வாலெண்டைனும் தமிழ்க் காதலும்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

வெங்கட் சாமிநாதன்


காதலர் தினம் என்று சொல்கிறார்கள் இம்மாதம் 14-ம் தேதி. இளவட்டங்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் தம் காதலைப் பரிமாறிக்கொள்வார்கள். பரிசுகள் கொடுத்து. காதல் செய்திகள் சொல்லி. தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புது வருட வாழ்த்துக்கள் போல இன்னுமொன்று சேர்ந்துள்ளது. மற்றவை சம்பிரதாயமாக ஆகிவிட்ட, பழகி விட்ட கட்டத்தில், காதலர் தினக் கொண்டாட்டங்கள், பரிசுகள், வாழ்த்துக்கள் அதிகம் பரவசம் தருவதாக, கொஞ்சம் அதிக இரைச்சலுடனேயே, அதிக அலட்டல்களுடனேயே காணப்படுவதாகத் தோன்றுகிறது.

இதென்ன காதலர் தினம்? சில வருஷங்களாகத் தான் இது பற்றிக் கேள்விப்பட்டு வருகிறோம். ஏன் சில வருஷங்களாக? காதலோ, காதலர்களோ நமக்கோ, நம் வாழ்க்கைக்கோ அன்னியமானதா என்ன? அல்ல. ஆனால் காதலர் தினம் என ஒரு நாள் கொண்டாடுவதும் அதைக் கொண்டாடும் முறையும் தான் புதிதாக நமக்கு அறிமுகமானது. நான் இதைக் கேள்விபடத்தொடங்கியது, சிவசேனைக் காரர்கள் இதை எதிர்த்து அவர்கள் வழியில் ரகளை செய்து அது செய்தித் தாட்களில் கொட்டை எழுத்துக்களில் இடம் பெற்று நம்மைத் தாக்கியபோது. எனக்கு அப்போது சிவ சேனையின் எதிர்ப்பு உடன்பாடான ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், அவர்கள் தம் எதிர்ப்பைக் காட்டக் கையாண்ட வழி எனக்குச் சம்மதமாக இருக்கவில்லை. சிவ சேனைக்காரர்களின் வழிமுறை நம் ஊர் கட்சிகள் சிலவற்றின் நடைமுறை போல ஒரு அடாவடித்தனமான ஒன்றாக இருந்தது. பல விஷயங்களில் அவர்கள் அடிப்படையான பல நல்ல காரணங்களை வைத்துக்கொண்டு ·பாசிச நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். நம்மூர் கட்சிகள் மோசமான காரணங்களுக்காக மோசமான நடைமுறைகளைக் கையாள்பவர்கள்.

போகட்டும். காதலர் தினம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வருகை, ஒரு வேற்று நாட்டு இறக்குமதி. இதை இறக்குமதி செய்து தான் ஆகவேண்டும் என்ற ஒன்று அல்ல. காதலர்கள் தமக்குள் செய்தி பரிமாறிக்கொள்வது என்பது எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்து பெற வேண்டியதில்லை.

ஹாலாவின் காதா சப்த சதியில், தலைவி தன் காதலனுக்கு செய்தி அனுப்புகிறாள், எங்கு சந்திப்பது என்று இடம் குறித்து:

ஆடாதசையாததோபார் தாமரை
இலைமேல் அமர்ந்தே இருக்கும் கொக்குகள்
மரகதத் தட்டில் மன்னிய வெண்சங்
கிப்பி போல இலங்குமன்றே

நமக்குத் தெரிந்த அகப்பாடல்கள் போல, இங்கு தலைவி யார் தலைவன் யார் என்று தெளிவு படுத்தப்படாதது போல சந்திக்கும் இடமும் குறிப்புணர்த்தப்படுகிறது. இதற்கு அவரவர் மனப்போக்குப் படி பொருள் கூறிக்கொள்வதற்கு சாத்தியம் உண்டு.

“இது அமைதியான இடம், யாரும் வருவார் போவார் இல்லை. இங்கு சந்திக்கலாம் ”

என்று சொல்வதாகவும் இருக்கலாம். அல்லது.

“இங்கு வந்து சந்திப்பதாகச் சொன்னாயே, நீ வந்ததாகத் தெரியவில்லையே, வந்திருந்தால் இந்த இடம் இவ்வளவு அமைதியாக இருக்குமா என்ன? அல்லது கொக்குகள் தான் ஆபத்தின்றி இவ்வாறு அமர்ந்திருக்குமா தாமரை இலைமேல்?” என்றும் பொருள் படலாம்.
அதுவல்ல விஷயம். ஹாலாவின் காதா சப்த சதி போலவே, நம் அகப்பாடல்கள் அனைத்தும் இவ்வாறான குறிப்புணர்த்தலாகவே அமைந்துள்ளன. காதல் வாழ்க்கை, ரகசியமாக செய்தி அனுப்புதல், சந்தித்தல் எல்லாமே நமக்குத் தெரிந்து சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. கள்ளக் காதல் செய்தி கூட ஒரு அழகுடன் தான் சொல்லப்பட்டு வந்துள்ளது.

“இங்கு தான் என் மாமியாரும் மாமனாரும் பாவம் வயதானவர்கள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். வேலைக்காரியும் தான். அவளுக்கு வேலை செய்த களைப்பு.. கணவனோ ஊரில் இல்லை. ஆனால் நானோ என் தனிமையில் உறக்கமின்றிப் தவித்துக் கிடக்கிறேன்.”

இங்கு சொல்லப்படும் செய்தி, “தாராளமாக நீ வரலாம். ஒரு பயமும் இல்லை.”

இது சமஸ்க்ருத சுபாஷிதானியிலிருந்து.

இந்த காதலும் காமமும் தான், அதன் பல நூற்றாண்டு கால வளத்தில், பின் பக்திப் பாடல்களுக்கு வழி வகுத்தன. பக்தியில் கூட, பக்தனாக மாத்திரம் அல்ல. திருமங்கை ஆழ்வார் தன்னை பெருமாளிடம் கொண்ட காதலில் உருகும் மங்கையாகவே வரித்துக் கொண்டு விடுகிறார். அது ஒரு கோடி. இது ஒரு கோடி பக்தியில் கூட. இத்தகைய இலக்கிய பரிணாமம் காதல் பெற்றது என்றால், அது எத்தகைய தளத்தில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்துள்ளது என்பது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கிய தந்த பக்தி உணர்வு ஒரு இயக்கமாக பரிணாமம் பெற்று எல்லாக் கலைகளும் பெற்ற மறு மலர்ச்சிக்கு இட்டுச் சென்றது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்திய துணைக்கண்டம் முழுதுக்குமே.

ஆக நமக்கு இது வேண்டாப் பொருள் அல்ல. நம் வாழ்க்கைக்கு அன்னியமான ஒன்றுமல்ல. அதனதன் தளத்தில் அவை மனித உன்னதத்திற்கு இட்டுச் செல்கின்றன.

இதற்கும் இங்கு இப்போது ஒரு ·பாஷனாக வருகை தந்துள்ள காதலர் தினத்திற்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். நம் மண்ணிலிருந்து பெறாதது எதுவும், ·பாஷனாகக் கொள்ளப்பட்டது எதுவும் கொச்சைப்பட்டுத் தான் போகிறது. நமது கிராமீயப் பாடல்களும் நடனங்களும் எவ்வளவு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளன! அவற்றின் பெயரைச் சொல்லி, 24 மணி நேரமும் 38 தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் ‘சாங்’ என்று சொல்லி, ‘டான்ஸ்’ என்று சொல்லி கொச்சைப் படுத்தலின் தீவிரம், இரைச்சல், அவற்றின் விஸ்தாரம், நேரம் எல்லாமே அவற்றிலிருந்து தப்புவது இயலாத ஒன்றாக வே ஆகியுள்ளது. இவற்றிற்கு சமூகம், அரசு, மக்கள் பிராபல்யம், பணபலம் எல்லாமே அங்கீகாரம் தந்துள்ளன. இவை தான் கலை என்றே ஆகியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட ராக்ஷத்தன ஆக்கிரமிப்பு பெற்றுள்ள இவை எதுவும் தமிழ் மண்ணின் பிறப்பல்ல. பாப் இரைச்சல் இசை என்று பெயர் பெறுவது போல, ‘ரெண்டக்கா, ரெண்டக்கா’ நாட்டுப் புற நடனம் என்று பெயர் பெறுவது போல எந்த ஆபாச இரைச்சலுக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் அங்கீகாரம் தர ஒரு தமிழ் பெயர், மரபு, வரலாறு, வாழ்க்கை அம்சம் கட்டாயம் முன்னிறுத்தப்படும். ஆனால் சொல்லப்படும் பெயருக்கும் நடைமுறைக்கும் எந்த சம்பந்தமும் இராது. அவற்றறை உள்ளீடற்றவையாக போலியாகத் தான் நாம் ஆக்கிக்கொள்கிறோம். எதனது சாரமும் நம் உணர்வுகளுக்கு ஏற்றவையாக இருப்பதில்லை.

அது போல் தான் இந்த காதலர் தின சமாச்சாரமும். எங்கிருந்தோ இறக்குமதியானது இது. அதன் வரலாறு பார்க்கப் போனால் மிக தொன்மையானது. ஆரம்பத்தில் ரோமானியர்களிடையே அது ஒரு அறுவடைத் திருவிழாவாக இருந்தது. நம் ஊர் தைப் பொங்கல் போல. அசாமின் பிஹ¥ போல. பஞ்சாபில் வழங்கும் பைசாகி திருவிழா போல. இந்தியா வெங்கும் அறுவடைத்திருவிழாக்கள் உண்டும். ஆடு மேய்ப்பவர்கள், தம் மந்தையை ஓநாய்களிடமிருந்து காப்பதற்காக லூபர்கஸ் தெய்வத்தை வணங்கி லூபர்காலியா என்ற விழாக் கொண்டாடினராம். அவ்விழாவில் இன்னொரு கொண்டாட்டமும் இருந்ததாம். ஒரு பானையில் இளம் பெண்கள் பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டு, எந்த வாலிபனுக்கு எந்தப் பெண்ணின் சீட்டு கிடைக்கிறதோ அந்த பெண்ணுடன் அந்த இரவு கழியுமாம். (எப்படியோ இந்த விளையாட்டு நாடு கண்டங்கள், நூற்றாண்டுகள் தாண்டி, நம் ஊர் பெரிய பணக்கார குடும்பங்களின் களியாட்டங்களில் இம்மாதிரியான பகிர்வு விளையாட்டு இன்று இங்கு பதியன் பெற்றுள்ளது. நான் கேள்விப்பட்டது, துண்டுச் சீட்டுக்குப் பதில் ப்ரா-க்கள் போடப்பட்டிருக்குமாம். யாருடைய ப்ரா என்பதை பெண்ணே அடையாளம் காட்டித் தருவாளாம்.

ஆனால் இது ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்து மதச் சடங்காகி, புனிதர் வாலெண்டைன் பெயரில், அந்நாளைய போப்-பால் உருமாற்றம் பெற்றது. இதிலும் ஒரு சிக்கல். வாலெண்டைன் எந்த வாலெண்டைன் என்பது ஒரு பிரச்சினை. நம்மூரில் எந்த அவ்வையார், என்ற பிரச்சினை இருப்பது போல. மூன்றாம் நூற்றாண்டில் புனித வாலெண்டைன் என்ற பாதிரியார் அன்றைய ரோமானிய அரசன் க்ளாடியஸின் விரோதத்தைச் சம்பாத்துக் கொண்டு விட்டதால் சிறையில் தள்ளப்பட்டான். ஆனால் சிறையிலும் புனிதர் சும்மா இருக்கவில்லை. அரசனின் மகளின் ஆசைக்காளாகி விடவே, வாலெண்டைனைக் கொல்வதைத் தவிர வேறு வழி அரசன் க்ளாடியஸ¤க்கு இருக்கவில்லை. சாகும் முன் வாலெண்டைன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விட்டுத் தான் சாகிறார். அன்றிலிருந்து தான் வாலெண்டைன் கிறிஸ்துவ சமூகத்தின் மன்மதனாக உரு மாற்றம் பெறுகிறார். கி.பி. 496-ல் இருந்த போப் பிப்ரவரி 14-ஐ வாலெண்டைன் தினமாக அறிவிக்கிறார். வாலெண்டைன் தினத்தன்று பரிசுகள் தருவதும், காதல் கடிதம் எழுதுவதும் தொடங்கியதன் வரலாறு இதென்று தெரிகிறது. இது பின் வரும் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கும் பரவியது. இங்கு இந்தியாவில் நாம் இங்கிலாந்தின் காலனியாக அரசியல் அடிமைப்பட்டுக் கிடந்த போது இது இங்கு பரவியதாகத் தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று வெகு காலம் பிந்தித் தான், கலாச்சார அடிமைத் தனத்தின் ஒரு அங்கமாக இது நம்மைப் பீடித்துள்ளது.

டிஸ்கோ டான்ஸ் மாதிரி, பாப் இசை, பாப் நடனம் மாதிரி, இதுவும் ஒன்று கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளது என்று தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு செய்தி ஒன்று தொலைக் காட்சியில் தரப்பட்டது. சென்னையில் ஆங்காங்கே முளைத்துள்ள மேற்கத்திய டான்ஸ் ஸ்கூல்கள். என்னமோ ஜிம்னாஸ்டிக்ஸ் மாதிரி, கையைக் காலை ஆட்டி அகட்டி, போலிஸ் ட்றில் மாதிரி இடது வலது பக்கம் திரும்பி என்னென்னமோ தேகப் பயிற்சி செய்கிறார்கள். என்ன சமாச்சாரம் என்று விசாரித்தால், இவர்கள் எல்லாம் பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். பணம் நிறைய கிடைக்கிறது. நாள் பூராவும் வேலை செய்து சிறிது ஓய்வுக்கு இரவில் பார்ட்டிக்குப் போனால் அங்கு டான்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது. டான்ஸ் தெரியாவிட்டால் இளப்பமாகப் போகிறது. ஆகவே, பணம் எவ்வளவு செலவானாலும் டான்ஸ் கற்றுக்கொண்டால், இரவு பார்டிகளில் சோபிக்கலாம். இப்படித்தான் நம்மண்ணில் பதியன் பெறுவது எதுவும் தொடங்குகிறது. 60 களிலிருந்து பீட்டில்ஸ், ராக் இசை, டான்ஸ், எல்விஸ் பெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், மதோனா என்று வந்து இப்போது ஒரு நாற்பது பேர் கூட்டமாக காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப் படுவது போல் குத்தாட்டம் போடாவிட்டால், நம்ம ஹீரோவும் ஹீரோயினும் காதல் பண்ணுகிறார்கள் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைப்பது சிரமமாகிப் போயுள்ளது. தமிழ் இசை, தொன்று தொட்டு வந்துள்ள பழமை மரபு தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே, ‘மான் ஆட மயிலாட’, ‘ஆட்டமும் பாட்டமும்’, ‘டான்ஸ் மச்சி, டான்ஸ்’ என்று வெவேறு தலைப்புகளில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் என்னேரமும் ஒரு குத்தாட்டம் இன்றியமையாததாகிறது. இந்த அரசும், “நாங்கள் தரமான பொழுது போக்கும்,. கல்வியும் குடிசை வாழ் ஏழை மக்களுக்கு வழங்கவே இலவச கலர் டிவி கொடுப்பதுடன், கேபிள் இணைப்பையும் அரசே மேற்கொள்ள இருக்கிறோம்” என்று சொல்கிறது. இது மக்களாட்சிக் காலம் இல்லையா? இது தமிழர்களுக்கு பொற்காலம் என்றும் மறுமலர்ச்சிக்காலம் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

இன்றைய தகவல் தொழில் நுட்ப பொறியாளர்களுக்கு இரவு கேளிக்கையில் டான்ஸ் எப்படி புகுந்து கொண்டதோ அப்படித்தான் படித்த இளைஞர் சமுதாயத்திற்கு வாலெண்டைன் என்ற மன்மதன் காதல் தெய்வமாகிப் போனார். குடிசை வாழ் ஏழை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்களிடமும் இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று யார் சொல்லப் போகிறார்களோ, தெரியாது.

வெங்கட் சாமிநாதன்/11.2.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்