கலைஞருக்கு வயதாகி விட்டதா?

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

ராஜா வாயிஸ் , மும்பை


தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு எத்தனை வயதிருக்கும் என்பது ஊகித்துப்பார்க்க வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தனியாக அவரால் நடந்து போக முடிவதில்லை. முன்னர் தயாநிதி மாறன் இருந்த இடத்தில் இப்போது கைகத்தடி கொடுக்கலாமா என்று மருத்துவர்களும் அவர் அரசியல் நண்பர்களும் ஆலோசனை தந்துகொண்டிருந்தாலும் அவ்வப்போது பலர் என்னை ஏமாற்றினாலும் தொடர்ந்து மனிதர்களைத்தான் நான் நம்புவேன் என்று அடம்பிடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் ராசாவையோ அல்லது வேறு யாரையாவது பிடித்துக்கொண்டு அவர் பொதுநிகழ்சிகளில் கலந்து கொள்ளுகிறார்.

இந்திய அரசியலிலோ அல்லது உலக அரசியல் அரங்கிலோ பல தலைவர்கள் முதுமை காலத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த காலத்தில் முதிய அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த காலத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படாத பலர் அதிக வயதிலும் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இவ்வளவு அதிக வயதில் யாரும் முக்கியமாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பதவிகளில் இருந்தது கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியில் சுர்ஜித் மற்றும் மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு போன்றவர்கள் அதிக வயது வரை பொதுப்பணிகளில் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதிக வயதில் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். 80 வயதிற்கு மேல் ஆனாலும் மகாராஸ்ட்டிராவில் கூட சிவசேனா தலைவர் பால்தாக்கரே இருக்கிறார். கேரளா முதலமைச்சர் கூட 80 வயது கடந்தவர் தான். ஆனால் நம் ஊர் முதலமைச்சர் மாதிரி 84 வயது ஆனாலும் அதிகாலையில் இருந்து நடுஇரவு வரை முதலமைச்சராக, கட்சித்தலைவராக, இலக்கியவாதியாக பணியாற்றக்கூடிய யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு எங்கள் கட்சி தலைவர் எங்கிருக்கிறார் என்று கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு கூட தெரியாது என்று சொல்லுமளவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க கூடிய ஒரு தமிழக அல்லது இந்திய இன்னும் ஏன் அகில உலக தலைவர் கலைஞர் கருணாநிதியாக மட்டும் தான் இருக்க முடியும்.

எப்படி முடிகிறது இவரால் என்பது ஒருபுறம் இருந்தாலும், இவர் இனி ஓய்வு எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று சிலர் பேசினாலும் தமிழர்கள் எல்லாம் பெருமைப்படக்கூடிய வகையில் அவர் ஒரு சுறுசுறுப்பான முதியவராக இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கலைஞர் கருணாநிதியை பற்றி பல விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் ஸ்கிரிப் ரைட்டர் இல்லாமல் எல்லா விசயங்கள் பற்றியும் பேசக்கூடிய ஒரே இந்திய அரசியல் தலைவர் கருணாநிதி மட்டுமே. பெரும்பான்மையான அரசியல்வாதிகளுக்கு வரலாறே தெரிவதில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்க்கு பூகோள அறிவு பூஜ்ஜியம் என்கிறார்கள். கடந்த வாரத்தில் மும்பையில் ராஜ் தாக்கரே கட்சி கவுன்சிலர்களில் பலருக்கு சத்ரபதி சிவாஜி எந்த காலத்தில் வாழ்ந்தார் என்பது பற்றி கூட பதில் தெரியவில்லை என்று மும்பை மாலை இதழ் ஒன்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்து.

ஆனால் நம் முதலமைச்சர் இன்றைக்கும் கேட்பவர்கள் சலிப்பு தட்டாமல் எல்லா விசயங்கள் பற்றியும் பேசுகிறார் என்றால் அது ஆச்சரியம் தான். ஆமாம் இவர் இப்படி பேசித்தான் இந்த தமிழகத்தை கெடுத்தார் என்று சிலர் பேசினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. ஆனால் திரைக்கதை எழுதக்கூடிய, இலக்கியம் படைக்கக்கூடிய, சட்டசபையில் மணிக்கணக்காக பேசக்கூடிய ஒரு தலைவர் வேறு யாரும் இருக்கிறார்களா என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் அறிஞர்களாக இருப்பது வரலாற்றில் வெகுசொர்ப்பமே. அதுவும் எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது மொழி மற்றும் பண்பாட்டு தாகத்தில் செயல்படுவது இன்னும் கடினமே. சமீபத்தில் அவரின் தமிழ் புத்தாண்டு பற்றிய அறிவிப்புகள் இதில் அடங்கும்.

1572 யில் வெளியான தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் அச்சு நூல் தந்த குறிப்பை வைத்து தான் இந்த தமிழ் புத்தாண்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் இது கிறிஸ்தவ மிஷனரிகளின் சதி என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் தம்பிராண் வணக்கம் நூல் தூத்துகுடி பரதவ மீனவர்களின் பணத்தில் உருவானது என்று அந்த நூலில் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த நூலை எழுதியது யூதர் இனத்தைச் சேர்ந்த சுவாமி ஹென்ட்ரிகஸ் என்பது பேருக்குத்தான். அதன் இணை ஆசிரியர் ஒரு உள்ளூர் பரவர் என்பது தான் வரலாறு சொல்லும் உண்மை.
சமீபத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் 60ம் பிறந்த நாள் பற்றிய தனது கட்டுரையில் ஒரு பிரபல எழுத்தாளர் கருணாநிதிக்கு அடுத்து தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் ஸ்தானம் மற்றும் பிரபலத்திற்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று எழுதியிருந்தார். ஆனால் கருணாநிதிக்கு பின்னர் அவர் இடத்தை பல கோணங்களில் யாரும் அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாது என்பது தான் உண்மை.

Series Navigation

ராஜா வாயிஸ் , மும்பை

ராஜா வாயிஸ் , மும்பை