்.

[ சயான் தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்டு, இணையத்திற்காக சிறிது ஓழுங்குப்படுத்தப்பட்ட வடிவத்திலான விமர்சனம்]


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி