கண்ணில் தெரியுதொரு தோற்றம்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

வாஸந்தி


வெள்ளையனை மூட்டைக்கட்டி அவனது நாட்டுக்கு அனுப்பிய கையுடன் நமது மண் பாரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறது.தனித்தனியாக மனத்தில் சுமக்கப் புறப்பட்ட பாரங்கள் மண்ணை அழுத்தும் விநோதம் அது. சுதந்திரம் கிடைக்கும் வரை நமது ஒரே குறிக்கோள் அன்னியனை விரட்டுவது. அதன் உன்னதமே நம்மைப் பிணைத்தது. அநேக இந்தியர்களுக்கு குஜராத் மாநிலம் எது என்பதோ அதன் மொழி என்ன என்பதோ தெரியாது. ஆனால் அந்த மாநிலத்தில் பிறந்து வேற்று மொழிபேசிய காந்தி என்பவரை தமது வாழ்வை உய்விக்க வந்த மகான் என்று புரிந்தது. அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உப்பு சத்தியாக்ரகத்தில் கலந்து கொள்ளவும் அன்னிய ஜவுளியைக் கொளுத்தவும் வெள்ளை துரைகளிடம் அடிவாங்கவும் துணிச்சல் வந்தது. அதை இன்று நினைத்துப் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கிறது. தேசியம் என்ற உணர்வும் பாரத நாடு என்ற ஐதிகமும் ஐரோப்பிய சித்தாந்தங்களின் இறக்குமதி என்று யாரும் நினைக்காமல் ஏற்பட்ட பிணைப்பு அது. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்த நிலையிலும் காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரை ஒரு வேள்வியில் ஈடுபட்டதான புனித உணர்வு அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

பெங்களூரில் நான் சிறுமியாக வசித்த மல்லேசுவரத்தில் ஒரு மிகப் பெரிய மைதானம் இருந்தது. தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். எந்தக் கடவுளின் உருவப்படமும் இருக்கவில்லை என்று நினைவு. நான் பள்ளிக்கு அப்போதுதான் செல்ல ஆரம்பித்திருந்தேன். ஆனால் மிகத் துல்லியமாக நினைவு இருக்கிறது. அந்த பிரும்மாண்ட மைதானமும் அதன் மரங்களின் இலைகளின் அசைவுகளும்,கூட்டிற்குத் திரும்பும் பட்சிகளின் இரைச்சலும் மைதானத்தின் ஒரு ஓரமாக விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஆண்களும் பெண்களும்- மிகத் துல்லியமாக இப்பவும் மனக்கண்ணில் விரிகிறது. ஆங்கிலத்திலோ கன்னடத்திலோ சொற்பொழிவு இருக்கும். பிறகு எல்லோரும் தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள். ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு நிச்சயம் உண்டு. அதுவும் தேசபக்தி பாடல் என்று நான் நினைத்தேன். குர்த்தா பைஜாமா அணிந்த வெட வெட என்ற ஒல்லியான உயரமான சிவந்த முகத்துடன் ஒருவர் கடைசியாக தீபம் ஏற்றி கணீரென்று “ஜெய் ஜகதீசஹரே” என்று ஆரம்பிக்க அவரைத் தொடர்ந்து எல்லோரும் பாடுவார்கள். எல்லோர் குரலிலும் இனம்புரியாத தாபமும் துக்கமும் துடிப்பும் இழையோடும். ஐந்து வயதில் அந்த உயரமான ஆளிடம் நான் காதல் கொண்டேன். அவரது முகத்தில் அருள் சுரந்தது. அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடக்கவேண்டும் போல் இருந்தது. அந்த வயதில் நான் காதல் வயப்படக்கூடியவர் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் உன்னதங்களைப்பற்றிப் பேசினார்கள். இலக்குகளைப் பற்றி நினைவூட்டினார்கள். வயது வித்யாசமில்லாத கூட்டம். பல மொழி.பல நிறங்கள். சுவர்கள் இல்லாத வெளி அது. மரங்கள் அடர்ந்த, பட்சிகள் மிகுந்த, வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளு குளு நந்தவனம் அது. பெங்களூரில் வசிக்கிறேன் என்பதே பெருமை. நாகரீகமும் நாசூக்கும் மிகுந்த பெங்களூர். உணர்ச்சிவசப்படாத சாந்தமே உருவான கன்னட மக்கள்.

