வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

அரவிந்தன் நீலகண்டன்


வாசந்தி அவர்கள் தமிழில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர். தமது வடகிழக்கு அனுபவங்களை அவர் கூறும் இக்கட்டுரைகள் ஏற்கனவே அம்ருதா என்கிற இதழில் ஒரே கட்டுரையாக வெளியாகியுள்ளன. தற்போது திண்ணையில். மிக கவனமாக வாசந்தி அவர்கள் ஒரு வித பிம்பத்தை ஏற்படுத்துகிறார். அரசியல் விவேகமான அறிவு சீவித்தனம் கொண்ட அந்த பிம்ப எழுப்புதலில் அடிபட்டு போவதென்னவோ உண்மை என்கிற விசயம்தான். அவரது தனிப்பட்ட அனுபவத்தையும் அது அவருக்கு தந்திருக்கக் கூடிய மன நெகிழ்ச்சிகளையும் வேதனைகளையும் நான் மதிக்கிறேன்.

ஆனால் அதைச் சுற்றி அவர் எழுப்பும் ஒரு மனபிம்பம் ஆதாரமற்றது என்பது என் எண்ணம். ஏனெனில் வடகிழக்கு குறித்து வரும் தரவுகளை நான் சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அங்கு சில காலம் தங்கியதுண்டு. அங்குள்ள மிசிநரிகளுடனும் பழகியிருக்கிறேன். எனவே வாசந்தி எழுப்பும் ஊடக சித்திரம் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதத்தின் நீட்சியேயாகும். அது: ‘இந்து தருமம் என்பது வனவாசி பாரம்பரியத்திலிருந்து மாறூபட்ட ஒரு சமுதாய அமைப்பு. அது வடகிழக்கின் செழுமையான பாரம்பரியங்களை அழிக்க முயல்கிறது. ஆனால் கிறிஸ்தவ பாதிரிகள் வடகிழக்கு மக்களை முன்னேற்றுவதுடன் அவர்களின் பாரம்பரியங்களை பாதுகாக்கிறார்கள்’ என்பதாகும். இந்த சொல்லாடலில் வாசந்தி பல ஸ்டீரியோடைப்களை மிகவும் மென்மையாக ஆனால் அழுத்தமாக பதிய வைக்கிறார்.

Noble savage, Civilizing missionary, Hindus as Intruding pagan alien race இந்த மனபிம்பங்கள் அனைத்துமே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் கவனமாக விதைக்கப்பட்ட சித்திரங்கள். இவற்றினை வாசந்தி கையாண்டுள்ள விதத்தினையும் அவற்றுக்கு அப்பால் வடகிழக்கில் நடக்கும் உண்மையான பிரச்சனைகளையும் சிறிது காணலாம்.

வாசந்தி சொல்கிறார்: “அங்கு பல வருஷங்கள் முன்பே கிறித்துவ பாதிரிகள் வந்து எல்லோரையும் கிறித்துவ மதத்திற்கு மாற்றியிருந்தார்கள். மதம்தான் மாறியிருந்ததே தவிர அவர்களது பழங்குடி வழக்கங்கள், சடங்குகள் மாறியிருக்கவில்லை.பைபில் சொல்லும் பத்து கட்டளைகளும் பாதிரிகள் போதிக்க மறந்துபோனதாகத் தோன்றிற்று. அவர்களது வாழ்க்கைமுறை அப்படிப்பட்ட சலுகைகள் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். கொலை கொள்ளை எல்லாமே மிக சகஜமாக ஏற்கப்பட்டது. காளாமுக கபாலிகள் போல முன்பு எதிரிகளின் மண்டை ஓடுகளை கழுத்தில் அணியும் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்கள். அவர்களது விருந்தோம்பல் மரபுப்படி விருந்தினருக்கு மனைவியை அளிப்பது தவறில்லை.”

இந்த பிம்பம் எத்தனை உண்மையானது? மேகாலயா ஷில்லாங்கில் டான் பாஸ்கோ அமைப்பினர் ‘பூர்விகவாசிகளின் கலாச்சார மையம்’ என ஒரு பிரம்மாண்ட மல்டி மீடியா அருங்காட்சியகத்தினை நிறுவியுள்ளனர். ஐந்தடுக்கு கொண்ட அந்த அருங்காட்சியகத்துக்கு மேகாலயா டான் போஸ்கோ அவுட் ரீச் மையத்தில் தங்கியிருந்த போது அங்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கு பணிகள் முடிந்திடவில்லை என்றாலும் எங்கள் குழுவுக்கு அங்கே செல்ல அனுமதி அளித்தார்கள்.

ஒரு மிஸோ இளைஞன் எங்களுக்கு அந்த காட்சி அமைப்புகளை விவரித்தார், வடகிழக்கு பாரதத்தின் பழங்குடி மரபுகளின் செழுமையை மிகவும் அருமையாக விளங்கியிருந்தார்கள் – நான்கு தளங்களில். இறுதியில் மிசிநரிகள் ஆற்றிய ‘பணிகளை’ குறிப்பிடும் காட்சிகள் இருந்தன. இந்த இடத்தில் எப்படி காட்டு மிராண்டிகளாக தலைவாங்கிகளாக வாழ்ந்த பழங்குடிகளை மிசிநரிகள் நல்வழிப்படுத்தினர் என்பதனைக் காட்டும் காட்சிகள் இருந்தன.

எப்படி மிசிநரிகளை பழங்குடிகள் கொன்றனர் என்ற போதிலும் மிசிநரிகள் கர்த்தரின் அன்பை அவர்களிடம் கொண்டு சென்றனர் என்பதை அக்காட்சிகள் விளக்கின. அந்த இளைஞனிடம் இது குறித்து கேட்டேன்: ‘நான்கு தளங்கள் நிரம்ப நிரம்ப பழங்குடி மக்களின் கலாச்சார செழுமையைக் காட்டுகிறீர்களே இத்தனை கலாச்சார செழுமை கொண்ட மக்கள் தலைவாங்கிகளாகவா இருந்தார்கள்?’ அமெரிக்க பாணியில் தோள்களை குலுக்கியபடி அந்த மிஸோ இளைஞன் பதிலளித்தார் ‘அது சில நாகாக்கள் அப்படித்தான் வாழ்ந்து வந்தனர்!’.

பின்னர் வீடியோ அறைக்கு கொண்டு செல்லப்பட்டோம். சில பழங்குடி நடனங்களின் வீடியோக்கள் அங்கு இருந்தன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதை போட்டு காட்டுவோம் என்றார் அந்த இளைஞர். எங்கள் குழு மிசோரமின் புகழ் பெற்ற மூங்கில் நடனத்தை தேர்ந்தெடுத்தது. அதில் மூங்கில் நடனத்தை குறித்து மிஸோ அறிஞர்கள் சிலர் விளக்கினர். தோராயமாக அவர்கள் சொன்ன விசயம் இதுதான்: வசந்த காலம், அறுவடை திருநாள் மற்றும் மூதாதையர் வழிபாட்டுடன் தொடர்புடைய அந்த நடனமானது இன்று கிறிஸ்தவ தாக்கத்தினால் அத்தகைய pagan தன்மை எல்லாம் நீக்கப்பட்டு ஒரு சுற்றுலா கவர்ச்சியாக மட்டுமே ஆக்கப்பட்டு ‘மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது’.

‘பெண்களை விருந்தாளிகளுக்கு அளிப்பதை விருந்தோம்பலின் ஒரு பகுதியாக கருதினர்’ என்பது வக்கிரமான மேற்கத்திய மனபிம்பமாகும். ஏறக்குறைய வெள்ளையர்கள் எதிர்கொண்ட ‘காட்டுமிராண்டி’ (அதாவது கிறிஸ்தவரல்லாத வெள்ளைத்தோல் இல்லாத என வாசித்துக்கொள்ளவும்) பண்பாடுகள் அனைத்தையும் இப்படி அவர்கள் ஒரு எரோடிக் விவரணங்களை அளித்துள்ளார்கள். மிஸோ கலாச்சாரத்தில் பெண் மதிக்கவும் பட்டாள்.

கிறிஸ்தவம் மிஸோரமை ஆக்கிரமிப்பதற்கு முந்தைய பாரம்பரியத்திலும் இன்றும் ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு முன்பு நட்புறவுடன் பழகுவதும் ஆட்ட பாட்டங்களும் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட பெண் தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றுவதென்பது முக்கியத்துவம் உடையதாக இருந்தது. ஒரு குழுத்தலைவனின் மகள் மிகவும் அழகாக இருந்ததாகவும் அவள் ஒரு வீர இளைஞனிடம் மயங்கி அவனிடம் காதலை தெரிவித்த்தாகவும் காதலின் காமம் அதிகமாகி ஒரு திருவிழா நாளில் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று கலவி புரிந்தததாகவும் அதனை அப்பெண்ணின் அன்னை கண்டதும் அவமானம் மேலிட அந்த காதலன் ஊரை விட்டே சென்றுவிட்டதையும் அப்பெண் தன் தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டதாக வருந்தியும் தன் காதலன் பிரிவால் வருந்தியும் பாடிய பாடல்கள் இன்றைக்கும் மிஸோ நாட்டுப்புற பாடல்களில் வழங்கப்பட்டு வருகின்றன.[1] எந்த அளவுக்கு கன்னித்தன்மையின் மதிப்பு, மானம் குறித்த பிரக்ஞை மிஸோ சமுதாயத்தில் ஊடுருவி இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.(அதெல்லாம் சரியா தவறா முற்போக்கா பிற்போக்கா ஆணாதிக்கமா பெண்ணியமா என்பது குறித்து நான் விவாதிக்க வரவில்லை)

சமவெளியிலிருந்தும் பர்மாவிலிருந்தும் வந்த இளவரசர்கள் மிஸோ அழகிகளை மணக்க மிகுந்த பிரயாசைப்பட்டு அவர்களிடம் காதல் மொழி பேசி அவர்கள் சம்மதத்தை பெற்றதையும் மிஸோ நாட்டுப்புற பாடல்கள் கூறும் (இதில் ஒரு இளவரசன் பெயர் வல்லபன்.) இந்நாட்டுப்பாடலில் இளவரசன் ஒரு நீள முடியை நீரில் பார்த்து அதனை கொண்ட பெண் எத்தனை அழகாக இருப்பாள் என ஏங்கி அவளை தேடி இறுதியில் மிஸோரமில் கண்டடைகிறான். அவளை காதலித்து மணக்கிறான். இவையும் மிஸோ நாட்டுப்பாடல்களில் பாடப்படுகின்றன.[1] ஏறக்குறைய இந்த கதையின் பிரதிகள் பாரதமெங்கும் இருப்பதைக் காணலாம். இத்தகைய ஒருசமுதாயம் தனது மனைவிகளை பிறருக்கு விருந்தோம்பலின் ஒரு பங்காக அளித்தனர் என்பது மிகவும் அருவெறுப்பான பொய்யேயாகும். காலனிய கதையாடல்களையும் மிசிநரி பிரச்சாரங்களையும் ஏன் வாசந்தி போன்ற ஒரு அனுபவமும் நுண்ணறிவும் கொண்ட ஒருவர் ஆராய்ந்தறியாமல் மீள்-வெளியிடுகிறார் என தெரியவில்லை.

வடகிழக்கு பாரதத்தின் விடுதலை வீராங்கனை

மிசிநரிகளும் வெள்ளையர்களும் வருவதற்கு முன்னர் கபால ஓடுகளை அணிந்து வாழ்ந்த தலைவாங்கிகளாகவா வாழ்ந்தனர் மிஸோக்கள்? மிஸோராணி ரோபுலைனி வடக்கு மிஸோரமின் ராஜா லால்சமூங்காவின் இளையமகளாக பிறந்து தெற்கு மிஸோரமின் பாண்டூலாராஜாவை திருமணம் செய்து கொண்டார். வடக்கு மிஸோரமை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் தெற்கு மிஸோரமின் மீது படையெடுத்த போது பாண்டூலா ராஜா எதிர்த்தார். அவர் காலமான பின்னர் ராணி ரோபுலைனி எதிர்ப்பை தொடர்ந்தார். 1893 கஸ்ட் 8 இல் நடந்த போரில் நவீன யுதங்கள் மற்றும் துரோகத்தின் உதவியுடன் டேங்குகாவ் எனும் இடத்தில் சிறை செய்தது. அவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கப்பட்ட முயற்சிகள் (ஏனெனில் ஆக்கிரமிப்பையும் ஆங்கிலேயர்கள் சட்டபூர்வமாக செய்ததாக சித்தரிக்க வேண்டுமே) சித்திரவதைகள் தோல்வியடைந்தன. கையெழுத்திட்டால் இங்கிலாந்தில் ஓய்வூதியத்துடன் சொகுசாக வாழலாம் என பேரம் பேசினர் ஆங்கிலேயர். ‘மிஸோரம் என் தாய்.தாயை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள்’ என கூறி 1895 ம் ண்டு ஜனவரி 3-ம் நாள் மரணமடையும் வரை சிறையிலேயே வாழ்ந்தார் அந்த வீர ராணி. இன்று மிஸோக்களில் ஒரு சிறு குழுவினர் தங்கள் வேர்களைத் தேடுகின்றனர், மிசிநரிகளாலும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களாலும் மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட வரலாறுகளுக்கு அப்பால் தம் பாரம்பரியம் செழுமையானது என்பதனை உணர்கின்றனர். விரைவில் இச்சிறு துளிகள் பெருவெள்ளமாகும். இத்தகைய பண்பாட்டு செழுமையை மறைத்து ‘தலைவாங்கிகள்’ ‘தங்கள் பெண்களை பிறருக்கு விருந்தோம்பலாக கொடுப்பவர்கள்’ என்று சொல்வது எத்தகைய தவறான மனப்போக்கு!

மிஸோ வீரர்கள் தங்கள் எதிரிகளை கொல்லும் போது அவனது தலையை துண்டிப்பது வழக்கம் இதைத்தான் தலைவாங்கிகள் என மிசிநரிகள் கூறுகிறார்கள். ஒருவேளை இந்திய பூர்விகவாசிகள் ஐரோப்பிய கில்லட்டின் பயன்பாட்டை பார்த்திருந்தால் அவர்களை தலைவாங்கி பண்பாட்டாளர்கள் என கூறுவார்களோ என்னவோ! (இங்கிலாந்தில் லண்டனின் புறநகர் பகுதிகளில் சிறிது பழமையான குத்தீட்டி போன்ற ஒரு அமைப்பினை பார்க்கலாம். அரச பரம்பரைக்கு எதிராக சதி செய்தவர்களின் தலையை மைதானங்களில் எட்டி உதைத்து அவமானப்படுத்திய பின்னர் இங்கே சொருகி வைப்பார்கள். பொதுவாக இந்த குத்தீட்டி அமைப்புகள் கிறிஸ்தவ தேவாலய வளாகங்களில் அல்லது அவற்றுக்கு அருகே காணப்படும்.[2] மட்டுமல்ல கிறிஸ்தவத்துக்கு எதிராக (ரோமன் கத்தோலிக்க அல்லது பிராட்டஸ்டண்ட் :யாருக்கு ஆதரவாக தலைமை இருக்கிறது என்பதைப் பொறுத்து கிறிஸ்தவத்தின் எதிரி யார் என்பது மாறுபடும். இறுதியாக இங்கிலாந்தில் புராட்டஸ்டண்ட் ஆங்கிலிக்கன் சர்ச் வென்றது.) செயல்படுவதாக குற்றம்சாட்டப்படும் பாதிரிகள் அல்லது பிஷப்புகள் தலைகளை வெட்டி பதப்படுத்தி சர்ச்சிலேயே காட்சி பொருளாக வைக்கப்பதும் உண்டு. கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றில் ரோமன் கத்தோலிக்கர்கள் கை ஓங்கிய போது வெட்டி அவமான காட்சிப்பொருளாக்கப்பட்ட புரோட்டஸ்டண்ட் பாதிரியின் தலையை இங்கு காணலாம். இவர்கள் மிஸோக்களை தலைவாங்கிகளாக இந்த தலைவாங்கி சடங்கு 18 ஆம் நூற்றாண்டில் கூட இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பண்பாட்டில் வந்த மிசிநரிகள் நம் நாட்டு மலைவாசிகளை ‘தலைவாங்கிகளாக இருந்தார்கள் நாங்கள்தான் பண்படுத்தினோம்’ என்பதும் அதனை நம் பிரபலங்கள் மீள்-கக்குவதும் ….சப்கோ சன்மதி தே பகவான் என வேண்டிக்கொள்ளத்தான் என்னைப் போன்ற எழுத்துலக விலாசமற்ற அனாமதேயங்களால் முடியும்!

ஒரு இந்து மானுடவியலாளன் இங்கிலாந்தை இவற்றை வைத்து எடை போட்டால்?

முதல் படம்: கிழக்கு ஆங்கிலியாவில் மதத்துரோகத்துக்காக கொல்லப்பட்ட பிஷப் ஒருவரின் தலை அப்படியே அரச உத்தரவின் படி காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள காட்சி.; இரண்டு: சிந்தனையாளர் தாமஸ் பெயின் பிறந்த ஊரில் வைக்கப்பட்டுள்ள சிலை. அவரது பிறந்த நாளன்று அவரது சிலையின் பிறப்புறுப்பு பகுதியில் ராஜவிசுவாசிகள் கறுப்பு சாயத்தை பூசுவார்கள். (சிலையிலேயே கூட சில அவமான அமைப்புகள் புகுத்தப்பட்டுள்ளன) மூன்று: இலண்டனில் ஒருகாலத்தில் மையப்பகுதியாக இருந்த இடத்தில் வைக்கப்பட்ட தலை மற்றும் இதர அங்கங்கள் செருகப்படும் குத்தீட்டி. 18 ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்த அமைப்பு இது. 18 ம் நூற்றாண்டில் இந்தியா இங்கிலாந்தை காலனி நாடாக்கி இருந்தால், மிஸோ தருமத்தை பரப்ப இங்கே மிஸோக்கள் வந்திருந்தால் அவர்கள் இங்கிலாந்தின் கிறிஸ்தவ பண்பாட்டை தலைவாங்கி-உடல்வாங்கி பாச பண்பாடாக கருதியிருப்பார்களா?

மேலும் பாதிரிகள் அப்படி ஒன்றும் மிஸோ பண்பாட்டினை அப்படியே நெகிழ்ச்சியாக சுதந்திரமாக விட்டுவிடவில்லை. அவற்றை அழித்தார்கள். கொடூரமாக அழித்தார்கள். பின் மீள்-எழுப்பினார்கள். இனவாதத்தையும் இறையியல் வன்முறையையும் இணைத்து மீள் எழுப்பினார்கள். உதராணமாக பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்ச்சியை வளர்க்கும் பொது வசிப்பிடம் இருந்தது. இங்கு அவர்கள் தம் சமுதாய பொறுப்புகளையும் குழுத்தலைமைக்கு கட்டுப்படுவதையும் கற்றுக்கொண்டனர்.’ஸ்வால்பக்’ எனும் இந்த நிறுவனமே மதமாற்றத்துக்கு தடையாக இருப்பதை உணர்ந்த மிசிநரிகள் இவற்றை பண்பாட்டுக்கு எதிரிகள் என கற்பித்தனர். மிஸோ அறிஞர் பர்ககோகைம் இதனை விளக்குகிறார்: “மிகச்சிறப்புடன் விளங்கிய இந்த சமுதாய அமைப்பு 1935 இல் முழுமையாக திடீரென்று சமூக அமைப்பிலிருந்து காணாமல் போயிற்று. …கிறிஸ்தவத்தின் வருகையும் நவீன கல்விக்கான வசதிகள் ஸ்வால்பக்கில் இல்லை. என்பதால் மிஸோ நவீனவாதிகளின் பார்வையில் அது இழிந்ததாக உருமாறியது. இதன் அழிவில் மிசினரிகளுக்கு ஒரு கை இருந்தது. ஸ்வால்பக் மிஷினரி செயல்பாடுகளுக்கு ஒரு இடைஞ்சலாக விளங்கியது. கிறிஸ்தவ பாதிரிகள் இந்த அமைப்பு என்றைக்கும் தமக்கு ஒரு சவாலாக எழும்பும் என அஞ்சினர்”[3] இன்றைக்கு இந்த அமைப்பினை மிசிநரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மிஸோ இளைஞர் அமைப்பாக உருமாற்றி அமைத்துள்ளனர்.. பாசிச தன்மையுடன் பிற சமுதாயத்தினரை துன்புறுத்தும் அமைப்பாக அது மாறியுள்ளது. சிறுபான்மை இந்துக்களான ரியாங்குகள் கொலைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் இந்த அமைப்பினால் ஆட்படுத்தப்பட்டனர் [4]
அது போலவே முரசம், நடனம் ஆகியவை மிஸோ கலாச்சாரத்தின் மையமாக இருந்தது. அது தடைப்படுத்தப்பட்டது. ஒரு மிஸோ கிறிஸ்தவ இறையியலாளர் இதனை விளக்குகிறார்: “கிறிஸ்தவம் நுழைந்ததில் இருந்து மிஸோ கலாச்சார நடனங்கள் பொது வாழ்வில் கடைபிடிப்பது நிறுத்தப்பட்டது. மிசிநரிகள் மிஸோ பண்பாட்டுடன் ஒருங்கிணைந்த எதையும் அனிமிஸத்துடனும் பாகனியத்துடனும் இணைத்தே பார்த்தனர், எங்கள் சமய அனுஷ்டானங்கள் பாகனியமாக கருதப்பட்டன. எனவே பாகனியத்தையும் அனிமிஸத்தையும் தவிர்க்கஅவர்கள் மிஸோ பண்பாட்டுடன் இணைந்த அனைத்தையும் -அது எது குறித்ததாக இருந்த போதிலும்- தடைசெய்தனர். இது இனமையவாதம். இது கலாச்சார ஏகாதிபத்தியம்.”[5] பாப்டிஸ்ட் சர்ச் மிகத் தெளிவாக கூறியது: “பாகனியத்தை திரும்பகொண்டு வராத விதத்தில் ஒரு டெமான்ஸ்றேஷன் என்கிற அளவில் மிஸோக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை கொண்டாடலாம்”[6] இன்றைக்கும் மிஸோ கிறிஸ்தவத்தில் மிஸோ பண்பாட்டு வெளிப்பாடுகளை மக்கள் தன்னியல்பாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பழமையான மிஸோ சடங்குகள் இதன் மூலம் மீண்டும் எழுந்துவிடுமோ என கிறிஸ்தவ மதவாதிகள் அச்சம் கொள்கின்றனர். இன்றைக்கும் சர்ச் மக்களை தங்கள் மூதாதையர் சடங்குகளை கொண்டாடுவதை கட்டுப்படுத்துகிறது. கண்காணிக்கும் விதிமுறைகளை வகுக்கிறது.[7] உண்மை இப்படி இருக்க வாசந்தி சொல்கிறார்: “மதம்தான் மாறியிருந்ததே தவிர அவர்களது பழங்குடி வழக்கங்கள், சடங்குகள் மாறியிருக்கவில்லை.பைபில் சொல்லும் பத்து கட்டளைகளும் பாதிரிகள் போதிக்க மறந்துபோனதாகத் தோன்றிற்று. அவர்களது வாழ்க்கைமுறை அப்படிப்பட்ட சலுகைகள் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.” ஒரு பொறுப்புள்ள எழுத்தாளர் இப்படி தவறான பிம்பங்களை மக்களுக்கு அளிக்கலாமா?
மட்டுமல்ல, மிஸோ பண்பாட்டு பதங்களுக்கு தவறான வியாக்கியானங்கள் வழங்கப்பட்டன. பெண்களை மணந்து கொள்ளும் போது பெண் வீட்டாருக்கு அளிக்கப்படும் செல்வங்களை ‘பெண்ணுக்கான விலை’ என மொழி பெயர்த்தனர்.கிறிஸ்தவத்துக்கு முந்தைய மிஸோ பண்பாட்டினை குறித்து மிகவும் திரிக்கப்பட்ட சிதைக்கப்பட்ட சித்திரத்தை அது எழுப்பியுள்ளது. உதாரணமாக சமுதாயத்தில் உடல் ஊனமுற்றவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள், அநாதைகள்
ஆகியவர்களை ஆதரிக்க மிஸோக்களிடம் இருந்த சமுதாய அமைப்பினை அடிமை முறை என மிசிநரிகள் பிரச்சாரம் செய்து அதனை தடை செய்யப் போவதாக கூறி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்,[8] மதம் மாறாத பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ‘அன்னியர்கள்’ எனவும் பிற மதங்களை சேர்ந்தவர்கள் ‘பாவிகள்’ எனவும் மிஸோக்களுக்கு போதிக்கப்பட்டது. உதாரணமாக மிஸோ கிறிஸ்தவ சர்வதேச கூட்டமைப்பின் அறிக்கை வாக்கியங்கள் கூறுகின்றன: “நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும் இல்லை என நம்புகிறோம்.”[9]
மிஸோ சக்மாக்கள், ரியாங்குகள் ஆகியவர்கள் வந்தேறிகளாக அடையாளம் காட்டப்பட்டு விரட்டப்பட்டனர். இவ்வாறு வாழ்விடம் இழந்து புலம் பெயர்ந்தவர்கள் எளிதில் மதமாற்றமும் செய்யப்பட்டனர். ரியாங்க் அமைப்பின் தலைவரான சய்பங்கா சில்சாரில் ஒரு பத்திரிகை நிருபரிடம் கூறியது: “நாங்கள் மதமாற்றத்தினை கடுமையாக எதிர்ப்பதால் மிசோக்களால் தாக்கப்படுகிறோம். மிசோரம் கிறிஸ்தவ அதிகாரம் கொண்ட மாநிலம். அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆக வேண்டுமென விரும்புகின்றனர். சக்மாக்கள் கூட கொடுமைப்படுத்தப்படுகின்றனர். மிஸோரமில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக எங்கள் குரலை உயர்த்தியதால் விரட்டியடிக்கப்பட்டோம்” [10]

இன-அழிவை எதிர் நோக்கும் ரிஷி கஸியபரின் வாரிசுகள்

ரியாங்குகள் தங்களை ரிஷி கசியபர் வழித்தோன்றல்கள் என
கருதுகின்றனர். இந்நாள் வரை இல்லாத பிரச்சனையாக
ரியாங்குகளை திரிபுராவிலிருந்து வந்த வந்தேறிகள் என அடித்து
விரட்டியுள்ளனர் மிஸோக்கள். மிஸோ பாரம்பரியத்தில் இல்லாத
இத்தகைய வெறுப்புணர்ச்சியை உருவாக்கிய கருத்தியல் எது?

பத்துவருடங்களுக்கு மேலாக அடிப்படை மானுட வசதிகள் இல்லாத அகதிகள் முகாம்களில் வாழும் இவர்களுக்காக உதவி குரல் எழுப்பிய ஒரே அமைப்பு
வனவாசி கல்யாண் கேந்திரம்

“மிசோரத்திலிருந்து மிசோக்களின் தாக்குதலுக்கு பயந்து 15000 முதல் 50000 ரியாங்குகள் வட திரிபுராவில் தமது வாழ்விடத்தை விட்டகன்று தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் மிசோரம் சென்றுவிடுவார்கள் எனும் நம்பிக்கையில் திரிபுரா அரசாங்கம் அவர்களுக்கான உதவி உணவினையும் மருத்துவ சேவைகளையும் நிறுத்திவிட்டது. இதன் விளைவாக 16 பேர் (அகதிகள் முகாம்களில்) உணவின்றி பட்டினியால் இறந்தனர். குறைந்தது 260 பேர்கள் சரியான உறைவிட வசதிகள், மற்றும் குடிநீர் இல்லாமையால் இறந்தனர். 1400 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த அகதிகள் முகாம்களின் நிலைக்காக தேசிய மக்கள் உரிமை அமைப்பு மிஸோரம் அரசினை கண்டித்துள்ளது.” [11] “உச்ச நீதி மன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், மிஸோரம் மற்றும் திரிபுரா அரசுகளுக்கும் ஏன் ரியாங்குகள் இன்னமும் குடியேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.”[12]
பொதுவாக காலனிய அரசு இயந்திரத்தின் அமைப்பையே விடுதலை பெற்ற இந்திய அரசும் ஏற்றெடுத்ததில் எளிய மக்களை ஏய்க்கும் அதிகார அமைப்பும் அரசியல்வாதிகளும் கூட்டணி வைத்து இயங்கும் நிலை எங்கும் போல மிஸோரமிலும் நிலவியிருக்கும். அதற்கும் அதைப்போலவே ஆங்காங்கே நடக்கிற இராணுவ-குடிமக்கள் சச்சரவுகளுக்கும் ஒருவித பண்பாட்டு போர் முலாம் பூச வாசந்தி போன்ற பண்பட்ட எழுத்தாளர்கள் முயல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாகவே மிஸோரமில் சில சக்திகள் இத்தகைய ‘பூர்விகவாசிகளை அடிமைகொள்ள வரும் இந்திய மேலாதிக்கவாதிகள்’ என்கிற பூச்சாண்டியை காட்டி அச்சுறுத்தி மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்வது நடக்கத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டாக மிஸோரமைச் சார்ந்த டேவிட் எம் தங்காலியானா கூறுகிறார்: “மே 2001 இல் அமோலக் ரத்தன் கோக்லி மிஸோரமின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவர் ஆர்,எஸ்,எஸ் காரர் என்பதும் அவர் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதும் மிஸோரமில் காங்கிரஸ் கட்சியால் கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டது….பொதுவாகவே வெளி ஆட்கள் மீது மிஸோக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இன்னமும் விசிறிவிடப்பட்டன. …எவருமே ஒரு இந்து கிறிஸ்தவர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட முடியும் என நம்பவில்லை. குறிப்பாக ஒரு கிறிஸ்வ விரோத ராட்சத ஜந்துவாக சித்தரிக்கப்பட்ட பாஜகவிலிருந்து ஒருவர் அப்படி செயல்பட முடியுமென மிஸோ கிறிஸ்தவ சமுதாயம் நம்ப மறுத்தது. ….மூன்றுமுறை கிராமப் பகுதிகளுக்கு சென்றபோது நானும் உடனிருந்தேன். நான் உறுதிப்பட கூறமுடியும் அவருக்கு எந்தவித மறைவான செயல்திட்டமும் கிடையாது. அவரே முன்வந்து செயல்பட்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்த போது ஏற்பட்ட ஆனந்தத்தை ஒவ்வொரு கிராமவாசியின் முகத்திலும் பார்த்திருந்தால் உணர்ந்திருக்க முடியும். அவர்களுக்கு இத்தகைய முன்வந்து செயல்படும் ஆளுநர் கிடைத்ததில் உள்ள ஆனந்தத்தை பார்க்கமுடிந்தது.”[13] எப்படியெல்லாம் இனவாத வெறுப்பியல் வனவாசி சமூகத்தினருக்கு பரப்பப்படுகிறது அதனை பரப்பும் சக்திகள் யார் என்பதனை அறிய ‘தி நியூஸ்’ என்கிற பாகிஸ்தான் பத்திரிகையில் வெளிவந்த ஏசுசபை பாதிரி சேவியர் மஞ்சூரானின் பேட்டியைப் படித்தாலே போதும்: “எங்கள் அமைப்பில் ஆதிவாசிகளின் முன்னோர்களின் கதையைக் கூறி ஊடுருவல் செய்த ஆரியர்கள் எப்படி அவர்களை அடிமைப்படுத்தினார்கள் என்று சொல்கிறோம். இப்போது முன்போலவே புதிய ஊடுருவல்காரர்கள் வந்து காட்டைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார்கள் இவர்கள் வியாபாரிகள்.”[14] ஆக வாசந்தி கூறும் ‘நீறு பூத்த நெருப்பாக நிலவும் பிரிவினைவாதத்துக்கு’ யார் காரணம்? வாசந்தி சொல்வது போல மிஸோ அல்லாத நபர்கள் மட்டுமல்ல. மாறாக மிஸோக்களின் மனதில் மற்றவர்களை குறித்து ஐயப்பாடான எதிர்மறை சிந்தனைகளை விதைத்தவர்களும் அல்லவா? வடகிழக்கில் பிரிவினைவாதம் வளர காரணங்களை அடுக்குகிறார் வாசந்தி. ‘மேம்போக்குத்தனம்’ ‘அலட்சியம்’ ‘சமதரையில் வாழும்- தாங்களே நாகரிகமானவர்கள் என்று நினைக்கும்-மக்கள் அந்த மண்ணின் குடிமக்களைக் கேவலமாக ,பிற்படுத்தப்பட்டவர்களாக நினைக்கும் அகம்பாவப் போக்கு’ என வாசந்தி கூறும் போது அவர் உண்மையில் மிஸோக்களுக்குள் இதர இந்தியர்களைக் குறித்து பிரிவினைவாத விதையாக விதைக்கப்பட்டுள்ள சில எதிர்மறை மனபிம்பங்களை (Negative stereotypes) மீள்-பதியப்படுத்துகிறார்.
அதற்கு அடுத்ததாக அவர் சொல்லும் காரணம் அவரே வெறுத்து சொல்லும் மேம்போக்குத்தனம், அலட்சியம் எல்லாம் கொண்ட ஒன்றாக அமைகிறது. ‘அது நமது ரத்தத்தில் கலந்துபோன கலாச்சார ஆணவம். நிர்வாகத்தின் ரத்தத்திலும் கலந்திருப்பது. அங்கு நிகழும் எல்லா சச்சரவுகளுக்கும் கலவரத்துக்கும் மூல காரணம் இதுவாகவே தோன்றுகிறது. அப்பழங்குடியினரை மைய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தாங்களும் இந்தியர்கள் என்கிற உணர்வை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் காரணியும் இதுதான்.’ என அவர் கூறுகிறார். ஆனால் இந்திய கலாச்சாரம் என்பது எப்போதுமே மலைவாசி வனவாசி பண்பாடுகளுடன் உயிர்த்தன்மையுடன் ஒருங்கிணைந்த (organically united) ஒன்றாகும். ஐரோப்பிய மானுடவியலாளர்கள் வகைப்படுத்தும் செவ்விய பண்பாடு-பழங்குடி பண்பாடு எனும் கோடு இந்திய சமுதாய யதார்த்தத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னதாக மிகவும் நெகிழ்ச்சியுடையதாகத்தான் அமைந்திருந்தது. மலைவாசி சமுதாயங்கள் இந்திய தொன்மங்களில் பண்படற்றவர்களாகவோ அல்லது Noble savages ஆகவோ காட்டப்படவில்லை. அவர்களின் ஆன்மிகத்தன்மை அவர்களின் வாழ்க்கை முறை ஆகியவை பெரிதும் மதிக்கப்பட்டன. ராஜபுத்திர இளவரசியான ராணி துர்க்காவதியை மணந்த கோண்டு இளவரசன் முதல், தான் மதிக்காமல் நடந்து கொண்டு சிறைப்படுத்திய சாவர மலைவாசி அரசன் விஸ்வவசுவிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட உத்கல அரசன் இந்திரத்யுமனன் வரை என பாரத தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் ‘இரத்ததில் உறைந்து போன கலாச்சார ஆணவம்’ என வாசந்தி கூறும் போக்குக்கு நேர் எதிரான போக்கே காணப்படுகிறது. ஏன் வாசந்தி சொல்லுகிற ‘பெண்களை விருந்தோம்பலின் பகுதியாக பிறருடன் பகிர்வது’ என்கிற கதையாடலை வனவாசிகள் குறித்த எந்த பாரதக் கதையாடலிலும் காண முடியாது. இத்தனைக்கும் பலராமனின் தீர்த்த யாத்திரையும் சரி அர்ஜுனனின் தீர்த்த யாத்திரையும் சரி நாக இனத்தவரினை குறித்த மிகப்பழமையான விவரணங்கள். அவை அந்த இனத்தவரை பண்பாடற்றவராக காட்டவில்லை. மாறாக குருவம்சத்தவருக்கு இணையான -சிலவிதங்களில் அதிலும் சிலபடிகள் மேலான- பண்பாடாகவேக் காட்டுகிறது. தமிழ்நாட்டிலும் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் முதல் வீரராகவ முதலியாரின் திருவேடகக் கலம்பகம் வரை வனவாசிகள் பண்பாட்டுடனும் மானுட மாண்புடனுமே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் ஐரோப்பியர் மிசிநரிகளாகவும் அவர்களே மானுடவியலாளராகவும் எழுதிய விவரணங்களிலேயே இத்தகைய எரோட்டிக்கான ‘அற்புத’ தரவுகளைக் காணமுடியும். ஏனெனில் பண்பாடற்ற காட்டுமிராண்டிகளும், பண்பட்டும் அடுத்துக் கெடுக்கும் சூழ்ச்சிக்கார விக்கிர ஆராதனையாளருமான நம்மை பண்படுத்தி ஒரே உண்மைக்கடவுளின் ஒரே உண்மை மதத்தையும் ஒரே பண்பாடான ஐரோப்பிய நாகரிகத்தையும், உபரியாக செவ்விந்திய ஆப்பிரிக்க இனமக்களின் இரத்தத்தை உறிஞ்சி வெளிவிடும் புளித்த ஏப்பமான மானுட உரிமையையும் நமக்கு பரப்பி அருள் செய்ய வந்திறங்கிய பேரருளாளர்கள் அல்லவா அவர்கள்!
“அருணாச்சலப் ப்ரதேசம் ,மீஜோராம், மற்றும் நாகாலாந்து மக்களின் முக அமைப்பும் நிறமும் அப்பட்டமான மங்கோலிய பழங்குடியென்று பறை சாற்றுவது. அவர்களது வாழ்க்கை முறைக்கும் மற்ற இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லை. கிறுத்துவ பாதிரிமார்கள் சென்று சிலரை மதம் மாற்றியிருந்தாலும் அவர்களது பழைய கடவுள்கள் பழக்கவழக்கங்களை பெருமையுடன் பின்பற்றிவருகிறார்கள். அருணாச்சலப் ப்ரதேசத்தில் இந்திய நிர்வாகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இலைமறை காய்மறையாக இந்து மதத்தை பரப்பப் பார்த்தபோது அதுவரை மிக சினேகிதமாக இருந்த அருணாச்சல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மெல்ல மெல்ல அங்கிருந்த அமைதி கெட்டது. மீஜோராமைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.” என்று சொல்லுகிற வாசந்தி அவர்கள் மீது மிகுந்த பரிதாபமே உண்டாகிறது. தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முற்போக்கு எழுத்தாளராக வெளியே அறியப்படுகிறவர் இந்த அம்மையார். புறத்தோற்றம்-இனத்தன்மை-பண்பாடு ஆகியவற்றை இணைத்து பேசுகிற காலாவதியான இனவியல் கோட்பாடுகளுக்கு வெளியே வராதவராக இத்தகைய எழுத்தாளர் இருப்பது பெரும் விரக்தியை உருவாக்குகிறது.

இப்பெண்ணின் நடனம் கிருஷ்ணனைக் குறிப்பதை தென்கோடி கன்னியாகுமரி கிராமத்துவாசி வரை புரிந்துகொள்வாரே!

‘தெளிவான மங்கோலாய்ட் முக அமைப்பு’ இந்திய வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை என அறிவிக்கிறதென்றால், தெளிவான மங்கோலாய்ட் முக அமைப்புகொண்ட மணிப்புரி நடனக்கலைஞர்கள் கிருஷ்ண ராசலீலையை நடனமாடுவதை என்னவென்பார் வாசந்தி?

சரி. அருணாச்சல பிரதேசத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்து தருமமும் சரி பௌத்த தருமமும் சரி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுவிட்டன. வைணவத்தை அருணாச்சால பிரதேசத்துக்கு எடுத்து சென்றவர் சங்கர தேவர். பௌத்தத்தை எடுத்துச் சென்றவர் பத்மசம்பவர், சிவ வழிபாடும் அங்குள்ள மக்களிடம் பின்னிப் பிணைந்து கிடப்பதை அங்கு ஒரு முறை சென்றால் காணலாம். இவற்றை தவிர சூரியனை தேவியாகவும் சந்திரனை தேவனாகவும் வழிபடும் தோனிபோலோ தருமமும் உள்ளது. இந்த தோனிபோலோ தருமத்தை சேர்ந்த ஆச்சாரியர்கள் பாரத விஜயம் செய்த போது நிகழ்ந்தவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி விவரிக்கிறது:” பாமங்ததோ தோனிபோலோ மார்க்கத்தை சார்ந்த ஒரு ஆச்சாரியருக்கு அருணாச்சல் பிரதேசத்தை கிறிஸ்தவமயமாக்க நடத்தப்படும் முயற்சி குறித்து எவ்வித ஐயமும் இல்லை. ஒரு வேளை அது அகில இந்திய அளவில் நடத்தப்படும் கிறிஸ்தவ திட்டம் என்று கூட அவர் நினைக்கிறார். ஆனால் அந்த குஜராத் கிராமத்தில் 200 பேர் அவர்களது கால்களைத் தொட்டு வணங்கிய போது தோனிபோலோ மார்க்க ஆச்சாரியர்களுக்கு அது ஒரு சந்தோஷமான ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர்களது அருணாச்சல பிரதேச கிராமத்தில் இன்றைய இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால் முதன் முதலாக அருணாச்சல பிரதேசத்தை விட்டு வெளியே வரும் தோனிபோலோ ஆச்சாரியர்களுக்கு இத்தனை இந்துக்கள் வாழ்கிறார்கள் என பார்த்தது உள்ள தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது.”[15]

அனிமிஸமா? தெய்வ வழிபாடா?

அருணாச்சல பிரதேசவாசிகள் தங்கள் மீது திணிக்கப்படும் மேற்கத்திய மானுடவியல் வகைப்படுத்துதலை எதிர்க்கிறார்கள்.

அருணாச்சல பிரதேசத்தில் வணங்கப்படும் தேவ-தேவியரின் திருவுருவங்கள். கிறிஸ்தவ இறையியலிலும் ஐரோப்பிய மானுடவியலிலும் இந்த தெய்வ வழிபாடுகள் – ‘அனிமிஸம்’, ‘ஸ்பிரிட் வழிபாடு’ என பகுக்கப்படும். ஆனால் பாரதத்தின் பண்பாட்டு பார்வையிலும் பாரத மானுடவியலிலும் இந்த இறைவழிபாடு மற்றெந்த தெய்வ வழிபாட்டுக்கு சிறிதும் குறைந்ததல்ல. உதாரணமாக சூரிய அன்னையை வழிபடும் ‘தோனி போலோ’ எனும் உபாசகர்கள் கிறிஸ்தவ-மேற்கத்திய மானுடவியலாளர்கள் தங்களை அனிமிஸ்ட்கள் என வகைப்படுத்துவதை கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் உபாசனையும் சத்தியமும் தெய்வீகமும் நிறைந்தது என கூறும் அவர்களின் ஒலி பாரதமெங்கும் ஒலிக்க இந்து அமைப்புகள் தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.கிறிஸ்தவ மதமாற்ற அபாயத்திலிருந்து தம் மக்களை காப்பாற்ற இந்து பண்பாட்டின் இத்தன்மை அவர்களுக்கு இயற்கையான அரணாக உள்ளது.

சிறிதே சிந்தியுங்கள். வாசந்தி போன்றவர்கள் ஏதோ இந்துக்கள் ‘கலாச்சார ஆணவம் இரத்தத்தில் கலந்தவர்கள்’ என்கிறார். ஆனால் இந்துக்கள் தோனிபோலோ ஆச்சாரியர்கள் காலைத் தொட்டு வணங்குகிறார்கள். இந்து கலாச்சாரம் மலைவாசி வனவாசி பண்பாடுகளை அழிக்கும் ஆக்கிரமிப்பாளன் போலவும் அதனால்தான் பிரச்சனையே என்பது போலவும் வாசந்தி அவர்கள் கூறுகிறார்க்ள். ஆனால் இந்துக்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பது அருணாச்சல பிரதேசத்தின் இயற்கையின் தெய்வீகத்தை வழிபடும் தருமத்தினருக்கு மன தைரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மையான நிலவரத்துக்கும் வாசந்தி அவர்கள் அளிக்கும் சித்திரத்துக்கும்தான் எத்தனை வேறுபாடு! ஏன் தோனிபோலோ தருமத்தினர் இந்துக்கள் பெரும்பான்மையாக இந்தியாவில் இருப்பது குறித்து ஆனந்தப்பட வேண்டும்?

அருணாச்சல பிரதேசத்தின் வழிபாட்டுத்தலங்கள் சில

பரசுராம குண்டம் போல பல நூற்றாண்டுகளாக விளங்கும் பிரபல தீர்த்த யாத்திரை தலங்களே அருணாச்சல பிரதேசத்தில் உண்டு. மேலும் அருணாச்சலம் எனும் பெயர் அது சூரிய உபாசனையின் தேசம் என பாரதத்தால் மதிக்கப்பட்டதைக் காட்டும். அருணாச்சல பிரதேசத்தின் மிக பிரசித்தி பெற்ற வழிபாடான தோனிப்போலோவில் சூரியன் தெய்வீக அன்னையாகவும் சந்திரன் தந்தையாகவும் வணங்கப்படுகின்றனர். சூரியப் பெண்மை நம்முள் விளங்கும் நல்லொளியையும் உயிர்களின் மூல சக்தியையும் குறிப்பதாகும். ‘அன்ன தோன்யி’ எனும் அன்னையாக சூரியன் வழிபடப்படுவதைக் காணலாம். இந்த வழிபாட்டு முறை இங்கு நிலவுவது இதர பாரத பிரதேசங்களிலும் தெரியும். எனவேதான் அருணாச்சலம் என அப்பிரதேசம் அழைக்கப்படுகிறது. (மிகப்பழமையான ரிக்வேத பாடல் ஒன்றில் சூரியன் பெண்ணாகவும் சந்திரனின் துணைவியாகவும் கருதப்படுகிறது. ரிக் வேத சம்ஹிதை: 10.7.1) அருணாச்சல பிரதேச நாட்டார் வழிபாட்டிலும் சிவ வழிபாடு விநாயக வழிபாடு ஆகியவை கலந்திருப்பதைக் காணலாம். முதல் படம்: சிறோ வனப்பகுதியில் சுயம்பு விநாயகராக அருணாச்சல பிரதேச மக்களால் வணங்கப்படும் வடிவம்; இரண்டாவது படம்: சீறோ வனப்பகுதியில் விநாயகருடன் இணைந்து சிவவடிவத்தை வணங்கும் அருணாச்சல மக்கள்; மூன்றாவது படம்: அன்னையாக வணங்கப்படும் சூரியன் – அன்ன தோய்னி. நான்காவது படம்: தோனிபோலோ வழிபாட்டு ஆராதனையில் பங்குபெறும் அருணாச்சல பிரதேசத்தவரும் வெளிமாநில இந்துக்களும்.மேலும் நாக்டே மக்கள் பரம வைணவர்கள் அவர்களுக்கு சங்கரதேவர் வைணவத்தை கொண்டு சென்றார். திபெத்திய பௌத்தம் பத்மசம்பவரால் கொண்டு வரப்பட்டது. இந்த வழிபாட்டு முறைகள் அனைத்துமே நூற்றாண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தில் பரஸ்பர வெறுப்பியல் இன்றி வாழ்கின்றன…மிசிநரி கிறிஸ்தவம் வரும்வரை.

இதாநகர், அக்டோபர் 17: அருணாசல பிரதேச மக்கள் நாகா பயங்கரவாதம் சீனாவினைக்காட்டிலும் பெரிய அபாயம் எனக் கூறுவது வேடிக்கையானதல்ல. மாநில, மாவட்ட அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் குறைந்தது இரண்டு மாவட்டங்கள் நாகா பயங்கரவாதிகளின் -NSCN (ஐஸாக்-முயிவா) பிடியில் வந்துள்ளதாக கூறுகின்றனர். திராப் மற்றும் சாங்க்லாங் ஆகிய இருமாவட்டங்கள் நாகலாந்தையும் மியான்மாரையும் ஒட்டி அமைந்தவை. இவை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன. இம்மாவட்ட அதிகாரத்தை தம் வசப்படுத்த பயங்கரவாதிகள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதை பயன்படுத்துகின்றனர். 1991 இல் 2000 பேர் இருந்த கிறிஸ்தவர்கள் இப்போது 200000 ஆகியுள்ளனர். ரங்பேரா மத சமுதாய அமைப்பின் பொது செயலரான லத்சம் கிம்குன் இந்த மதமாற்றங்கள் கட்டாய மதமாற்றங்கள் என கூறுகிறார். நாகா பயங்கரவாதிகள் தமது சூறையாடலின் போது ரங்பேரா கோவில்களை உடைத்து அங்கு வாழும் மக்களை கிறிஸ்தவர்களாக மாறும்படி கூறினார்கள் என்கிறார் அவர். சங்லாங்கில் உள்ள தான்யாங் மற்றும் காங்கோ கிராமங்களை மே 13 மற்றும் மே 15 அன்று வந்த நாகா பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மதம் மாற கூறினார்கள். ஆனால் மக்கள் மதம் மாற மறுத்தவுடன் அவர்கள் கோவில்களை தீ வைத்து எரித்தனர் என்கிறார் கிம்குன். காவல்துறை ஐஜி கூறியதாவது பயங்கரவாதிகளின் மிரட்டலால் பொதுவாக கட்டாய மதமாற்றங்களை மக்கள் புகார் செய்வதில்லை என்றபோதிலும் இப்போது மக்கள் துணிச்சலாக புகார்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர் எனக் கூறினார். ஆறு மிசிநரிகள் மக்களை மதம் மாற கட்டாயப்படுத்தியமைக்காக அண்மையில் பொதுமக்களின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டனர் என அவர் கூறினார். உள்ளூர் பத்திரிகை ஆசிரியர் அவ்வாறு மிசிநரிகள் விடுவிக்கப்பட காரணம் நாகாலாந்து அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தத்தினால்தான் என தெரிவித்தார். [16]

சீனாவில் அடக்குமுறைக்கு ஆளாகி அழிக்கப்படும் திபெத்திய பௌத்தம்

சீனாவில் அடக்குமுறைக்கு ஆளாகி அழிக்கப்படும் திபெத்திய பௌத்தம் சுதந்திரத்துடனும் வளத்துடனும் அருணாச்சல பிரதேசத்தில் காணப்படுகிறது. இதற்கும் பாரத பண்பாட்டுக்கும் தொடர்பில்லையா? தொப்புள்கொடி உறவில்லையா? முகத்தை பார்த்து சீனாவுக்கு தாரைவார்த்தால் இந்த மடலாயங்கள் அழிக்கப்படாதா? இந்த பண்பாட்டு பன்மையை காப்பாற்றுவதுதான் நம் இரத்தத்தில் ஊறிய பாரத பண்பாடே. இந்த பண்பாட்டுச்செழுமையை சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் அழிக்க நினைக்கும் சக்திகள் எவை?

இரண்டு சட்ட விரோதமான பயங்கரவாத நாகா அமைப்புகளான NSCN(IM) மற்றும் NSCN(K) ஆகியவை சங்லாங் மாவட்டத்தில் உள்ள ரிமா புதாக், திகாக் புதாக், மடோன்?சா மற்றும் லாங்சோங் கிராமங்களினைச் சார்ந்த பௌத்த மற்றும் சுதேச மத நம்பிக்கையாளர்களின் இடங்களைக் கோருவதுடன் கிறிஸ்தவத்திற்கு அவர்கள் மதம் மாற வேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பயங்கரவாத அமைப்புகள் கிராமவாசிகளுக்கு இரு தேர்வுகளை முன்வைக்கின்றன -ஒன்று கிறிஸ்தவத்தை தழுவுவது மற்றது மரண தண்டனை. …இந்த சட்டவிரோத அமைப்புகள் பல கிராமத்தவர்களை அஸாம் பாதுகாப்பு படையினருக்கு முக்கிய தகவல்களை அளிப்பதாக சித்திரவதை செய்கின்றனர். மறுபுறமோ பாதுகாப்பு படைகளும் உடை-உறையுள் அளிக்கும் சாக்கில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தமக்கு தெரிவிக்கக் கோரி மக்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கிராமத்து வாலிபர்கள் இந்த இரட்டை சித்திரவதையை தாங்காமல் ஊரைவிட்டு ஓடி விடுகின்றனர். அண்மையில் பூர்வாஞ்சால பௌத்த பிக்குகள் சங்கமும், பூர்வாஞ்சல் பௌத்தர்கள் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த பயங்கரவாத அமைப்புகளால் அமைதி விரும்பும் பௌத்த மக்களுக்கும் இதர சுதேசிய நம்பிக்கையாளர்களுக்கும் இழைக்கப்படும் மோசமான கொடுமைகள் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. [17]
மங்கோலாய்ட் முக அமைப்பினை கொண்டவர்கள் பாரத பண்பாட்டுடன் வாழ்வதை இமாச்சல பிரதேசம் முதல் அருணாச்சல பிரதேசம் வரை தங்கு தடையின்றி காட்டமுடியும்.

வட கிழக்கு பாரதத்தின் விடுதலைப் போராட்ட வீராங்கனை-2

ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய நாகராணி காய்டிள்யு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கொடூரமான முறையில் அவர்களது போராட்டத்தை ஒடுக்கிய ஆங்கிலேயர் அங்கே வைணவ மற்றும் இராமகிருஷ்ண இயக்க துறவிகள் செல்வதை தடை செய்து கிறிஸ்தவ மிசிநரிகளை மட்டுமே அனுப்பி அவர்களின் அனைத்து சமுதாய அமைப்புகளையும் அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றி குகிகளுடனான அவர்களின் உறவினை பகைமை மட்டுமே கொண்டதாகவும் இனவாத அடிப்படை உடையதாகவும் மாற்றி அமைத்து – இந்த பண்பாட்டு வேற்றுமையை உருவாக்கினார்கள். ஆங்கில அரசினால் தெருவில் கயிற்றால் அடித்து கட்டி இழுக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கபப்ட்டு சிறையில் வாடிய காய்டின்யு நாடு விடுதலை அடைந்து 14 ண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டதும் தமது சமுதாயம் முழுக்க முழுக்க உருமாற்றப் பட்டு தனக்கு அன்னியமாக்கப்பட்டதை கண்டு சிறையிலும் நிலைகுலையாத அவர் நிலைகுலைந்து போனார். ஜவகர்லால் நேருவாலேயே ராணி என மரியாதையுடன் அழைக்கப்பட்ட இப்பெண்குல திலகம் பாரத வனவாசி கல்யாண் கேந்திர அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவராவார்.

எனவே மதிப்பிற்குரிய எழுத்தாளரான வாசந்தி அவர்களிடம் என்னுடைய தாழ்மையான கோரிக்கை எல்லாம் ஒன்றுதான். ஏதோ உங்களுக்கு ஒரு அறிவுசீவி -முற்போக்கு ஒளிவட்டம் வேண்டும் என்பதற்காக அந்நிய மத ஆக்கிரமிப்பையும் அதன் பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்த்து போராடும் வடகிழக்கு மலைவாசி மற்றும் வனவாசி சமுதாயங்களையும் அவர்களின் தொலைக்கப்பட்ட வரலாற்றையும் குறித்து போலியான சித்திரத்தை உருவாக்காதீர்கள்.

முகங்களுக்கு அப்பால் அகத்தை நோக்குங்கள்.
இந்த அருணாச்சல குழந்தைகளின் உணர்வுகளில் பாரதியின் ஒலி உங்களுக்கு கேட்கிறதா?

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி


இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று வணங்கேனோ?

****
1.Dr.L.Khiangte, ‘Uniqueness and Specialities of Mizo Folk Literature’, ‘Traditional Customs and Rituals of North East India’-Vol-II பக்-.303-315, 2004
2.உதாரணமாக 30 ஜூலை 1746 இல் ப்ரான்ஸிஸ் டௌன்லேக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து The Gentleman’s Magazine அளித்த விவரணம் இது : After he had hung for six minutes, he was cut down, and, having life in him, as he lay on the block to be quartered, the executioner gave him several blows on the breast, which not having the effect designed, he immediately cut his throat : after which he took his head off then ripped him open, and took out his bowels and threw them into the fire which consumed them, then he slashed his four quarters, put them with the head into a coffin, and they were deposited till Saturday, August 2nd, when his head was put on Temple Bar, and his body and limbs suffered to be buried.” பின்னர் தலை தனியாக வெட்டி புதைக்கப்பட்டது. இதனை மிஸோக்களின் பண்பாட்டை இங்கிலாந்தில் போதிக்க வந்த ஒரு மிஸோ வீரர் பார்த்திருந்தால் கிறிஸ்தவ பண்பாடு ஒரு தலைவாங்கி உடல்-வாங்கி பண்பாடு என முடிவு செய்திருப்பார் அல்லவா?
3. Dr.R.Burhagohain, ‘Tlawngaihna: The living heritage of the Mizo’, ‘Traditional Customs and Rituals of North East India’ – Vol-I பக். .64-65
4.Branch YMA leader confesses to rape, The Newslink, 24 May 2005
5.Lalrinawmi Ralte, ‘Dance Theology’, http://www.mizobooks.com/dance_theology.htm
6.R.L.Thanzawna, ‘The Origin of Chapchar Kit’, http://mizoram.nic.in/about/oriofchapcharkut.htm
7.’When culture clashes with religion’, The Newslink 26 February 2007 “If resurrection of Chapchar Kut and its associated cultural activities is motivated by the desires for worldly pleasures and longing for the already discarded cultures which are pagan rituals should be avoided by any believer,” (Emphasis mine) the Synod executive committee of the Church said in a statement.
8. Lalthangfala Sailo, Bawih, Traditional Customs and Rituals of North East India,பக். 316-331, Vol-II, 2004
9.Mission statement, Mizo Christian Global network
10.தி ஆப்ஸர்வர், 8 பிப்ரவரி 1999
11.தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தின் 16 மார்ச் 2001 தேதியிட்ட அறிக்கை

12.பிடிஐ, 13 January 2005

13.David M. Thangliana, ‘Is A.R. Kohli good for the state or not?’, www.zoram.com [Mizo portal]

14.http://www.thinnai.com/?module=displaystory&story_id=20302232&edition_id=20030223&format=html
இந்த மூறை இப்போது குஜராத் வனவாசிகளிடம் கடைபிடிக்கப்படுவது என்றாலும். பொதுவான மிஷிநரி கையாளும் இனவாத-பிரிவினை அணுகுமுறைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். சென்ற நூற்றாண்டுகளிலும் பிரிவினை வாத இயக்க சித்தாந்தங்களிலும் இத்தகைய அணுகுமுறை எத்தகைய முக்கிய் இடத்தை வகித்திருக்கும் என்பது தெளிவாகும்.

15.இண்டியன் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 8, 1999
16.இண்டியன் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 18, 2003
17.அசாம் டிரிபியூன்- 22, ஆகஸ்ட், 2004

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்