வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்



தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை. தனது உரிமைக்காக தருமத்துக்காக தன் குடும்பத்திலிருந்து வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டு போராடும் பெண்ணின் கதை. இரண்டு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு போராடும் தாயின் கதை. காதல் கணவனை காணக்கூட முடியாமல் சிறைக்கம்பிகளின் அப்பால் நிற்க வைக்கப்பட்ட ஒரு தமிழ் பெண் தமிழ் பண்பாட்டினை விட்டுக்கொடுக்காமல் போராடிவரும் கதை.

ரேவதி தமது 26 வயதில் காதலித்து கரம் பற்றிய கணவர் சுரேஷ். கரம் பற்றி வேள்வித்தீ சுற்றி திருமணம் செய்த கணவருடன் சகதர்மிணியாக நடத்திய இல்லற அன்பின் விளைவு திவ்வியதர்ஷனி. தமிழ் பண்பாட்டில் பொங்கலும் கார்த்திகையும் கொண்டாடி வளர்ந்த ரேவதியின் பெயர் அதிகார ஆவணங்களில் தொடர்பேயில்லாமல் என இருந்தது. ஏனெனில் ரேவதியின் பெற்றோர் ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மாறினராம். ஆனால் ரேவதி வளர்ந்ததோ தன் பாட்டியிடம். அவரோ தமிழர் பண்பாட்டில் தோய்ந்தவர். நக்கீரரும் கணியன் பூங்குன்றனாரும் திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் என தொடங்கி தாயுமானவ சுவாமிகளும் வள்ளலாருமென வாழையடி வாழையாக வந்த தமிழ் பண்பில் வாழ்ந்தவர். நெறி தப்பி செல்லாமல் நல்தமிழர் வாழ்நெறியை தன் சந்ததிக்குப் புகட்டினார் அவர். அவ்வையாரும் புனிதவதியாரும் திலகவதியும் வளர்த்தெடுத்த நல்நெறியில் ரேவதி வளர்ந்தார். பின்னர்தான் அவர் தனது கணவனைக் கண்டு காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார். முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்’ ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் – குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள். ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது. என்ற போதிலும் சில மணிநேரங்கள் தனது காரில் சென்று அந்த இஸ்லாமிய இல்லத்தின் முன்னர் நிற்பார் சுரேஷ். அங்கு கம்பிகளுக்கு நடுவில் பிரிந்தவர் காண்பர் ஒரு சில நிமிடத்துளிகள். இந்த உணர்ச்சிபூர்வமான கண்ணீர் வரவழைக்கும் காட்சியை அல்ஜஸீரா தொலைக்காட்சி காட்டியது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கம்பிக்கதவுகளில் அடைப்புகள் வைக்கப்பட்டு வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை காணமுடியாமல் ஆக்கப்பட்டது. சுரேஷ் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த இஸ்லாமிய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்தார். ‘மனிதரை கொண்டு வந்து நிறுத்தும்’ அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர். 29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது? இந்நிலையில் ஆறுமாதங்கள் 180 நாட்கள் தாம் சிறை போன்ற அந்த ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லத்தில்’ நடந்த சித்திரவதைகளை மனரீதியிலான கொடுமைகளை விவரித்துள்ளார் ரேவதி. தலையில் முக்காடு அணிந்திட வற்புறுத்தப்பட்ட ரேவதி பசுமாமிசம் உண்ணும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதைவிடக் கொடுமை “நீ முஸ்லீமாக மாறாவிட்டால் உன் குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவோம். உன்னால் பார்க்கவே முடியாது.” என மனரீதியில் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர் மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள். ஆனால் ரேவதி கூறுகிறார்: “என் கணவர் எனக்காக வெளியே காத்திருப்பதை நான் காண்பேன், அவர் நிற்கும் இடத்துக்கு ஓடுவேன் ஆனால் அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த இல்லத்திலிருந்து பலரும் தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள். ஆனால் நான் ஓடவில்லை. நான் இந்து தருமத்தின் நற்பெயரை காட்டிட ஓடாமல் அங்கு (கொடுமைகளை) பொறுத்திருந்தேன்….என் பெயர் ரேவதியாகவே இருக்கும் இறுதிவரை….” தமிழ்பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு தமிழ் பெண்மணியின் கதை இது. கதை அல்ல இனி வரும் காலங்களில் இது மதவெறி பிடித்த அரசொன்றின் இராட்சத அதிகார பலத்தை எதிர்த்து நின்று போராடிய ஒரு ஒற்றைக் குடும்பத்தின் வீர காவியம். எமனிடமிருந்து கணவன் உயிரை மீட்ட சாவித்திரி, எமனிடம் தன் ஆயுளைக் கொடுத்து காதலியை மீட்ட ருரு, கணவனுக்காக நீதி கேட்டு அரசனையே எதிர்த்த கண்ணகி என காவிய மாந்தர்களில் வைத்து எண்ணப்பட வேண்டிய வீரப்பெண்மணியாக ஜொலிக்கிறார் ரேவதி. அவருக்காகவும் தன் குழந்தை திவ்விய தர்சனிக்காகவும் பகீரத முயற்சிகளுடன் தவமிருக்கிறார் சுரேஷ். இதில் ஆனந்தமான விஷயம் என்னவென்றால் குறைவாக என்றாலும் அதிசயிக்கத்தக்க அளவில் கணிசமான எண்ணிக்கையில் மலேசிய இஸ்லாமியர் (பெண்கள் உட்பட) ரேவதிக்காகவும் சுரேஷ¤க்காகவும் குரல் கொடுத்திருக்கின்றனர். ‘இஸ்லாமிய சகோதரிகள்’ எனும் பெண்கள் அமைப்பு ரேவதியின் விடுதலைக்காக அமைதி ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். ஹரீஸிப்ராஹிம் எழுதுகிறார்: “ஆக 29 வயதுடைய ஒரு பெண்மணியை ஒரு குழந்தையின் தாயை அவரது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உத்தரவிட்டுவிட்டீர்கள்? எந்த நீதியின் அடிப்படையில் அப்பெண்மணியின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்கிறீர்கள்? அது போக அவர் இஸ்லாமிய வகுப்புகளுக்கு வேறு செல்லவேண்டுமாம்.ஏன்? அவருக்கு மாட்டிறைச்சி பிடித்துப் போகவா? அடுத்து அவர் தன் கணவருடன் வாழ்வதையும் அவர் கோவிலுக்கு போவதையும் மலேசிய இஸ்லாமிய அதிகாரிகள் பின்னாலேயே சென்று தடுக்கப்போகிறார்களா? அப்படி அவர் தன் கணவருடன் கோவிலுக்கு போனால் என்ன செய்வீர்கள்? அடுத்தும் ஒரு 180 நாட்கள்? மேலும் அவருக்கு மாட்டிறைச்சி? … சுரேஷ் ரேவதி நீங்கள் உங்கள் இருவரின் அன்பில் ஒருவருக்கொருவர் மனமொத்து வாழ நான் பிரார்த்திக்கிறேன். அநீதிக்கு எதிராக எழுந்து போராடும் உங்கள் மனவலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். நீதிக்காகவும் சாந்தியுடன் வாழவும் நீங்கள் இருவரும் போராடும் இப்பாதையில் உங்களுக்கு வலிமை கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.” தமிழர் தமிழர் என்று பேசித்திரியும் நாம் என்ன செய்யப் போகிறோம்? நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தலைப்புச் செய்திகளாக்கி விற்பனை செய்து பிழைக்கும் நாளேடுகளுக்கு தர்மம் காக்க நடத்தப்படும் இந்த போராட்டம் கண்ணில் படாததன் காரணம்தான் என்ன? காதல், குடும்பம் என தனிமனித உரிமைகளை நசுக்கி மதம் வளர்க்கும் மதமும் ஒரு மதமா? என கேள்வி நம் அறிவிசீவிகளிடம் ஒரு முணுமுணுப்பாக கூட எழும்பாத அளவு மரத்துவிட்டதா அவர்கள் அற உணர்வு? ரேவதியும் சுரேஷ¤ம் திவ்வியதர்ஷனியும் இணைந்து வாழ காதலொருமித்து ஒரு குடும்பமாக மீண்டும் வாழ நாம் நம்மால் ஆனதை செய்வோம்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ரேவதி – சுரேஷ் சந்திப்பு:

1. இதிலிருக்கும் ஆன்லைன் பெட்டிஷனின் ஒரு கையெழுத்திடுங்கள்
http://www.petitiononline.com/2007Diva/petition.html
2. உங்கள் செனேட்டர், ஜனநாயக பிரதிநிதி மூலம் உங்கள் மலேசிய தூதரகத்துக்கு இக்குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட மானுட உரிமை மீறலை கண்டித்து கடிதம் எழுத சொல்லுங்கள். கையெழுத்து இயக்கம் நடத்துங்கள். அந்த கையெழுத்து கோரிக்கையின் ஒரு பிரதியை மலேசிய தூதரகத்துக்கு அனுப்புங்கள். இணையத்தில் வெளியிடுங்கள்.
3. இதற்கும் மசியாது எனில் மலேசிய சுற்றுலா துறையை புறக்கணிக்க விளம்பரங்கள் கொடுங்கள்.

மேலதிக விவரங்களுக்கு காண்க:
http://thieneleventhhour.blogspot.com/2007/07/revathi-thats-my-name-forever.html
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6278568.stm
http://www.othermalaysia.org/content/view/93/


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்