இப்போது 2006. இடைப்பட்ட காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு மனிதர்கள் என்று ஜாகைகளும் பரிச்சியங்களும் ஆனபின் மீண்டும் பெங்களுருக்குக் குடியேறி இருக்கிறேன். பெங்களூர் மாறிவிட்டது. மற்ற நகரங்கள் மாறிப்போனது போல.
மாறவேண்டியது இயற்கையின் நியதி. மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். ஆனால் பெங்களூரின் சூரத்தனமான வளர்ச்சி என்னை நிலைகுலைய வைக்கிறது. கன்னடியர் உறங்கும்போது அவர்கள் இனம் காணாத அசுரன் ஒருத்தன் ஏற்படுத்திவிட்ட வளர்ச்சிபோல் தோன்றுகிறது. என்னைப் போலவே அரசு இயந்திரமும் இந்த வளர்ச்சியைக்கண்டு நிலைகுலைந்திருப்பதாகத் தெரிகிறது.பிதுங்கி வழியும் சாலைகளை செப்பனிடவோ சமாளிக்கவோ வகை தெரியாமல் திண்டாடுகிறது. ஓய்வு பெற்றவர்களின் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் ஓய்வில்லாத வாகனங்களின் இரைச்சல். பசுமை வனங்கள் இருந்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் காடுகள். பாதையின் அகலம் தெரியாமல் அடைத்து நிற்கும் ட் ரா·பிக் ஜாம்கள். தோட்டம் நிறைந்த பங்களாக்கள் போய் பளபளக்கும் பன்னாட்டு நிறுவன அலுவலகக் கட்டிடங்கள்.

ஆனால் தெருவில் கால் வையுங்கள். பெங்களுர் ஒரு கோலாகலத்தில் இருப்பது தெரியும். இந்தியாவின் இளைய தலைமுறை ஒட்டு மொத்தமாக இங்கு வந்து இறங்கியிருப்பதை உணர்வீர்கள். IT என்னும் தகவல் தொழில் நுட்பம் வீசும் மந்திரக்கோலால் இழுக்கப்பட்ட இளம் சிட்டுகள். உணவகங்கள் புதிதாக முளைத்தவண்ணம் இருக்கின்றன. புதிதாக மால்கள்…புதிது புதிதாக IT கம்பெனிகள். எல்லாவற்றிலும் இளைய கும்பல். தெரு அடைத்து கார்கள் ;மோட்டார் பைக்குகள்.

தமிழர் ,தெலுங்கர், வட இந்தியர் எல்லோரும் ஆண்களும் பெண்களும் பேதமில்லாமல், ஜீன்ஸ¤ம் டாப்புமாக கையில் கண்டிப்பாக ஒரு செல் போனில் பேசியபடி விரைந்து கொண்டு…Forum என்ற மிகப் பெரிய ஷாப்பிங் mallஇல் உள்ள muliplex அரங்கத்தில் கண்டிப்பாக சனிக்கிழமை இரவு சினிமா பார்த்து, தெருவுக்குத் தெரு சராசரியாக இருக்கும் பத்து உணவகத்தில் ஏதேனும் ஒன்றில் கொரித்துக்கொண்டு… வாழ்வே இவர்களுக்குக் கொண்டாட்டம் என்று படுகிறது. கன்னடியர் கன்னடியர் அல்லாதவர் என்று பிரித்துப் பார்க்கமுடியாத கலவை.

பெங்களூர் எப்பவுமே இப்படித்தான் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். கன்னடியர் என்றுமே தங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டதில்லை. வந்தாரை வாழவைக்கும் புகலிடமாகவே கர்நாடகம் இருந்து வந்திருக்கிறது. இங்கு புரட்சி வெடித்ததான சரித்திரம் இல்லை. சுதந்திரம் வருவதற்கு முன்பே தமிழகத்தில் சாதிப் புரட்சியும் மொழிப் போராட்டமும் வெடித்தது போல இங்கு ஏதும் நிகழவில்லை. குறைந்தபட்சம் மாணவர் இடையே கம்யூனிசம் கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை. [நக்ஸ்லைட் என்ற பெயரையே அப்போது கேள்விப் பட்டதில்லை.] இனம் ஜாதி மதம் என்ற பேத உணர்வு தோன்றியதில்லை. சந்தையிலும் காய்கறி மார்க்கெட்டிலும் கன்னடம் பேசப்படும். இங்கு வந்து செட்டில் ஆன தமிழர்களும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் கன்னடம் கற்றார்கள். கன்னட பழக்கவழக்கங்களை மேற்கொண்டார்கள். பண்டிகைக் காலங்களில் எங்கள் வீட்டு சமையலில் ஹோளிகேயும் பிஸிபேளா ஹ¤ளி அன்னாவும் அவசியமான அயிட்டங்கள். என்னுடைய அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் கன்னடம் படித்தவர்கள்.இங்கு வசித்த ஏராளமான தெலுங்கர்களும் கன்னடியருடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இந்த வகையான ஐக்கியப்படுத்திக் கொள்ளலே கன்னடியருக்கு உறுத்தாமல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இப்பவும் அவர்கள் இன்றைய பன்முகக்கும்பலில் முகம் தெரியாமல் இருப்பதுபோல் படுகிறது.

