குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

வணக்கத்துக்குரியவன்


குழந்தைகளை பெற்றோர் அடிப்பது எத்தகைய ஆபத்தை அளிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.பள்ளிகளிலும், வீடுகளிலும் குழந்தைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர் அடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
இத்தகைய குடும்ப வன்முறை பலகீனமான குழந்தைகள் மீது பெற்றோரால் நடத்தப்படுவது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்கின்றன ஆய்வுகள்.முத்தோர் இளையோரை அடிப்பது சரியே எனும் வன்முறை கலாச்சாரம் மிக எளிதில் குழந்தைகள் மனதில் விதைக்கப்படுகிறது. அதனால் அவர்கள் தமது தம்பி,தங்கைகளை அடிக்க துவங்குகின்றனர். பள்ளிகளில் மற்ற குழந்தைகளை அடிக்கின்றனர்.திருமணமானபின் தமது மனைவியை அடிக்கின்றனர்..பெண்ணாக இருந்தால் தமது குழந்தைகளை அடிக்கின்றனர்.

இந்த வன்முறை அனைத்துக்கும் அடிப்படை பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகளை அடிப்பதே.

நார்வே,ஸ்வீடன்,ஆஸ்திரியா,டென்மார்க் போன்ற நாடுகளில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்.இந்த நாடுகளில் பள்ளிக்குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது.எத்தனைகெத்தனை அதிகமாக குழந்தைகள் அடிக்கப்படுகின்றனரோ அத்தனைகெத்தனை அவர்கள் வன்முறையாளர்களாக பிற்காலத்தில் மாறும் அபாயம் இருக்கிறது.

“அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்த்துவது?” என்று கேட்கலாம்.டைம்-அவுட் (தனியே உட்கார வைப்பது),பிடித்த உணவை செய்து தர மறுப்பது, புத்திமதி சொல்வது,குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது,வெளியே விளையாட கூட்டிபோவதை அந்த நாளுக்கு தவிர்ப்பது என பல வழிமுறைகள் இருக்கின்றன.குழந்தைகளிடம் நட்புறவை வளர்த்து காரியம் சாதிக்க தெரியாத பெற்றோர்கள் தமது கடமையில் தவறியவர்களாக ஆகின்றனர் என்பது தான் உண்மை.

பல சமயங்களில் குழந்தைகள் என்னென்ன காரணங்களுக்காக பெற்றோரால் தாக்கப்படுகின்றனர் என்பதே மிகவும் ஆச்சரியமானதாக இருக்கும். குழந்தைகளை அடிப்பது பெரும்பாலும் பெற்றோரின் அந்த நிமிட கோபத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது என்பதால் தான் பெற்றோர் குழந்தைகளை அடிக்கின்றனர்.தாய் குழந்தையை அடிப்பது பெரும்பாலும் கணவன்,மாமியார் மேல் இருக்கும் கோபத்தில்தான்..அவர்களை எதிர்த்து பேசமுடியாத ஆத்திரத்தில் குழந்தையை போட்டு அடிக்கிறாள்.

மிகவும் அற்ப காரணங்களுக்காக (பெரியவர்களுக்கு மரியாதை தரவில்லை, எதிர்த்து பேசுவது) போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் தாக்கப்படுவர். குழந்தைகள் மரியாதையை கற்பது பெரியவர்களிடமிருந்துதான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பெற்றோர் தமது சொந்த கருத்தை குழந்தைகள் மீது இப்படி அடி-உதை மூலம் திணிப்பது குழந்தைகளின் சுயசிந்தனைக்கு தடையாக அமைந்துவிடுகிறது.குறும்பு செய்யும் குழந்தைகள் மிகவும் க்ரியேடிவான குழந்தைகளாக பிற்காலத்தில் வளருவர்.அடி உதை எனும் வன்முறைகள் அந்த கிரியேட்டிவிட்டியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

“என் அப்பா என்னை அடித்து வளர்த்தார்.நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்பவர்கள் தாங்கள் யார் யார் மீது அதே வன்முறையை செலுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.பெரும்பாலும் தந்தையால் அடிக்கப்படுவர்கள் மனைவி,தம்பி,தங்கை,குழந்தை ஆகியோர் மீது அதே போன்ற உடலியல் அல்லது உளவியல் ரீதியான வன்முறையை பிரயோகித்திருப்பர்.(விதிவிலக்குகள் இருக்கலாம்)

அடிக்கு பதில் கடுமையான திட்டுக்களை பிரயோகிக்கலாம் எனவும் நினைக்ககூடாது. குழந்தைகள் மனதில் ஆறமுடியாத ரணத்தை ஏற்படுத்துவதில் உளவியல் வன்முறையும் அடங்குகிறது.

டிஸிப்ளின் என்பது முக்கியம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் மட்டுமே கொண்டுவர முடியும் என்று நினைக்கும் தகப்பனும் ஆசிரியனும் முட்டாள்கள்.

*********

http://worshipme.wordpress.com/

நன்றி:

http://www.kidsource.com/kidsource/content4/spanking.morph.html

http://www.womensenews.org/article.cfm/dyn/aid/662/context/archive

Series Navigation

வணக்கத்துக்குரியவன்

வணக்கத்துக்குரியவன்