திடீரென்று ஒரு நாள் எரிமலை வெடித்தது. கர்நாடகத்தின்அபிமான சினிமா நட்சத்திரம் ராஜ் குமார் இறந்த அன்றும் மறுநாளும்
நகரம் முழுவதும் நடந்த அட்டகாசங்கள் யாரும் ,முக்கியமாக அரசு நிர்வாகம் எதிர்பாராதது. ராஜ் குமாரின் இறப்பு அவரது அபிமானிகளை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும் ,கொலைவெறி ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உண்மையில் அடி வயிற்றில் அமுக்கிவைத்திருந்த பழி உணர்வு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டதைப் போல் வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழ் நாட்டு எண் பலகை கொண்ட கார்கள் கொளுத்தப்பட்டன. IT நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கன்னடியருக்கு வெறி வந்ததைப் போல இருந்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல. அதைக் கட்டுப்படுத்த இயலாமல் நிர்வாகம் திக்கு முக்காடிப் போயிற்று. வட இந்திய தொலைக்காட்சி சானல்களில் இந்த வெறிஆட்டத்தை பார்த்த படித்த வட இந்தியர்கள் தென் இந்தியாவில் சினிமா நடிகர்களிடம் இருக்கும் பித்து விநோதமானது ,காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டில் இருப்பது போல கன்னடியர் சினிமா வெறி பிடித்தவர்கள் இல்லை. சினிமா நடிகர்களை தமிழ் நாட்டில் ஆராதிப்பது போல இங்கு ஆராதிக்கும் வழக்கம் இல்லை. ராஜ் குமாரின் அந்தஸ்து சந்தனக் கடத்தல் வீரப்பன் அவரை சிறை பிடித்துச் சென்றதும் பன்மடங்கு உயர்ந்தது. கன்னடியரின் கௌரவச் சின்னமானார் ராஜ் குமார். கன்னடியரின் அடையாளமாகிப் போனார். அவரைச் சிறை பிடித்தவன் தமிழன் என்பதால் தமிழர் , முக்கியமாகப் புதிதாக வேலைவாய்ப்பினால் பெங்களூர் வந்து சேர்ந்த, கன்னட மொழி தெரியாத தமிழர் ஒட்டுமொத்தமாக விரோதிகளானார்கள். அதற்கு முன்பே காவேரி பிரச்சினையினால் தமிழர் விரோதிகளாகியிருந்தார்கள்.

ஒரு முறை ஒரு கூட்டத்தில் ஜார்ஜ் ·பர்னாண்டஸ்ஸின் இளைய சகோதரர் மைக்கேல் ·பர்னாண்டஸ்ஸை சந்திக்க நேர்ந்தது. அவர் பல்லாண்டுகளாகக் கர்நாடக தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். அவரிடம் பேச்சு வாக்கில் நான் என் ஆதங்கத்தை தெரிவித்தேன். காவேரி ப்ரச்சினையில் கன்னடியர் கலவரத்தில் ஈடுபட்டதும், தமிழர்களை விரோதிகளாக பாவித்ததும் கன்னட இலக்கியவாதிகள் கூட இப்போது மொழி பேதம் பேசுவதும் எனக்கு ஆச்சர்யமாகவும் , கன்னடியரின் ஆளுமையே மாறிப்போய்விட்டது என்ற விசனமும் ஏற்படுவதாகச் சொன்னேன். என்னை சங்கடப்படுத்தத் தயங்குபவர் போல் அவர் நிதானமாகச் சொன்னார். ‘தமிழர்கள் இங்கு தங்கள் மாநிலத்து அரசியலை நுழைக்க ஆரம்பித்தபிறகுதான் பேதம் தோன்ற ஆரம்பித்தது ‘ என்றார். ‘முதலில் திமுக நுழைந்தது. தொழிற்சங்கங்களில் இருந்த தமிழர்கள் தி மு க வைச் சேர்ந்தவர்கள் என்று தனிக் கொடி வைத்துக் கொண்டார்கள். அதிகமாகத் தமிழர்கள் பணி செய்யும் இடங்களில் [முக்கியமாக இந்திய தொலைபேசி நிறுவனம் ] திமுக வென்றபோது கன்னடியர் உள்ளிட்ட எல்லா தொழிலாளர்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுக்குள் வைக்கத் தலைப்பட்டார்கள். ஆணவமாக நடந்துகொண்டார்கள்.அன்றிலிருந்தே விரோதம் துவங்கிவிட்டது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்கள் என்கிற பயம் வந்துவிட்டது கன்னடியருக்கு’ என்றார் ·பர்னாண்டஸ்.

ராஜ் குமாரின் மரணம் தொடர்ந்த வெறியாட்டம் மாநிலத்தின் அறிவுஜீவிகள் ,சமூகவியலாளர்கள் எல்லாரையும் சிந்திக்க வைத்தது. காரண காரியங்களை எல்லாருமாகப் புரட்டிப் புரட்டி விவாதித்தார்கள். மரியாதைத் தவறிப் பேசும் வழக்கமே இல்லாத கன்னடியனுக்கு[இன்றும்கூட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களோ, போலீஸோ, கடைக்காரர்களோ ஆகட்டும், மிக மரியாதையுடனேயே பேசுகிறார்கள்.வண்டியில் ஏறும்போதே கூடப் போட்டுக் கொடுங்க என்பதோ சில்லறை இல்லை என்று மழுப்புவதோ இங்கு இல்லை. மிச்சம் பத்து பைசாவாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுனர் வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்கும் அதிசயம் பெங்களூரில் தான் உண்டு.]

கண்மூடித்தனமான ரௌத்திரம் வந்தது எப்படி? யார்மீது அந்தக் கோபம்? எந்த இயலாமை அதற்குக் காரணமாகிப் போனது?
எல்லாரும் பிறகு ஒத்த கருத்தாய் சொன்னார்கள்—-‘ கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் அதன் விளைவாக அயல் மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கும் இளைஞர்கள் யுவதிகளின் வருகை, கண்ணுக்கெதிரில் விரியும் அவர்களது அமோகப் பொருளாதார வளர்ச்சி, அதன் நிரூபணங்களாகப் பெருகும் வாகனங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள், வாடகை விலைவாசி உயர்வு ஆகியவை லோக்கல் கன்னடியரை மிகவும் உறுத்துகிறது. வெளியிலிருந்து படையாக இளைஞர்கள் வராமல் இருந்தால் எல்லா வேலை வாய்ப்புகளும் கன்னடியருக்கு உரித்தாகியிருக்குமே? வேலையில்லாமல் திண்டாடும் அதிக படிப்பில்லாத இளைஞர்களுக்கும் தங்களுடைய இயலாமைக்கெல்லாம் காரணம் பிற மாநிலத்தவரே என்று ஆத்திரம். தங்களுடைய மாநிலத்தில் தாமே அந்நியப்பட்டு நிற்பது போல ஆகிவிட்டது. அந்த ஆத்திரம் தான் சொல்லத்தெரியாமல் இப்படிப்பட்ட தருணங்களில் வெடிக்கிறது…’

அமெரிக்காவின் பெரு நகரமான நியூ யார்க்கில் அமெரிக்க வெள்ளையரைவிட மற்ற இனத்தவர்கள்தான் அதிகம். வெள்ளையர் மைனாரிட்டியில் இருப்பவர்கள். அதுபோல பெங்களூரில் கன்னடியர் சிறுபான்மையினராகிப் போனது யாரும் யோசித்துப் பாராமல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. முன்பு வெளியில் இருந்து வந்தவர்கள்- படையாக வராததால்- இங்கிருக்கும் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போனார்கள். இப்போது கடந்த பத்து ஆண்டுகளாக வருவது படை . ஆங்கிலம் பேசும், ஜீன்ஸ் அணிந்த படை. சுய முன்னேற்றத்தைத் தவிர எந்தப் பாரம்பர்யத்தையும் மதிக்காத, கன்னடியருடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் இல்லாத கூட்டம். தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாத, எந்த தருணத்திலும் அடுத்த இன்னும் உயர்ந்த வேலைக்குத் தாவத் தயாராயிருக்கும் கும்பல்.

சமீபத்தில் இந்திய ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சந்திராவின் ‘Sacred Games’ புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்த போது
இங்கு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய வேலூரிலிருந்து வந்திருக்கும் ஒரு தமிழ் இளைஞரை சந்தித்தேன்.
மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் இருக்கிறார். தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்டவர். இங்கு வேலை பார்க்க வரும் மென்பொருள் இஞ்சினியர்களின் வாழ்வைப்பற்றிச் சொன்னபோது கவலைக் கொள்ளவேண்டிய மற்றொரு கோணம் தெரிந்தது.

[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி